The duties of varnas! | Shanti-Parva-Section-294 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 121)(பராசர கீதை - 4)
பதிவின் சுருக்கம் : வர்ணங்களின் கடமைகளையும்; அறத்தைத் தக்கவைத்துக் கொள்ள வர்ணக்கடமைகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதையும் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்...
பராசரர் {ஜனகனிடம்}, "தாழ்ந்த வகையினர் {சூத்திர வர்ணத்தார்}, {பிராமண, க்ஷத்திரிய, வைசியர் என்ற} பிற மூன்று வகையினரிடம் தங்கள் வாழ்வாதாரத்தை அடைவதே முறையாகும். அன்புடனும், மதிப்புடனும் {பிற வர்ணத்தாரால்} கொடுக்கப்படும் அத்தகைய தொண்டு அவர்களை {சூத்திரர்களை} அறவோராக்கும்.(1) எந்தச் சூத்திரனின் மூதாதையராவது தொண்டில் ஈடுபடாமல் இருந்தாலும் கூட, அவன் (தொண்டைத் தவிர) பிற தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. உண்மையில், தொண்டையே அவன் தனது தொழிலாகக் கொள்ள வேண்டும்.(2) அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவர்கள் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ள நல்லோருக்கே துணைபுரிய வேண்டும், ஒருபோதும் தீயோருக்குத் துணை புரியக் கூடாது என்பது என்னுடைய கருத்து.(3)
கிழக்கு மலைகளில் {உதயப் பர்வதத்தில்} உள்ள தங்கமும், உலோகங்களும், சூரியனுக்கு அருகாமையில் இருப்பதால் பெரும் காந்தியுடன் சுடர்விடுவதைப் போலவே, தாழ்ந்த வகையினரும் நல்லோருடன் கொள்ளும் உறவால் காந்தியுடன் ஒளிர்வார்கள்.(4) வெள்ளைத் துணியானது சாயத்தின் நிறத்தை ஏற்கிறது. சூத்திரர்களின் வழக்கிலும் அவ்வாறே நடக்கிறது[1].(5) எனவே, ஒருவன் நல்ல குணங்கள் அனைத்துடனும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டுமேயன்றி ஒருபோதும் தீய குணங்களைப் பற்றக்கூடாது. இவ்வுலகில் மனிதர்களின் வாழ்நாள் மிகவேகமானதும், நிலையற்றதுமாகும்.(6)
[1] "அவர்கள் தாங்கள் தொண்டாற்றும் சமூகத்தின் நிறத்தை ஏற்கின்றனர். எனவே, அவர்கள் நல்லோருடன் வாழ்வதே விரும்பத்தக்கதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இன்பத்திலும், துன்பத்திலும் நல்லதை மட்டுமே ஈட்டும் ஞானியே உண்மையில் சாத்திரங்களை அவதானிப்பவனாகக் கருதப்படுகிறான்.(7) புத்தியுடைய மனிதன், அறம்பிறழ்ந்த எந்தச் செயலிலும் உயர்ந்த பயன்களே இருந்தாலும், அஃதை ஒருபோதும் செய்யமாட்டான். அத்தகைய செயல்கள் உண்மையில் நன்மையானதாகக் கருதப்படுவதில்லை.(8) சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான பசுக்களை அபகரித்து, (தகுந்த மனிதர்களுக்கே) கொடையாக அளித்தாலும் கூட, சட்டத்தை மீறும் அம்மன்னன் (அவன் செய்த செயலை உணர்த்தும் வகையிலான) வெற்று ஒலியைத் தவிர (அந்த ஈகையிலிருந்து) வேறு எந்தக் கனியையும் அடையமாட்டான். மறுபுறம் களவு எனும் பாவத்தையே அவன் ஈட்டுகிறான்.(9)
அண்டந்தழுவிய மதிப்புடைய தாத்ரி என்றழைக்கப்படும் ஒருவனைச் சுயம்பு {பிரம்மன்} முதலில் படைத்தான். தாத்ரி அனைத்து உலகங்களையும் தாங்கிப்பிடிப்பதில் ஈடுபடும் ஒரு மகனை {பர்ஜன்யனைப்} படைத்தான்[2].(10) அந்தத் தேவனை {பர்ஜன்யனை} வழிபடும் வைசியன், தன்னை ஆதரித்துக் கொள்வதற்காக உழவிலும், கால்நடை வளர்த்தலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். க்ஷத்திரியர்கள், பிற வகையினர் {பிற வர்ணத்தார்} அனைவரையும் பாதுகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பிராமணர்கள் அனுபவிக்க மட்டுமே வேண்டும்[3].(11) சூத்திரர்களைப் பொறுத்தவரையில் அவர்கள், வேள்விகளில் காணிக்கையளிக்கப்படும் பொருட்களைப் பணிவுடனும் நேர்மையுடனும் சேகரிக்கும் பணியிலும், வேள்விகள் செய்யப்பட்ட இடங்களையும் பீடங்களையும் தூய்மைப்படுத்துவதிலும் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு வகையினரும் இவ்வழியில் செயல்பட்டால் அறத்திற்கு எக்குறைவும் நேராது.(12)
[2] "தாத்ரியின் இந்த மகன் மேகங்களின் தேவனாவான் {பர்ஜன்யனாவான்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] கும்பகோணம் பதிப்பில், "தாதாவானவர் உலகங்களைத் தரிப்பதில் ஸமர்த்தரான (பர்ஜன்யரென்கிற) ஒரு புத்ரரைச் சிருஷ்டித்தார். வைச்யர் அவரைப் பூஜித்து மிகவும் செல்வப் பெருக்கைத் தரும் கிருஷி முதலியவற்றைச் செய்ய வேண்டும்; க்ஷத்திரியர்கள் காக்க வேண்டும்; பிராம்மணர்கள் டம்பமும், கபடமும், கோபமுமில்லாமல் ஹவ்யங்களைச் செய்து கொண்டு அனுபவிக்க வேண்டும்" என்றிருக்கிறது.
