The superiority of being a human! | Shanti-Parva-Section-298 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 125) (பராசர கீதை - 8)
பதிவின் சுருக்கம் : மனிதப்பிறவியின் மேன்மை; அதற்குரிய பல தர்மங்கள் ஆகியவற்றைக் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்...
பராசரர் {ஜனகனிடம்}, "அர்ப்பணிப்பற்ற {குணமில்லாத} மனிதர்களுக்கு அவர்களின் தந்தைமார், நண்பர்கள், ஆசான்கள், ஆசான்களின் மனைவியர் ஆகியோரால் தங்கள் அர்ப்பணிப்பில் உள்ள தகுதிகளை {புண்ணியங்களை} அவர்களுக்குக் கொடுக்க இயலாது {இவர்கள் அவர்களுக்குப் பயன்படுவதில்லை}. அத்தகைய பெரியோரிடம் உறுமிக்க அர்ப்பணிப்பைக் கொண்டவர்களும், அவர்களுக்கு ஏற்புடையதைப் பேசுபவர்களும், அவர்களின் நன்மையை நாடுபவர்களும், நடத்தையால் அவர்களுக்கு அடங்கியிருப்பவர்களும் மட்டுமே அர்ப்பணிப்பின் தகுதியை {புண்ணியத்தை} அடைய முடியும். (1) தந்தையே தன் பிள்ளைகளுக்குத் தேவர்களில் உயர்ந்தவனாவான். தாயைவிட உயர்ந்தவன் தந்தை எனச் சொல்லப்படுகிறது. ஞானத்தை அடைவதே உயர்ந்த உடைமையாகக் கருதப்படுகிறது. புலன்நுகர் பொருட்களை அடக்கியவர்கள் (ஞானத்தை அடைவதன் மூலம்) உயர்ந்ததை (விடுதலையை {முக்தியை}) அடைகிறார்கள்.(2)
எந்த க்ஷத்திரிய இளவரசன், போர்க்களத்திற்குச் சென்று, அனைத்துத் திசைகளிலும் பறக்கும் நெருப்புக் கணைகளுக்கு மத்தியில் காயமடைந்து அவற்றால் எரிபடுகிறானோ, அவன் தேவர்களால் அடையப்படும் உலகங்களை நிச்சயம் அடைந்து, அங்கே முற்றிலும் நிறைவான சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிக்கிறான்.(3) ஓ! மன்னா, களைப்படைந்தவனையோ, அச்சமடைந்தவனையோ, ஆயுதம் இல்லாதவனையோ, அழுது கொண்டிருப்பவனையோ, போரிட விருப்பமில்லாதவனையோ, கவசம் தரிக்காதவனையோ, தேர்கள், குதிரை மற்றும் யானை இல்லாதவனையோ, போரிடும் முயற்சியை நிறுத்தியவனையோ, நோயுற்றவனையோ, இடத்தை இரந்து கேட்பவனையோ, இளம் வயதினனையோ, முதிர்ந்தவனையோ ஒரு க்ஷத்திரியன் தாக்கக்கூடாது.(4) கவசம், தேர்கள், குதிரை, யானை ஆகியவற்றைக் கொண்டவனும், தன் வகையை {வர்ணத்தைச்} சேர்ந்தவனும், தன் நிலைக்கு இணையான நிலையைக் கொண்டவனுமான ஒருவனுடனேயே ஒரு க்ஷத்திரியன் போரிட வேண்டும்.(5) இணையானவன் அல்லது மேம்பட்டவனின் கைகளில் நேரும் மரணமே மெச்சத்தக்கது; இழிந்தவன், அல்லது கோழை, அல்லது வறியவனின் கைகளில் நேர்வதல்ல {அவ்வாறு நேரும் மரணம் மெச்சப்படுவதில்லை}. இது நன்கறியப்பட்டதாகும்.(6) பாவி, அல்லது இழி பிறவி, அல்லது தீய நடத்தை கொண்டவன் கைகளில் நேரும் மரணம் மகிமையற்றதும், நரகத்திற்கு வழிவகுப்பதுமாகும்.(7)
வாழ்நாள் காலம் தீர்ந்தவனை எவனாலும் காப்பாற்ற முடியாது. அதே போலவே, வாழ்நாள் காலம் தீராதவனை எவனாலும் கொல்லவும் முடியாது.(8) ஒருவன் தன் அன்புக்குரிய பெரியோர்களை, (தன் நன்மைக்காக) இழி செயல்கள் செய்வதிலிருந்தும், பிறருக்கு தீங்கு செய்யும் செயல்களில் இருந்தும் தடுக்க வேண்டும். அவன் பிறரின் உயிரை எடுப்பதன் மூலம் தன் வாழ்நாளை நீட்டிக்க விரும்பக்கூடாது.(9) புனிதத் தலங்களில் வசித்து மனிதர்களின் கடமைகளை நோற்கும் இல்லறவாசிகள் அனைவரும், தங்களை உயிரைவிட நேரும்போது, புனித ஓடைகளின் கரைகளில் {ஆற்றங்கரைகளில்} தங்கள் உயிரை விடுவதே மெச்சத்தகுந்ததாகும்.(10) ஒருவனுடைய வாழ்நாள் காலம் தீர்ந்ததும், ஐந்து பூதங்களுக்குள் அவன் கறைந்துபோகிறான். சில வேளைகளில் (விபத்துகளின் மூலம்) இது திடீரென நேர்கிறது, சில வேளைகளில் (இயற்கையின்) விளைவுகளால் இது நேர்கிறது.(11)
உடலை அடைந்த ஒருவன், (மகிமையற்ற விபத்தின் மூலம் ஒரு புனிதத்தலத்தில்) அழிவை அடைந்தால், அதே வகையிலான மற்றொரு உடலை அடைகிறான். விடுதலையின் {முக்தியின்} பாதையில் இருந்தாலும் ஒரு பயணியாகும் அவன், ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்குச் செல்லும் மனிதனைப் போல மற்றொரு உடலை அடைகிறான்.(12) அத்தகைய மனிதன் அடையும் இரண்டாம் உடலுக்கு (புனிதத்தலத்தில் அவனது மரணம் நேர்ந்தாலும் கூட) விபத்தாலான அவனது மரணம் மட்டுமே காரணமாகும். அதற்கு இரண்டாம் காரணம் வேறேதும் இல்லை. உடல்படைத்த உயிரினங்கள் (புனிதத்தலங்களில் நேரும் விபத்தாலான மரணத்தின் விளைவால்) அடையும் புதிய உடலானது இருப்பிற்கு வந்து ருத்திரர்கள் மற்றும் பிசாசங்களோடு பற்று கொள்கிறது[1].(13) அத்யாத்மாவை அறிந்த கல்விமான்கள், தோலால் மறைக்கப்பட்டிருக்கும் பெருநரம்புகள், சிறு நரம்புகள், எலும்புக்கூட்டங்கள், தூய்மையற்ற பொருட்கள்கள், ஐம்பூதக் கலவைகள், புலன்கள், ஆசையில் பிறக்கும் புலன்நுகர் பொருட்கள் ஆகியவற்றின் திரட்டே உடல் என்று சொல்கிறார்கள். (உண்மையில்) அழகும், பிற சாதனைகளுமற்ற இந்தத் திரட்டே, முற்பிறவி ஆசைகளின் சக்தியால் மனித வடிவத்தை ஏற்கிறது.(14,15)
[1] "புனிதத்தலத்தில் இறக்கும் மனிதன் ருத்திரனாகவோ, பிசாசமாகவோ மறுபிறவியடைந்து, சிவனிடம் தான் கொண்ட நெருக்கத்தின் விளைவால் விரைவில் விடுதலையை {முக்தியை} அடைகிறான் என்று சொல்வதே இந்த ஸ்லோகத்தின் நோக்கமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உரிமையாளனால் {ஆன்மாவால்} கைவிடப்பட்ட உடல் அசைவற்றதாகவும், உயிரற்றதாகவும் {ஜீவனற்றதாகவும்} ஆகிறது. உண்மையில், அடிப்படை உட்பொருட்கள் தங்கள் தங்களுக்குரிய இயல்புகளுக்குத் திரும்பும்போது, உடலானது தூசியுடன் கலக்கிறது.(16) செயல்களின் சேர்க்கையால் உண்டான இந்த உடல், அதன் செயல்களால் தீர்மானிக்கப்பட்ட சூழ்நிலைகளிலேயே மீண்டும் தோன்றுகிறது. ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா {ஜனகா}, உண்மையில் எந்தச் சூழ்நிலைகளில் இந்த உடல் அழிவடைகிறதோ, அந்தச் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படும் மறுபிறவியில், அதன் முற்பிறவி செயல்களின் கனிகளை அஃது அனுபவிப்பதும், தாங்கிக் கொள்வதும் காணப்படுகிறது.(17) ஓ! மன்னா, ஜீவன், தான் வசித்திருந்த உடலின் அழிவுக்குப் பிறகு, உடனே வேறு உடலில் பிறப்பெடுப்பதில்லை.(18) பரந்த மேகத்தைப் போல அது சில காலம் வானத்தில் திரிந்திருக்கிறது. ஓ! ஏகாதிபதி, புதிய கொள்ளிடத்தை அடைந்தபிறகே அது மறுபிறப்பை எடுக்கிறது.(19)
ஆன்மாவானாது மனத்தைவிட உயர்ந்ததாகும். மனமானது, புலன்களைவிட உயர்ந்ததாகும். அசையும் {ஜீவனுள்ள} உயிரினங்களே படைக்கப்பட்ட பொருட்களில் முதன்மையானவையாகும்.(20) அசையும் உயிரினங்களிலும், இரு கால்களைக் கொண்டவை மேன்மையானவையாகும். இரண்டு கால் உயிரினங்களில் மறுபிறப்பாளர்கள் மேன்மையானவர்களாவர்.(21) மறுபிறப்பாளர்களில் விவேகிகள் மேன்மையானவர்களாவர். விவேகிகளில் அன்ம அறிவை அடைபவர்கள் மேன்மையானவர்களாவர். ஆன்ம அறிவை அடைந்தவர்களில் பணிவுள்ளவர்கள் மேன்மையானவர்களாவர்.(22) மனிதர்கள் அனைவரையும் பொறுத்தவரையில் பிறப்பை மரணம் பின்தொடர்கிறது. இது தீர்மானிக்கப்பட்டதாகும். சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களின் ஆளுகையில் உள்ள உயிரினங்கள், முடிவைக் கொண்ட செயல்களையே நாடுகின்றன.(23) சூரியன் வடக்கத்திய சாய்வில் {உத்தராயணத்தில்} இருக்கும் போதும், புனிதமான, மங்கலமான காலம் {முகூர்த்தம்} மற்றும் நட்சத்திரத்தின் போதும் அழிவை அடையும் மனிதன் அறவோனாகக் கருதப்படுகிறான்.(24) பாவங்கள் அனைத்தில் இருந்தும் தன்னைக் கழுவிக் கொண்டு, தான் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தையும் தன் சக்திக்குத் தக்க செய்து, எந்த மனிதனுக்கும் துன்பத்தைத் தருவதைத் தவிர்த்து, தானாக நேரும் வேளையில் மரணத்தை அடைபவன் அறவோனாவான்.(25)
நஞ்சு உட்கொண்டு, தூக்கிட்டு, எரித்துக் கொண்டு, கள்வர்களின் கரங்களில், விலங்குகளின் பற்களில் மரணத்தை அடையும் ஒருவன் மகிமையற்றவனாகச் சொல்லப்படுகிறான்.(26) அறவோர், மிகுந்த வேதனைகளைத் தரும் வகையிலான மன மற்றும் உடல் நோய்களால் பீடிக்கப்பட்டாலும், இத்தகைய மரணங்களை அடைவதில்லை.(27) ஓ! மன்னா, அறவோரின் உயிர்கள் {ஜீவன்கள்}, சூரியனைத் துளைத்துக் கொண்டு, பிரம்மலோகங்களுக்கு உயர்கின்றன. அறமற்றோர் மற்றும் பாவிகளாக இருந்தோரின் உயிர்கள் {ஜீவன்கள்} நடு உலங்களில் திரிந்து கொண்டிருக்கின்றன. பாவிகளின் உயிர்கள் அடி ஆழங்களில் {பாதாளங்களில்} மூழ்கிப் போகின்றன. (மனிதனுக்கு) ஒரேயொரு எதிரிதான் உண்டு, மற்றொன்றில்லை. ஓ! மன்னா, அந்த எதிரியானது அறியாமையாகும். அதனால் மூழ்கடிக்கப்பட்ட ஒருவன், அச்சம் நிறைந்த, மிக் கொடூரச் செயல்களைச் செய்ய வழி நடத்தப்படுகிறான்.(28,29) ஓ! மன்னா, எந்த எதிரி ஸ்ருதிகளில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளின் படி பெரியோர்களிடம் காத்திருப்பதன் {அவர்களுக்குப் பணிவிடை செய்வதன்} மூலம் ஒருவனின் சக்திக்குள் அடக்கப்பட வேண்டுமோ, எந்த எதிரியை நிலையான முயற்சிகளைத் தவிர வேறு எதனாலும் வெல்ல முடியாதோ, அந்த எதிரி {அறியாமை} ஞானம் எனும் கணைகளின் மூலம் மட்டுமே நொறுக்கப்படுகிறது.(30)
தகுதியை {புண்ணியத்தை} அடைய விரும்பும் மனிதன் முதலில் பிரம்மச்சாரியாகி வேதங்களைப் பயின்று, நோன்புகளை நோற்க வேண்டும். அதன் பிறகு அவன் இல்லற வாழ்வுமுறையில் {கிருஸ்தாஸ்ரமத்தில்} நுழைந்து வழக்கமான வேள்விகளைச் செய்ய வேண்டும். தன் குலத்தை நிறுவிய பிறகு அவன் காட்டுக்குள் நுழைந்து, தன் புலன்களை அடக்கி, விடுதலையை {முக்தியை} வெல்ல விரும்ப வேண்டும்.(31) ஒருவன் ஒவ்வொரு இன்பத்தையும் தவிர்ப்பதன் மூலம் தனது ஆண்மையை ஒருபோதும் நீக்கிக் கொள்ளக் கூடாது. ஒருவன் சண்டாளனாகவே ஆனாலும், அனைத்துப் பிறவிகளிலும் மனித நிலையே அவனுக்கு விரும்பத்தக்கதாகும்.(32) ஓ ஏகாதிபதி, உண்மையில் மனிதனானால் தகுதிமிக்கச் செயல்களின் மூலம் ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள முடியும் என்பதால் அந்த வகை (மனிதப்) பிறப்பே முதன்மையானதாகும்.(33) மனித நிலையில் இருந்து வீழ்ந்து விடக்கூடாது என்பதாலே மனிதர்கள் ஸ்ருதிகளின் அதிகாரத்தால் வழிநடத்தப்படும் அறச்செயல்களை எப்போதும் செய்கிறார்கள்.(34) அடைதற்கரிய மனித நிலையை அடைந்த எந்த மனிதன், வன்மத்தில் ஈடுபட்டு, அறவோரை அவமதித்து, ஆசையின் வசப்படுகிறானோ, அவன் நிச்சயம் தன் ஆசைகளால் வஞ்சிக்கப்படுவான்.(35) எந்த மனிதன் அன்பால் வழிநடத்தப்பட்ட கண்களுடன் அனைத்து உயிரினங்களையும் அன்பால் வளர்க்கத்தகுந்தவை என்று கருதுவானோ, எவன் அனைத்து வகைச் செல்வங்களையும் அலட்சியம் செய்வானோ,(36) எவன் அவற்றுக்கு ஆறுதல் அளித்து, உணவளித்து, ஏற்புடைய வார்த்தைகளைச் சொல்வானோ, எவன் அவற்றின் மகிழ்ச்சியில் மகிழ்ந்தும், துயரில் துன்புறுவானோ, அவன் மறுமையில் ஒருபோதும் துன்புறமாட்டான்.(37)
ஒருவன் சரஸ்வதி {சரஸ்வதி ஆறு}, நைமிசக்காடு {நைமிசவசன்}, புஷ்கரை நீர்நிலைகள் மற்றும் உலகில் உள்ள புனிதத்தலங்கள் அனைத்திற்கும் சென்று, கொடைகளை அளித்து, துறவைப் பயின்று, இனிய குணங்களைக் கொண்டு, நீராடல்கள் மற்றும் தவங்களின் மூலம் தன் உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.(38) தங்கள் வீடுகளுக்குள்ளேயே மரணத்தை அடையும் மனிதர்களின் உடல்களுக்கு ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டும். சுடலைக்கு {சுடுகாட்டுக்கு} வாகனங்களின் எடுத்துச் செல்லப்படும் அவர்களது உடல்கள் {சடலங்கள்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட தூய்மைச் சடங்குகளின் படி அங்கே எரிக்கப்பட வேண்டும்.(39) அறச்சடங்குகள், நன்மைக்கான விழாக்கள், வேள்விகளைச் செய்வது, பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, கொடைகள், தகுதிமிக்கப் பிற செயல்களைச் செய்வது, இறந்து போன தன் முன்னோர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் தன் சக்திக்குத்தக்க செய்வது ஆகிய அனைத்தையும் ஒருவன் தன் {ஆன்ம} நன்மைக்காகவே செய்கிறான்.(40) ஓ !மன்னா, ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்களும், பிற சாத்திரங்களும், களங்கமற்ற செயல்களைக் கொண்ட ஒருவனின் நன்மைக்காகவே உண்டாகின" என்றார் {பராசரர்}".(41)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா, இவை அனைத்தும் விதேஹர்களின் ஆட்சியாளனுடைய {ஜனகனின்} நன்மைக்காக உயர் ஆன்ம தவசியால் {பராசரரால்} அவனுக்குச் சொல்லப்பட்டவையாகும்".(42)
சாந்திபர்வம் பகுதி – 298ல் உள்ள சுலோகங்கள் : 42
ஆங்கிலத்தில் | In English |