அறம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டால், பூமியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியடையும். பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தின் மகிழ்ச்சியைக் காணும் சொர்க்கத்தின் தேவர்கள் மகிழ்ச்சியால் நிறைகிறார்கள்.(13) எனவே தன் வகைக்கு விதிக்கப்பட்ட கடமைகளுக்கு ஏற்புடைய வகையில் பிற வகையினரைப் பாதுகாக்கும் மன்னன் மதிக்கத் தகுந்தவனாகிறான். அதே போல, சாத்திரக் கல்வியில் ஈடுபடும் பிராமணனும், செல்வமீட்டுவதில் ஈடுபடும் வைசியனும்,(14) குவிந்த கவனத்துடன் பிற மூன்று வகையினருக்கும் எப்போதும் தொண்டு செய்வதில் ஈடுபடும் சூத்திரனும் மதிப்புக்குத் தகுந்தவர்களாவர். ஓ! மனிதர்களின் தலைவா, வேறுவழிகளில் தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் ஒவ்வொரு வகையும் {வர்ணமும்} அறத்தில் இருந்து வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.(15
ஆயிரக்கணக்கான கொடைகளை ஒருபுறம் வைத்தாலும், அறம் சார்ந்து ஈட்டப்பட்டு, துன்பத்துடன் ஒருவன் கொடுக்கும் இருபது சோழிகளே கூட {சோகிகளேகூட / இருபது பணம் கூட} பெரும் நன்மையை விளைவிக்கும். {அவ்வாறெனில் அறம்சார்ந்து ஈட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கொடைகள் எவ்வளவு பெரிய நன்மைகளை விளைவிக்கும்?} (16) ஓ! மன்னா {ஜனகனே}, பிராமணர்களை முறையாக மதித்து அவர்களுக்குக் கொடைகளை அளிக்கும் மனிதர்கள், அந்தக் கொடைகளுக்கு ஒப்பான சிறந்த கனிகளை அறுவடை செய்வார்கள்.(17) கொடையேற்பவரைத் தேடி, உரிய முறையில் அவரைக் கௌரவித்துக் கொடையாளியால் கொடுக்கப்படும் கொடை மதிப்புமிக்கதாகும். வேண்டுதலின் பேரில் கொடையாளி கொடுக்கும் கொடை நடுத்தரமானதாகும்.(18)
எனினும், அவமானப்படுத்தும் வகையில் எந்த மதிப்புமில்லாமல் கொடுக்கப்படும் கொடையானது (தகுதியின் {புண்ணியத்தின்} அடிப்படையில்) மிகத் தாழ்ந்ததாகும். உண்மையைச் சொல்லும் தவசிகள் இதையே சொல்கின்றனர்.(19) வாழ்வெனும் பெருங்கடலில் மூழ்கும் மனிதன், பல்வேறு வழிகளின் மூலம் அந்தப் பெருங்கடலைக் கடக்கவே முனைய வேண்டும். உண்மையில், இவ்வுலகக் கட்டுகளில் இருந்து விடுபடும் வகையில் அவன் முயற்சிக்க வேண்டும்.(20) பிராமணன் தற்கட்டுப்பாட்டால் ஒளிர்கிறான்; க்ஷத்திரியன் வெற்றியாலும், வைசியன் செல்வத்தாலும்; சூத்திரன் (மூவகையினுக்கு) தொண்டு புரிவதில் {பணி செய்வதில்} உள்ள புத்திசாலித்தனத்தாலும் மகிமையில் ஒளிர்கிறார்கள்" என்றார் {பராசரர்}.(21)
சாந்திபர்வம் பகுதி – 294ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |