Showing posts with label துரோணாபிஷேக பர்வம். Show all posts
Showing posts with label துரோணாபிஷேக பர்வம். Show all posts

Tuesday, April 19, 2016

துரோணரைத் தடுத்த அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 016

Arjuna checked Drona! | Drona-Parva-Section-016 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 16)

பதிவின் சுருக்கம் : கர்ணனின் மகன் விருஷசேனனுக்கும், நகுலனின் மகன் சதானீகனுக்கும் இடையில் நடந்த போர்; சாத்யகியின் மகன் யுகந்தரன் துரோணரால் வீழ்த்தப்பட்டது; வியாக்ரதத்தன், சிங்கசேனன் ஆகியோர் துரோணரால் கொல்லப்பட்டது; யுதிஷ்டிரனைப் பிடிக்க முயன்ற துரோணர்; அதைத் தடுத்த அர்ஜுனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படை அதீதமாகப் பிளக்கப்பட்டதைக் கண்ட வீர விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களின் மாய சக்திகளை வெளிப்படுத்திக் கொண்டு தனியொருவனாகவே அதை {அந்தப் படையைப்} பாதுகாத்தான். அந்தப் போரில் விருஷசேனனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள் அனைத்துத் திசைகளிலும் சென்று, மனிதர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளைத் துளைத்தன. அவனால் ஏவப்பட்ட சுடர்மிகும் பிரகாசம் கொண்ட வலிமைமிக்கக் கணைகள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோடை காலத்தின் சூரியக் கதிர்களைப் போல ஆயிரக்கணக்கில் சென்றன. அவற்றால் பீடிக்கப்பட்டு நசுக்கப்பட்ட தேர்வீரர்கள் மற்றும் குதிரை வீரர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் முறிந்த மரங்களைப் போலத் திடீரெனக் கீழே பூமியில் விழுந்தனர்.


வலிமைமிக்கத் தேர்வீரனான விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளை அப்போரில் ஆயிரக்கணக்கில் வீழ்த்தினான். களத்தில் அச்சமற்ற வகையில் திரியும் அந்தத் தனி வீரனைக் கண்ட (பாண்டவப் படையின்) மன்னர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். நகுலனின் மகனான சதானீகன் விருஷசேனனை நோக்கி விரைந்து, உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பத்து கணைகளால் அவனைத் {விருஷசேனனைத்} துளைத்தான்.

எனினும், கர்ணனின் மகன் {விருஷசேனன்}, அவனது {சதானீகனின்} வில்லை வெட்டி, அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். அதன்பேரில், திரௌபதியின் பிற மகன்கள், தங்கள் சகோதரனை மீட்க விரும்பி அவனை {சதானீகனை} நோக்கி விரைந்தனர். விரைவில் அவர்கள் தங்கள் கணை மழையால் கர்ணனின் மகனை {விருஷசேனனை} மறைத்தனர். (கர்ணனின் மகனை) இப்படித் தாக்கும் அவர்களை எதிர்த்து, துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்) தலைமையிலான தேர் வீரர்கள் பலர் விரைந்தனர். அவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலப் பல்வேறு வகைகளிலான கணைகளைக் கொண்டு அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்களை விரைவில் மறைத்தனர். அதன் பேரில், பாண்டவர்கள், தங்கள் மகன்களின் மீது கொண்ட பாசத்தால், அப்படித் தாக்குபவர்களை விரைவாக எதிர்கொண்டனர்.

பிறகு, உமது துருப்புகளுக்கும், பாண்டவர்களின் துருப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது; மிகக் கடுமையானதாகவும், தேவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பாக மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. இப்படியே, வீரர்களான கௌரவர்களும், பாண்டவர்களும், சினத்தால் தூண்டப்பட்டு (மூர்க்கமாக) ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, பழைய குற்றங்களுக்காக ஒருவர் மேல் ஒருவர் கொண்ட பகையுடன் போரிட்டனர். (அவர்களைத் தூண்டும்) கோபத்தின் விளைவாக அளவற்ற சக்தியுடன் தென்பட்ட அந்த வீரர்களின் உடல்கள், வானத்தில் போரிடும் கருடனுக்கும், (வலிமைமிக்க) நாகங்களுக்கும் ஒப்பானவையாக இருந்தன.

பீமன், கர்ணன், கிருபர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சாத்யகி ஆகியோரைக் கொண்ட அந்தப் போர்க்களம், யுக முடிவில் அனைத்தையும் அழிக்க உதிக்கும் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. வலிமைமிக்க எதிரிகளுடன் போரில் ஈடுபடும் வலிமைமிக்க மனிதர்களுக்கு இடையில் நடப்பதும், அனைவரும் மிகக் கடுமையாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதுமான அந்தப் போர், பழங்காலத்தில் தானவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பாக இருந்தது. பிறகு, பொங்கும் கடலைப் போன்ற உரத்த முழக்கங்களுடன் கூடிய யுதிஷ்டிரனின் படை, உமது படையின் பெரும் தேர்வீரர்கள் தப்பி ஓடியதால், உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினர். (கௌரவப்) படை உடைந்ததையும், எதிரியால் அதீதமாகச் சிதைக்கப்பட்டதையும் கண்ட துரோணர், “வீரர்களே, நீங்கள் ஓட வேண்டாம்” என்றார் [1].

[1] வேறொரு பதிப்பில் இந்த வரிக்குப் பிறகும் சில விவரங்கள் இருக்கின்றன, அது பின்வருமாறு: “துரோணருக்குக் கோபம் மேலிட்டது. அம்பறாத்தூணியில் இருந்து அம்பை எடுத்து வில்லின் நாணை உருவித் துடைத்துப் பெரிதான அம்பையும் வில்லையும் கையில் கொண்டு தேரோட்டியைப் பார்த்துப் பின்வருமாறு சொன்னார், “தேரோட்டியே! பிரகாசமான வெள்ளைக்குடை கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்} இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. துரியோதனனின் இந்தப் படை பலவாறு பிளக்கப்படுகிறது. நான் யுதிஷ்டிரனைத் தடுத்து இந்தப் படையை நிலைநிறுத்துவேன். 

ஐயா, போரில் கணை மழையைப் பொழியும் என்னைப் பாண்டவர்களும், சோமகர்களோடு கூடிய மத்ஸ்ய மன்னர்கள் அனைவரும், பாஞ்சால மன்னர்களும் எதிர்க்க சக்தியற்றவர்களாவர். அர்ஜுனனோ என்னிடம் இருந்து பெரும் ஆயுதங்களைப் பெற்றிருக்கிறான். ஐயா, பீமனாவதும், சாத்யகியாவது என்னை எதிர்க்கவல்லவர்களல்ல. பீபத்சுவோ என்னால் வில்லாளிகளுள் சிறந்த நிலைமையைப் பெற்றான். பார்ஷதனான திருஷ்டத்யும்னனும் என் ஆயுதங்களை அறிந்திருக்கிறான். ஐயா, வெற்றியை விரும்புபவன் உயிரைக் காத்துக் கொள்ள இது சமயமன்று. சொர்க்கத்தை முன்னிட்டுக் கொண்டு புகழக்காகவும், வெற்றிக்காவும் செல்வாயாக” என்றார். 

இவ்வாறு தூண்டப்பட்ட தேரோட்டி உடனே அஸ்வஹ்ருதயமெனும் மந்திரத்தைக் கொண்டு குதிரைகளை மந்திரித்து வரூதத்தோடு கூடியதும், காந்தி பொருந்தியதும் மிக்கப் பிரகாசமுள்ளதுமான தேரில் துரோணரைக் கொண்டு சென்றான். அந்தத் துரோணாச்சாரியரைக் கரூசர்களும், மத்ஸ்ய நாட்டு மன்னர்களும், சாத்வர்களோடு கூடிய சேதி நாட்டு மன்னர்களும், பாஞ்சாலர்களோடு கூடிய பாண்டவர்களும் ஒன்று சேர்ந்து சூழ்ந்து கொண்டனர்”

பிறகு, சிவப்புக் குதிரைகளை உடைய அவர் (துரோணர்), கோபத்தால் தூண்டப்பட்டு, நான்கு {4} தந்தங்களைக் கொண்ட (கடும்) யானையொன்றைப் போலப் பாண்டவப் படைக்குள் ஊடுருவி, யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தார். அப்போது, யுதிஷ்டிரன், கங்க இறகுகள் கொண்ட கூரான கணைகள் பலவற்றால் ஆசானை {துரோணரைத்} துளைத்தான்; எனினும், துரோணர், யுதிஷ்டிரனின் வில்லை வெட்டி, அவனை நோக்கி மூர்க்கமாக விரைந்தார். அப்போது, யுதிஷ்டிரனின் தேர் சக்கரங்களைப் பாதுகாத்தப் பாஞ்சாலர்களின் புகழ்பெற்ற இளவரசன் குமாரன், அப்படி முன்னேறி வரும் துரோணரைப் பொங்கும் கடலை வரவேற்கும் கரையைப் போல வரவேற்றான். பிராமணர்களில் காளையான அந்தத் துரோணர் குமாரனால் தடுக்கப்பட்டதைக் கண்டு, “நன்று, நன்று!” என்ற கூக்குரலுடன் கூடிய சிங்க முழக்கங்கள் அங்கே கேட்கப்பட்டன.

பிறகு அந்தப் பெரும் போரில் சினத்தால் தூண்டப்பட்ட குமாரன், ஒரு கணையால் துரோணரை மார்பில் துளைத்து, சிங்க முழக்கங்களைச் செய்தான். வலிமைமிக்கவனும், பெரும் கர நளினம் கொண்டவனும், களைப்பை வென்றவனுமான குமாரன் இப்படியே போரில் துரோணரைத் தடுத்து, பல்லாயிரக்கணக்கான கணைகளால் அவரைத் துளைத்தான். பிறகு அந்த மனிதர்களில் காளை (துரோணர்), யுதிஷ்டிரனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பவனும், அறம்சார்ந்த நோன்புகளை நோற்பவனும், மந்திரங்களிலும், ஆயுதங்களிலும் சாதித்தவனுமான அந்த வீரன் குமாரனைக் கொன்றார் [2].

[2] வேறொரு பதிப்பில் துரோணர் குமாரனைக் கொன்றதாகக் குறிப்பில்லை நன்றாக அடித்ததாகவே இருக்கிறது.

பிறகு (பாண்டவப்) படைக்கு மத்தியில் ஊடுருவி, அனைத்துப் பக்கங்களிலும் திரிந்த மனிதர்களில் காளையான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} உமது துருப்புகளைப் பாதுகாப்பவரானார். சிகண்டியைப் பனிரெண்டு {12} கணைகளாலும், உத்தமௌஜசை இருபதாலும் {20}, நகுலனை ஐந்தாலும் {5}, சகாதேவனை ஏழாலும் {7}, யுதிஷ்டிரனை பனிரெண்டாலும் {12}, திரௌபதியின் (ஐந்து) மகன்கள் ஒவ்வொருவரையும் மூன்றாலும் {3}, சாத்யகியை ஐந்தாலும் {5}, மத்ஸ்யர்களின் ஆட்சியாளனை பத்து {10} கணைகளாலும் துளைத்து, அந்தப் போரில் மொத்த படையையும் கலங்கடித்து, (பாண்டவ) வீரர்களில் முதன்மையானோரை எதிர்த்து ஒருவர் பின் ஒருவராக விரைந்தார். பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரனைப் பிடிக்க விரும்பி அவனை எதிர்த்து முன்னேறினார்.

அப்போது {சாத்யகியின் மகன்} யுகந்தரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புயலால் கலங்கடிக்கப்பட்டு ஆத்திரத்தோடு கூடிய கடலுக்கு ஒப்பாகச் சினத்தால் நிறைந்திருந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகனை {துரோணரைத்} தடுத்தான். எனினும், நேரான கணைகள் பலவற்றால் யுதிஷ்டிரனைத் துளைத்த அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, ஒரு பல்லத்தினால் யுகந்தரனை அவனது தேர்த்தட்டிலிருந்து விழச் செய்தார்.

பிறகு, விராடன், துருபதன், கைகேய இளவரசர்கள், சாத்யகி, சிபி, பாஞ்சாலர்களின் இளவரசனான வியாக்ரதத்தன், வீரமான சிங்கசேனன் ஆகியோரும் இன்னும் பிறரும், யுதிஷ்டிரனை மீட்க விரும்பி, எண்ணிலா கணைகளை இறைத்து, துரோணரின் வழியில் இடையூறு செய்த படி அனைத்துப் பக்கங்களிலும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

பாஞ்சாலர்களின் இளவரசனான வியாக்ரதத்தன், கூர்முனை கொண்டு ஐம்பது {50} கணைகளால் துரோணரைத் துளைத்ததால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் பெருங்கூச்சலிட்டன. சிங்கசேனனும், அந்த வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரை விரைவாகத் துளைத்து, வலிமைமிக்கத் தேர்வீரர்களின் இதயங்களை அச்சத்தால் பீடிக்கச் செய்து மகிழ்ச்சியால் முழக்கமிட்டான்; பிறகு தன் கண்களை அகல விரித்த துரோணர், தன் வில்லின் நாணைத் தேய்த்து, தன் உள்ளங்கைகளைத் தட்டி பேரொலியை உண்டாக்கி பின்னவனை {சிங்கசேனனை} எதிர்த்து விரைந்தார். பிறகு, தன் ஆற்றலை வெளிப்படுத்திய பரத்வாஜரின் வலிமைமிக்க மகன் {துரோணர்}, இரண்டு பல்லங்களால் காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சிங்கசேனன் மற்றும் வியாக்ரதத்தன் ஆகிய இருவரின் தலைகளை அவர்களது உடல்களிலிருந்து துண்டித்தார்.

தன் கணைமாரிகளால் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறரையும் பீடித்த அவர் {துரோணர்}, அனைத்தையும் அழிக்கும் காலனைப் போலவே யுதிஷ்டிரனின் தேருக்கு முன்பாக நின்றார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முறையான நோன்புகளைக் கொண்ட அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அருகில் இப்படி நின்ற போது, “மன்னர் கொல்லப்பட்டார்” என்ற அளவுக்கு யுதிஷ்டிரனின் படை வீரர்களுக்கு மத்தியில் ஆரவாரம் கேட்கப்பட்டது. அங்கே இருந்த வீரர்கள் அனைவரும், துரோணரின் ஆற்றலைக் கண்டு, “இன்று திருதராஷ்டிரனின் அரச மகன் {துரியோதனன்} வெற்றி மகுடம் சூட்டப்படுவான். இந்தக் கணமே யுதிஷ்டிரனைப் பிடிக்கும் துரோணர், மகிழ்ச்சியால் நிறைந்து நம்மிடமும் துரியோதனனின் முன்னிலைக்கும் வரப் போகிறார்” என்றனர்.

உமது வீரர்கள் இத்தகு பேச்சுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, குந்தியின் மகன் (அர்ஜுனன்), தன் தேரின் சடசடப்பொலியால் (ஆகாயத்தை) நிறைத்தபடி விரைவாக அங்கே வந்தான். அப்படி அவன் {அர்ஜுனன்} வந்த போதே, அவன் செய்த படுகொலைகளால் குருதியெனும் நீருள்ளதும், தேர்களெனும் சுழல்களுள்ளதும், துணிவுமிக்க வீரர்களின் எலும்புகள் மற்றும் உடல்கள் நிறைந்ததும், இறந்தோரின் ஆவிகள் வசிக்கும் இடத்திற்கு உயிரினங்களைச் சுமந்து செல்வதுமான ஒரு நதியை அங்கே உண்டாக்கினான். குருக்களை முறியடித்த படி அங்கே வந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கணைகளின் மாரிகளெனும் நுரை கொண்டதும், ஈட்டிகள் மற்றும் பிற ஆயுதங்களின் வடிவிலான மீன்களால் நிறைந்ததுமான அந்த நதியை வேகமாகக் கடந்தான். அந்தக் கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்}, அடர்த்தியான கணைகளின் வலையால் துரோணரின் படைப்பிரிவுகளை மறைத்து (துரோணரைப் பின் தொடர்வோரின்) உணர்வுகளைக் குழப்பியபடி திடீரென அங்கே வந்தான்.

இடைவிடாமல் வில்லின் நாணில் தன் கணைகளைப் பொருத்தி, விரைவாக அவற்றை ஏவிய குந்தியின் புகழ்பெற்ற மகனின் {அர்ஜுனனின்} இந்தச் செயல்கள் இரண்டுக்கும் இடையில் காலங்கழிதல் எதையும் எவனால் காண முடியவில்லை. அடர்த்தியான கணைகளின் திரள் ஒன்றாகவே அனைத்தும் தெரிந்ததால், அதற்கு மேலும் (நான்கு முக்கிய) திசைகளுக்கோ, மேலுள்ள ஆகாயத்துக்கோ, பூமிக்கோ எந்த வேறு பாட்டையும் காண முடியவில்லை. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, தன் கணைகளின் மூலம் அடர்த்தியான இருளை உண்டாக்கியபோது, அந்தப் போரில் எதையும் காண முடியவில்லை. சரியாக அப்போதே, புழுதி மேகத்தால் சூழப்பட்ட சூரியனும் மறைந்தான். அதற்கு மேலும், நண்பனுக்கும் எதிரிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண முடியவில்லை.

பிறகு, துரோணரும், துரியோதனனும் தங்கள் துருப்புகளைப் பின் வாங்கச் செய்தனர். எதிரி அச்சங்கொண்டதையும், தொடர்ந்து போரிட விரும்பாததையும் உறுதி செய்து கொண்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, மெதுவாகத் தன் துருப்புகளைப் பின்வாங்கச் செய்தான். பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், பாஞ்சாலர்களும் சூரியனைப் புகழும் முனிவர்களைப் போலத் தங்கள் இனிய உரைகளால் பார்த்தனை {அர்ஜுனனைப்} புகழ்ந்தனர்.

இப்படித் தன் எதிரிகளை வீழ்த்திய தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சியால் நிறைந்து, தன் தோழனான கேசவனுடன் {கிருஷ்ணனுடன்}, மொத்த படைக்கும் பின்னே தன் பாசறைக்கு ஓயச் சென்றான். இந்திரநீலங்கள், பத்மராகங்கள், தங்கம், வெள்ளி, வைரங்கள், பவழங்கள், படிகங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தன் அழகிய தேரில் நின்ற அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆகாயத்தில் உள்ள சந்திரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.

பதினோராம் நாள் போர் முற்றும்

துரோணாபிஷேக பர்வம் முற்றும்


ஆங்கிலத்தில் | In English

Sunday, April 17, 2016

சல்லியனை வீழ்த்திய பீமன்! - துரோண பர்வம் பகுதி – 015

Bhima vanquished Salya! | Drona-Parva-Section-015 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 15)

பதிவின் சுருக்கம் : சல்லியனை நோக்கி விரைந்த பீமனும், அபிமன்யுவும்; அபிமன்யுவை விலகி நிற்கச் செய்த பீமன்; பீமனுக்கும் சல்லியனுக்கும் இடையில் நடந்த கடும் கதாயுத்தம்; பீமனின் அடியால் மயக்கமடைந்த சல்லியன்; சல்லியனைத் தூக்கிச் சென்ற கிருதவர்மன்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சிறந்த தனிப்போர்கள் பலவற்றை நீ எனக்கு விவரித்தாய். அவற்றைக் கேட்கும் நான், கண் கொண்டோரிடம் பொறாமை கொள்கிறேன். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் (பழங்காலத்தில்) நடந்ததற்கு ஒப்பாகக் குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடக்கும் இந்தப் போர் மிக அற்புதமானது என மனிதர்கள் அனைவராலும் பேசப்படும். கிளர்ச்சியூட்டும் இந்தப் போரைக் குறித்த உனது விவரிப்பைக் கேட்பதால் நான் நிறைவடையவில்லை. எனவே, அர்தாயனிக்கும் (சல்லியனுக்கும்), சுபத்திரையின் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தனது ஓட்டுனர் {தேரோட்டி} கொல்லப்பட்டதைக் கண்ட சல்லியன், முழுவதும் இரும்பாலான கதாயுதம் ஒன்றை உயர்த்தியபடி, தன் சிறந்த தேரில் இருந்து சினத்துடன் கீழே குதித்தான். பீமன் கனமான தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, யுகநெருப்புக்கோ, தண்டாயுதத்துடன் கூடிய காலனுக்கோ ஒப்பாக இருந்த சல்லியனை நோக்கி வேகமாக விரைந்தான். சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} வானத்தின் இடிக்கு {வஜ்ராயுதத்துக்கு} ஒப்பான தன் மகத்தான கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சல்லியனிடம், “வாரும், வாரும்!” என்று சொன்னான். எனினும், பீமன் மிகவும் முயன்று அவனை {அபிமன்யுவை} ஒதுங்கி நிற்கச் சொல்லித் தடுத்தான். வீர பீமசேனன், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} ஒதுங்கி நிற்குமாறு தடுத்த பிறகு, போரில் சல்லியனை அணுகி, மலையென அசையாது நின்றான்.

மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனும் {சல்லியனும்}, பீமசேனனைக் கண்டு, யானையை நோக்கிச் செல்லும் புலியைப் போல அவனை {பீமனை} நோக்கிச் சென்றான். பிறகு, ஆயிரக்கணக்கான எக்காள ஒலிகளும், சங்கு முழக்கங்களும், சிங்க முழக்கங்களும், பேரிகையொலிகளும் அங்கே கேட்டன. ஒருவரையொருவர் நோக்கி விரையும் நூற்றுக்கணக்கான பாண்டவ மற்றும் கௌரவ வீரர்களுக்கு மத்தியில், “நன்று, நன்று” என்ற கூக்குரல்கள் எழுந்தன.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தவிரப் போரில் பீமசேனனின் வலிமையைத் தாங்கத் துணிந்தவன் வேறு எவனும் இல்லை; அவ்வாறே சிறப்புமிக்கச் சல்லியனின் கதாயுத வேகத்தைப் போரில் தாங்கவும், விருகோதரனைத் {பீமனைத்} தவிர இவ்வுலகில் வேறு எவன் துணிவான்? தங்கக் கம்பிகள் கலந்த இழைச்சரங்களால் கட்டப்பட்டதும், தன் அழகால் பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்வூட்டவல்லதுமான பீமனின் மகத்தான கதாயுதம், அவனால் {பீமனால்} ஏந்தப்பட்டுப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவ்வாறே வட்டமாகச் சுழன்று கொண்டிருந்த சல்லியனின் கதாயுதமும், சுடர்மிகும் மின்னலின் கீற்றைப் போலவே தெரிந்தது.

காளைகளைப் போல முழங்கிய அவ்விருவரும் {பீமனும், சல்லியனும்}, வட்டமாகச் சுழன்று கொண்டிருந்தனர் {மண்டல கதிகளோடு சஞ்சரித்தனர்}. சற்றே சாய்ந்த தங்கள் கதாயுதங்களுடன் நின்று கொண்டிருந்த சல்லியன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கொம்புகள் கொண்ட காளைகளைப் போலவே தெரிந்தனர். வட்டமாகச் சுழல்வதையோ, தங்கள் கதாயுதங்களால் தாக்குவதையோ பொறுத்தவரை மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதல் அனைத்து வழியிலும் சமமானதாகவே இருந்தது.

பீமசேனன் தன் கதாயுதத்தைக் கொண்டு தாக்கியதால், சல்லியனின் மகத்தான கதாயுதம், கடும் நெருப்புப் பொறிகளை வெளியிட்டுக் கொண்டே விரைவில் துண்டுகளாக உடைந்தது. அதே போலவே, பீமசேனனின் கதாயுதமும், எதிரியால் {சல்லியனால்} தாக்கப்பட்டு, மழைக்காலத்தின் மாலைப்பொழுதில் மின்மினிப்பூச்சிகளால் மறைக்கப்பட்ட அழகிய மரம் போலத் தெரிந்தது.

அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} வீசப்பட்ட கதாயுதம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (சுற்றிப் பறக்கையில்) அடிக்கடி நெருப்புப் பொறிகளை வெளியிட்டபடியே ஆகாயத்தில் ஒளிவீசியது. அதே போலவே, எதிரியை நோக்கி பீமசேனன் வீசிய கதாயுதம், (ஆகாயத்தில் இருந்து) கீழே விழும் கடும் எரிக்கோளைப் போல அவனது {பீமனது} எதிரிப் படையை எரித்தது. கதாயுதங்களில் சிறந்தவையான அவை இரண்டும் ஒன்றையொன்று தாக்கியபடி, பெருமூச்சுவிடும் பெண்பாம்புகளுக்கு ஒப்பாக நெருப்பு கீற்றுகளைக் கக்கின.

வட்டமாகச் சுழன்று கொண்டிருந்த வலிமைமிக்க அவ்வீரர்கள் இருவரும், தங்கள் நகங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் பெரும் புலிகள் இரண்டைப் போலவோ, தங்கள் தந்தங்களால் தாக்கிக் கொள்ளும் வலிமைமிக்க யானைகள் இரண்டைப் போலவோ கதாயுதங்களில் முதன்மையான அவை இரண்டாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். விரைவில் இரத்தத்தால் மறைக்கப்பட்ட அந்தச் சிறப்புவாய்ந்த வீரர்கள் இருவரும் மலர்ந்திருக்கும் இரண்டு பலாச மரங்களுக்கு ஒப்பாகத் தெரிந்தனர்.

மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவராலும் தரிக்கப்பட்ட கதாயுதங்களின் அடிகள் {தாக்குதல்களின் ஒலி} இந்திரனின் இடியைப் போன்று அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டன. கதாயுதத்தைக் கொண்டு மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் தாக்கப்பட்ட பீமன், இடியால் பிளக்கப்படும் மலையைப் போலக் கிஞ்சிற்றும் அசையாது {நடுங்காது} நின்றான். அதேபோல, கதாயுதம் கொண்டு பீமனால் தாக்கப்பட்ட மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனும் {சல்லியனும்} இடியால் தாக்கப்படும் மலையைப் போலப் பொறுமையாக நின்றான்.

பெரும் வேகம் கொண்ட அவ்விருவரும் உயர்த்தப்பட்ட தங்கள் கதாயுதங்களுடன் நெருக்கமான வட்டங்களில் சுழன்று ஒருவரின் மேல் ஒருவர் பாய்ந்தனர். விரைவாக ஒருவரையொருவர் அணுகி, எட்டு எட்டுகள் வைத்து, யானைகள் இரண்டைப் போல ஒருவரின் மேல் ஒருவர் பாய்ந்த அவர்கள் முழுமையாக இரும்பாலான அந்தத் தங்கள் கதாயுதங்களால் திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அவ்வீரர்கள் இருவரும், அடுத்தவரின் வேகம் மற்றும் தங்கள் கதாயுதங்களின் தாக்குதல் பலம் ஆகியவற்றின் விளைவால் ஒரே சமயத்தில் இந்திரத்வஜங்கள் இரண்டைப் போலக் கீழே விழுந்தனர்.

பிறகு தன் உணர்வுகளை இழந்து, பெருமூச்சுவிட்டபடி களத்தில் கிடந்த சல்லியனை வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன் விரைவாக அணுகினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கதாயுதத்தால் பலமாகத் தாக்கப்பட்டு, பாம்பு போலப் புரண்டு கொண்டு, உணர்வுகளை இழந்து மயக்கத்தில் இருந்த அவனைக் {சல்லியனைக்} கண்ட வலிமைமிக்கத் தேர்வீரன் கிருதவர்மன், அந்த மத்ர ஆட்சியாளனை {சல்லியனைத்} தன் தேரில் ஏற்றி, களத்தை விட்டு அவனை {சல்லியனை} விரைவாகச் சுமந்து சென்றான். குடிகாரனைப் போலச் சுற்றிக் கொண்டிருந்த வலிய கரங்களைக் கொண்ட வீரப் பீமன், கண் இமைக்கும் நேரத்திற்குள், கையில் கதாயுதத்துடன் எழுந்து நின்றான்.

பிறகு, உமது மகன்கள், போரில் இருந்து விலகிய மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைக்} கண்டு தங்கள் யானைகள், காலாட்படைவீரர்கள், குதிரைப்படை மற்றும் தேர்களுடன் சேர்ந்து நடுங்கத் தொடங்கினர். வெற்றியை விரும்பும் பாண்டவர்களால் கலங்கடிக்கப்பட்ட உமது படையின் வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டு, காற்றால் விரட்டப்படும் மேகத் திரள்களைப் போல அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடினர்.

திருதராஷ்டிரர்களை வீழ்த்திய வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்மிகும் நெருப்பைப் போல அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தனர். மகிழ்ச்சியால் குதூகலித்த அவர்கள் சிங்க முழக்கங்கள் செய்தபடியே தங்கள் சங்குகளை முழக்கினர். மேலும், அவர்கள் தங்கள் மட்டுகங்கள், பேரிகைகள், மிருதங்கங்கள் {பெரிய முரசங்கள், பணவங்கள், ஆனகங்கள், துந்துபிகள், நிர்ஜரிகள்} ஆகியவற்றையும் இன்னும் பிற இசைக்கருவிகளையும் முழக்கினர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Saturday, April 09, 2016

அபிமன்யுவின் ஆற்றல்! - துரோண பர்வம் பகுதி – 014

The prowess of Abhimanyu! | Drona-Parva-Section-014 | The prowess of Abhimanyu! | Drona-Parva-Section-014 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 14)

பதிவின் சுருக்கம் : துரோணர் செய்த போர்; வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்போர்கள்; ஜெயத்ரதனால் அபிமன்யுவிடம் இருந்து உயிர்தப்பிய பௌரவன்; ஜெயத்ரதனை வீழ்த்திய அபிமன்யு; அபிமன்யுவின் ஆற்றல்; சல்லியன் அபிமன்யு மோதல்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவப்படையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய துரோணர், (காட்டு) மரங்களை எரிக்கும் தீயைப் போல அதனூடே {பாண்டவப்படையினூடே} திரிந்து கொண்டிருந்தார். தங்கத்தேரைக் கொண்ட அந்தக் கோபக்கார வீரர் {துரோணர்} பெருகும் காட்டுத்தீயைப் போலத் தங்கள் படையணிகளை எரிப்பதைக் கண்ட சிருஞ்சயர்கள் (அச்சத்தால்) நடுங்கினர். பெரும் சுறுசுறுப்புடைய அந்த வீரரால் {துரோணரால்} தொடர்ந்து வளைக்கப்பட்ட வில் உண்டாக்கிய நாணொலியானது இடியின் முழக்கத்திற்கு ஒப்பாக அந்தப் போரில் கேட்கப்பட்டது. கர நளினம் {லாகவம்} கொண்ட துரோணரால் ஏவப்பட்ட கடுங்கணைகள், யானைகள் மற்றும் குதிரைகளுடன் கூடிய தேர்வீரர்களையும், குதிரைவீரர்களையும், யானைவீரர்களையும், காலாட்படை வீரர்களையும் நசுக்கத் தொடங்கின.


வேனிற்காலத்தின் முடிவில் முழங்கும் மேகங்கள் காற்றின் உதவியோடு ஆலங்கட்டிகளைப் பொழிவதைப் போலக் கணைகளைப் பொழிந்த அவர் {துரோணர்}, எதிரியின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தினார். (பகையணிகளின் ஊடாகத்) திரிந்து துருப்புகளைக் கலங்கடித்த வலிமைமிக்கத் துரோணர், எதிரியிடம் இயல்புக்குமீறிய அச்சத்தை அதிகமாக்கினார். வேகமாக நகரும் அவரது தேரில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில் கார்மேகத் திரளுக்கு மத்தியில் மின்னலின் கீற்றுக்கு ஒப்பாக அடிக்கடி தென்பட்டது.

உண்மையில் {சத்தியத்தில்} உறுதியானவரும், விவேகம் கொண்டவரும், நீதிக்கு எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவருமான அந்த வீரர் {துரோணர்} யுகத்தின் முடிவில் தென்படும் கோப ஊற்றாலான பயங்கர ஆறு ஒன்றை அங்கே பாயச் செய்தார். துரோணருடைய கோப்பதின் வேகத்தில் இருந்த அந்த ஆற்றின் ஊற்றுக் கண் ஊனுண்ணும் உயிரினங்களால் மொய்க்கப்பட்டிருந்தது. போராளிகள் அதன் முழுப் பரப்பிலான அலைகளாக இருந்தனர். வீரமிக்கப் போர்வீரர்கள் அதன் ஊற்றால் வேர்கள் தின்னப்பட்டு, அதன் கரைகளில் நிற்கும் மரங்களாக இருந்தனர்.

அந்தப் போரில் சிந்தப்பட்ட குருதி அதன் நீரானது, தேர்கள் அதன் நீர்ச்சுழலாகவும், யானைகளும் குதிரைகளும் அதன் கரைகளாகவும் அமைந்தன. கவசங்கள் அதன் அல்லிகளாகவும், உயிரினங்களின் இறைச்சி அதன் படுகையில் உள்ள சகதியாகவும் இருந்தன. (வீழ்ந்த விலங்குகள் மற்றும் மனிதர்களின்) கொழுப்பு, மஜ்ஜை, எலும்புகள் அதன் மணற்பரப்பாகவும், தலைப்பாகைகள் அதன் நுரைகளாகவும் அமைந்தன. மேலும் அங்கே நடைபெற்ற போரானது அதன் பரப்புக்கு மேலுள்ள கவிகையாகியது. வேல்கள் எனும் மீன்களால் அது நிறைந்திருந்தது. பெரும் எண்ணிக்கையில் (கொல்லப்பட்ட) மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றின் விளைவால் (அதில் விழுந்ததால்) அஃது அடைவதற்கரிதானதாக இருந்தது.

ஏவப்பட்ட கணையின் வேகம் அதன் நீரூற்றாக இருந்தது. கொல்லப்பட்ட உடல்கள் அதில் மிதக்கும் மரங்களாகின. தேர்கள் அதன் ஆமைகளாகின. தலைகள், அதன் கரைகளில் சிதறிக் கிடக்கும் கற்களாகின, வாள்கள் மீன்களாக அபரிமிதமாக இருந்தன. தேர்களும், யானைகளும், அதன் தடாகங்களாகின. மேலும் அது பல்வேறு ஒப்பனைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அதன் நூற்றுக்கணக்கான நீர்ச்சுழல்களாகினர். பூமியின் புழுதி அதன் அலைவரிசைகளாகின. பெரும் சக்தி கொண்டோரால் எளிதில் கடக்கத்தக்கதாகவும், மருண்டவர்களால் கடக்கமுடியாததாகவும் அஃது இருந்தது.

உயிரற்ற உடல்களின் குவியல்கள் அதன் ஓட்டத்தைத் தடுக்கும் மணற்படுகைகளாகின. கங்கங்கள், கழுகுகள் மற்றும் இரைதேடும் பிற பறவைகள் மொய்க்கும் இடமாக அஃது இருந்தது. ஆயிரக்கணக்கான வலிமைமிக்கத் தேர்வீரர்களை அது யமலோகத்திற்கு அடித்துச் சென்றது. நீண்ட ஈட்டிகள் அதன் பாம்புகளாக அதில் பரவிக் கிடந்தன. உயிருடன் இருந்த போராளிகள் அதன் நீர்களில் விளையாடும் நீர்வாழ் உயிரிகளாகினர். கிழிந்த குடைகள் அதன் பெரிய அன்னங்களாகின. கிரீடங்கள் அதை அலங்கரித்த (சிறு) பறவைகளாகின. சக்கரங்கள் அதன் அமைகளாகவும், கதாயுதங்கள் அதன் முதலைகளாகவும், கணைகள் அதன் சிறு மீன்களாகவும் இருந்தன. காகங்கள், கழுகுகள் மற்றும் நரிகளின் பொழுதுபோக்கிடமாக அஃது இருந்தது.

ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஆறு போரில் துரோணரால் கொல்லப்பட்ட உயிரினங்களில் நூற்றுக்கணக்கான பித்ருலோகத்திற்கு அழைத்துச் சென்றது. (அதில் மிதக்கும்) நூற்றுக்கணக்கான உடல்களால் தடுக்கப்பட்ட அது (கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் விலங்குகளின்) முடிகளைப் பாசிகளாகவும், புற்களாகவும் கொண்டிருந்தது. துரோணர் அங்கே ஓடச்செய்த ஆறு இப்படியே மருண்டோரின் அச்சத்தை அதிகப்படுத்துவதாக இருந்தது.

அங்கேயும் இங்கேயும் எனத் துரோணர் பகையணியை இப்படிக் கலங்கடித்துக் கொண்டிருந்தபோது, யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவ வீரர்கள் அந்த வீரரை {துரோணரை} நோக்கி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் விரைந்து சென்றனர். அவர்கள் இப்படி (துரோணரை நோக்கி) விரைவதைக் கண்ட உறுதியான ஆற்றல் கொண்ட உமது படையின் துணிச்சல்மிகு போராளிகள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர். அதன்பிறகு அங்கே தொடர்ந்த போரானது மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

நூறு வகைகளிலான வஞ்சனைகள் நிறைந்த சகுனி, சகாதேவனை நோக்கி விரைந்து, கூர்முனைக் கணைகள் பலவற்றால் பின்னவனின் {சகாதேவனின்} தேரோட்டி, கொடிமரம் மற்றும் தேரினைத் துளைத்தான். எனினும், அதிகமாகத் தூண்டப்படாத சகாதேவன், கூரிய கணைகளால் சுபலனின் கொடிமரம், வில், தேரோட்டி மற்றும் தேர் ஆகியவற்றை வெட்டி, அறுபது {60} கணைகளால் சுபலனையும் {சகுனியையும்} துளைத்தான். அதன் பேரில், சுபலனின் மகன் {சகுனி}, கதாயுதத்தை எடுத்துக் கொண்டு தன் சிறந்த தேரில் இருந்து கீழே குதித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சகாதேவனின் தேரோட்டியைப் பின்னவனின் {சகாதேவனின்} தேரில் இருந்து கீழே வீழ்த்தினான். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தேரை இழந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் {சகுனியும், சகாதேவனும்} இருவரும் கதாயுதத்தைத் தரித்துக் கொண்டு, மலைகளின் முகடுகள் இரண்டைப் போலப் போரில் விளையாடினர்.

துரோணர், பாஞ்சாலர்களின் ஆட்சியாளனை {துருபதனைப்} பத்துக் கணைகளால் துளைத்துவிட்டுப் பதிலுக்குப் பின்னவனால் {துருபதனால்} பல கணைகளால் துளைக்கப்பட்டார். பிறகு, மீண்டும் பின்னவன் {துருபதன்} துரோணரால் பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் துளைக்கப்பட்டான் [1].

[1] வேறொரு பதிப்பில இந்தப் பத்தி, “துரோணர் கூர்மையான அம்புகளால் பாஞ்சால ராஜகுமாரனை {திருஷ்டத்யும்னனை} அடித்தார். அந்த யுத்தகளத்தில் அவ்விருவருடைய அம்பு மழையாலும் ஆகாயமானது இரவில் மின்மினிப்பூச்சிகளால் பிரகாசிப்பதைப் போலப் பிரகாசித்தது” என்று இருக்கிறது. கங்குலியில் the ruler of Panchalas என்றே இருக்கிறது. எனினும் இது துருபதனில்லாமல், திருஷ்டத்யும்னனாகவும் இருக்கலாம். ஏனெனில் இங்கே குறிப்பிடப்படும் தனிப்போர்களில் துருபதன் பகதத்தனோடு போரிட்டதாக இதே பகுதியில் பின்னர் ஓர் இடத்தில் வருகிறது.

பீமசேனன் கூரிய கணைகளால் விவிம்சதியைத் துளைத்தான். எனினும் பின்னவன் {விவிம்சதி}, இப்படித் துளைக்கப்பட்டாலும் நடுங்காதிருந்தது பெரும் ஆச்சரியமாகத் தெரிந்தது. பிறகு விவிம்சதி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, திடீரெனப் பீமசேனனை அவனது குதிரைகளையும், கொடியையும், வில்லையும் இழக்கச் செய்தான். அதன்பேரில் துருப்புகள் அனைத்தும் அந்தச் சாதனைக்காக அவனை {விவிம்சதியை} வழிபட்டன. எனினும், வீரபீமசேனன், போரில் தன் எதிரி ஆற்றலை வெளிப்படுத்துவதைப் பொறுத்துக் கொள்ளவில்லை. எனவே, தன் கதாயுதத்தால், விவிம்சதியின் நன்கு பயிற்சியைப் பெற்ற குதிரைகளைக் கொன்றான். பிறகு வலிமைமிக்க விவிம்சதி, (வாளோடு கூடிய) ஒரு கேடயத்தை எடுத்துக் கொண்டு, குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து கீழே குதித்து, மதங்கொண்ட எதிராளியை {யானையை} எதிர்த்து விரையும் மதங்கொண்ட யானையைப் போலப் பீமசேனனை எதிர்த்து விரைந்தான்.

வீர சல்லியன், சரசம் செய்பவனைப் போலச் சிரித்துக் கொண்டே தன் அன்புக்குரிய மருமகனான நகுலனின் கோபத்தைத் தூண்டுவதற்காகப் பல கணைகளால் அவனை {நகுலனைத்} துளைத்தான். எனினும், வீர நகுலன், தன் மாமனின் {சல்லியனின்} குதிரைகள், குடை, கொடிமரம், தேரோட்டி மற்றும் வில் ஆகியவற்றை வெட்டி தன் சங்கை முழக்கினான்.

{சேதி மன்னன்} திருஷ்டகேது, கிருபருடன் {போரில்} ஈடுபட்டு, பின்னவர் {கிருபர்} தன்னை நோக்கி ஏவிய பல்வேறு வகைகளிலான கணைகளை வெட்டி, பிறகு, எழுபது{70} கணைகளால் கிருபரைத் துளைத்தான். பிறகும், மூன்று கணைகளால் கிருபரின் கொடிமரத்திலுள்ள பொறியை {கொடியை} அவன் வெட்டினான். எனினும், கிருபர், அடர்த்தியான கணை மழையால் அவனை {திருஷ்டகேதுவை} எதிர்க்கத் தொடங்கினார். இவ்வழியில் திருஷ்டகேதுவைத் தடுத்த அந்தப் பிராமணர் {கிருபர்}, அவனுடன் {தொடர்ந்து} போரிட்டுக் கொண்டிருந்தார்.

சாத்யகி, சிரித்துக் கொண்டே ஒரு நாராசத்தைக் கொண்டு கிருதவர்மனின் நடு மார்பைத் துளைத்தான். மேலும் எழுபது {70} கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்த அவன் {சாத்யகி} மீண்டும் பிறவற்றால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். எனினும் அந்தப் போஜப் போர்வீரன் {கிருதவர்மன்}, கூர்முனைகளைக் கொண்ட எழுபது கணைகளால் சாத்யகியைப் பதிலுக்குத் துளைத்தான். வேகமாகச் செல்லும் காற்று ஒரு மலையை அசைப்பதில் தோற்பதைப் போல, கிருதவர்மனால் சாத்யகியை அசைக்கவோ, அவனை நடுங்கச் செய்யவோ இயலவில்லை.

{துரியோதனன் தம்பியான} சேனாபதி, {பாண்டவத் தரப்பின்} சுசர்மனை அவனது முக்கிய அங்கங்களில் ஆழமாகத் தாக்கினான். சுசர்மனும் ஒரு வேலால் தன் எதிராளியின் தோள்ப்பூட்டில் தாக்கினான் [2].

[2] இந்த இடத்தில் வேறொரு பதிப்பில், “சேனாதிபதியான திருஷ்டத்யும்னன் {திரிகர்த்த மன்னன்} சுசர்மனை மர்மஸ்தானங்களில் மிகவும் அடித்தான், அவனும், அவனைத் தோமராயுதத்தால் தோள்பூட்டில் அடித்தான்” என்று இருக்கிறது.

விராடன், பெரும் சக்தி கொண்ட மத்ஸ்ய வீரர்களின் உதவியால், அந்தப் போரில் விகர்த்தனன் மகனை {கர்ணனைத்} தடுத்தான். (மத்ஸ்ய மன்னனின்) அந்தச் சாதனை மிகவும் அற்புதமானதாகத் தெரிந்தது. சூத மகனின் {கர்ணனின்} பங்குக்கு, அவன் தனியாகவே தன் நேரான கணைகளின் மூலம் மொத்தப்படையையும் தடுத்ததால், அது பெரும் வீரச் செயலாகக் கருதப்பட்டது.

மன்னன் துருபதன், பகதத்தனோடு {போரில்} ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அந்த இருவீரர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் போரானது காண்பதற்கு மிக அழகாக இருந்தது [3]. மனிதர்களில் காளையான பகதத்தன், நேரான கணைகள் பலவற்றால், மன்னன் துருபதன், அவனது தேரோட்டி, கொடிமரம் மற்றும் தேர் ஆகியவற்றைத் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட துருபதனோ, ஒரு நேரான கணையால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனின் {பகதத்தனின்} நடு மார்பைத் துளைத்தான்.

[3] இந்தப் பகுதியில் மேலே ஓர் இடத்தில் துரோணரோடு பாஞ்சாலர்களின் ஆட்சியாளன்  போரிட்டான் என்ற ஒரு குறிப்பு இருக்கிறது.

ஆயுதங்களை அறிந்த பூமியின் போர்வீரர்களில் முதன்மையான சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} மற்றும் சிகண்டி ஆகியோர் இருவரும் கடும்போரில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டது உயிரினங்கள் அனைத்தையும் அச்சத்தால் நடுங்கச் செய்தது. வீர பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யக்ஞசேனன் மகனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் சிகண்டியை அடர்த்தியான கணைமழையால் மறைத்தான். பிறகு, ஓ!ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட சிகண்டி, தொண்ணூறு {90} கணைகளால் சோமதத்தன் மகனை {பூரிஸ்ரவசைத்} துளைத்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனை {பூரிஸ்ரவசை} நடுங்கச் செய்தான்.

கடும் செயல்களைப் புரியும் ராட்சசர்களான ஹிடிம்பையின் மகனும் {கடோத்கசனும்}, அலம்புசனும், ஒருவரையொருவர் வீழ்த்த விரும்பி, மிக அற்புதமாகப் போரிட்டனர். நூறு மாயைகளை உண்டாக்கவல்லவர்களும், செருக்கு பெருகியவர்களுமானா அவ்விருவரும், தங்கள் மாய சக்திகளை நம்பி ஒருவரையொருவர் வீழ்த்த விரும்பி தங்களுக்குள் மிக அற்புதமாகப் போரிட்டனர்.

மூர்க்கமான சேகிதானன், அனுவிந்தனோடு போரிட்டான். சில நேரங்களில் மறைந்து பெரும் அற்புதங்களை ஏற்படுத்தியபடியே அவர்கள் களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.

{துரியோதனன் மகன்} லக்ஷ்மணன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் (அசுரன்) ஹிரண்யாக்ஷனோடு போரிட்ட விஷ்ணுவைப் போலவே , {திருஷ்டத்யும்னன் மகன்} க்ஷத்ரதேவனோடு கடுமையாகப் போரிட்டான்.

பௌரவன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வேகமான தன் குதிரைகளோடு கூடிய தேரில் வந்து, அபிமன்யுவை நோக்கி முழங்கினான். பெரும் வலிமை கொண்ட அந்தப் பௌரவன் போரிட விரும்பி அபிமன்யுவை நோக்கி விரைந்தான். பிறகு எதிரிகளைத் தண்டிப்பவனான அபிமன்யு அந்த எதிரியோடு {பௌரவனோடு} கடுமையாகப் போரிட்டான். பௌரவன் அடர்த்தியான கணை மழையால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} மறைத்தான். அதன் பேரில், அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, தன் எதிராளியின் {பௌரவனின்} கொடிமரம், குடை மற்றும் வில் ஆகியவற்றைப் பூமியில் வீழ்த்தினான். பிறகு ஏழு கணைகளால் பௌரவனைத் துளைத்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஐந்து கணைகளால் பின்னவனின் {பௌரவனின்} தேரோட்டி மற்றும் குதிரைகளைத் துளைத்தான். இப்படித் தன் துருப்புகளை மகிழ்ச்சியடையச் செய்த அவன் {அபிமன்யு}, சிங்கம் போல மீண்டும் மீண்டும் கர்ஜனை செய்தான்.

பிறகு அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பௌரவனின் உயிரை நிச்சயம் எடுக்க வல்ல கணை ஒன்றை தன் வில்லின் நாணில் விரைவாகப் பொருத்தினான். எனினும் அபிமன்யுவின் வில்லின் நாணில் பொருத்தப்பட்ட அந்தக் கணையின் பயங்கரத் தோற்றத்தைக் கண்ட ஹ்ருதிகன் மகன் {கிருதவர்மன்}, இரண்டு கணைகளால் அந்த வில்லையும், கணையையும் அறுத்தான். பிறகு, பகைவர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, உடைந்த வில்லை வீசியெறிந்து, பளபளக்கும் வாள் ஒன்றையும், கேடயம் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். பல நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கேடயத்தைப் பெரும் வேகத்தோடு சுழற்றி, அந்த வாளையும் சுழற்றியபடியே தன் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டு அவன் {அபிமன்யு} களத்தில் திரிந்து கொண்டிருந்தான்.

தன் முன்னே அவற்றை {கேடயத்தையும் வாளையும்} சுழற்றிக் கொண்டும், பிறகு அவற்றை உயர்த்திச் சுழற்றியும், அவற்றை அசைத்தும் {உதறியும்}, உயரக் குதித்தும் அவ்வாயுதங்களை அவன் கையாண்ட விதத்தால், தாக்கும் மற்றும் தற்காக்கும் அந்த ஆயுதங்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் (அவனிடம்) காண முடியவில்லை. பிறகு, திடீரெனப் பௌரவனின் தேர் ஏர்க்காலில் குதித்து ஏறிய அவன் {அபிமன்யு} உரக்க முழங்கினான். பிறகு அவனது தேரில் ஏறிய அவன் {அபிமன்யு}, பௌரவனின் தலைமயிறைப் பிடித்துக் கொண்டு, ஓர் உதையால் பின்னவனின் {பௌரவனின்} தேரோட்டியைக் கொன்று, தன் வாள் வீச்சால் அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். அந்தப் பௌரவனைப் பொறுத்தவரை, நீரைக் கலக்கி கடலின் அடியில் உள்ள பாம்பை உயர்த்தும் கருடனைப் போல அபிமன்யு அவனை {பௌரவனை} உயர்த்தினான்.

அதன் பேரில், மன்னர்கள் அனைவரும், சிங்கத்தால் கொல்லப்படும் தருணத்தில் உணர்வுகளை இழந்து நிற்கும் எருதைப் போலக் கலைந்த தலைமயிறோடு கூடிய (ஆதரவற்று நின்ற) பௌரவனைக் கண்டனர். இப்படிக் கிடத்தப்பட்ட பௌரவன், அர்ஜுனன் மகனின் {அபிமன்யுவின்} வசத்தில் அகப்பட்டு, ஆதரவற்ற நிலையில் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட ஜெயத்ரதனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு வாளையும், மயில் பொறிக்கப்பட்டு வரிசையான சிறு மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்ட ஜெயத்ரதன், தன் தேரில் இருந்து கீழே குதித்து உரக்க முழங்கினான். பிறகு, சுபத்திரையின் மகன் (அபிமன்யு), சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கண்டு, பௌரவனை விட்டுவிட்டு, பின்னவனின் தேரில் இருந்து ஒரு பருந்தைப் போல உயரக் குதித்து, பூமியில் விரைவாக இறங்கினான்.

அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, தன் எதிரிகளால் ஏவப்பட்ட வேல்கள், பட்டிசங்கள் மற்றும் வாள்களைத் தன் வாளினால் வெட்டவோ, தன் கேடயத்தால் விலக்கவோ செய்தான். இப்படித் தன் கரங்களின் வலிமையை வீரர்கள் அனைவருக்கும் காட்டிய அந்த வலிமைமிக்க (வீர) அபிமன்யு, மீண்டும் தன் பெரிய வாளையும், கேடயத்தையும் உயர்த்தி, தன் தந்தையின் {அர்ஜுனனின்} உறுதியான எதிரியான விருத்தக்ஷத்திரன் மகனை {ஜெயத்ரதனை} நோக்கி, யானையை எதிர்த்துச் செல்லும் புலியைப் போலச் சென்றான். புலியும் சிங்கமும் தங்கள் பற்களாலும், நகங்களாலும் தாக்கிக் கொள்வதைப் போல ஒருவரை ஒருவர் அணுகிய அவர்கள் தங்கள் வாள்களால் தாக்கிக் கொண்டனர்.

சுழன்று வீசுதல் {அபிகாதம்}, வாள்களை இறக்குதல் {ஸ்ம்பாதம்} மற்றும் கேடயங்களை இறக்குதல் {நிபாதம்} ஆகியவற்றைப் பொறுத்தவரை, அந்த மனிதர்களில் சிங்கங்களான இருவருக்குள்ளும் எந்த வேறுபாட்டையும் யாராலும் காண முடியவில்லை [4]. வெளிநோக்கியும், உள்நோக்கியும் அழகாக நகர்ந்து அந்த இரு வீரர்களும் சிறகுகள் படைத்த இரு மலைகளைப் போலத் தெரிந்தனர். ஜெயத்ரதன், புகழ்பெற்ற அபிமன்யு அவனை நோக்கி வாளை வீசிய போது பின்னவனின் {அபிமன்யுவின்} கேடயத்தைத் தாக்கினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதனின் பெரிய வாளானது, தங்கத் தகட்டால் மறைக்கப்பட்ட அபிமன்யுவின் கேடயத்தில் சிக்கிக் கொண்டு, அதைச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பலமாக உருவ முயற்சித்த போது உடைந்தது.

[4] வேறொரு பதிப்பில், “ஸ்ம்பாதங்களிலும் {எதிராக வீசுதல்}, அபிகாதங்களிலும் {நான்கு பக்கத்திலும் சுழற்றியடித்தல்}, நிபாதங்களிலும் {பதுங்கி அல்லது சாய்ந்து வீசுதல்} மனிதர்களில் சிறந்தவர்களான அவ்விருவருக்குமுள்ள வித்தியாசத்தை ஒருவரும் காணவில்லை” என்று இருக்கிறது.

தன் வாள் உடைந்ததைக் கண்ட ஜெயத்ரதன், விரைவாக ஆறு எட்டுகள் பின்வாங்கி, கண் இமைக்கும் நேரத்திற்குள் தன் தேரில் ஏறுவது தெரிந்தது [5]. பிறகு, வாள் போர் முடிந்ததும் அர்ஜுனனின் மகனும் {அபிமன்யுவும்} தன் சிறந்த தேரில் ஏறினான். குரு படையின் மன்னர்கள் பலர் ஒன்று சேர்ந்து அனைத்துப் பக்கங்களிலும் அவனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். எனினும், அந்த வலிமைமிக்க அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஜெயத்ரதனைப் பார்த்துக் கொண்டே தன் வாளையும், கேடயத்தையும் சுழற்றி உரக்க கர்ஜித்தான். சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} வீழ்த்தியவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பிறகு, உலகை எரிக்கும் சூரியனைப் போலக் கௌரவப் படையின் அந்தப் பிரிவை எரிக்கத் தொடங்கினான்.

[5] வேறொரு பதிப்பில் ஆறு எட்டுகள் பின்னோக்கி முதலில் தேரில் ஏறியது அபிமன்யு என்று இருக்கிறது. கங்குலியின் வர்ணனையே இங்கு விரிவானதாகத் தெரிகிறது.

பிறகு அந்தப் போரில் சல்லியன், முழுக்க இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நெருப்புத் தழலின் சுடருக்கு ஒப்பானதுமான கடும் ஈட்டி ஒன்றை அவன் {அபிமன்யு} மீது வீசினான். அதன் பேரில், அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, மேலிருந்து விழும் வலிமைமிக்கப் பாம்பைப் பிடிக்கும் கருடனைப் போல அந்த ஈட்டியை உயரக் குதித்துப் பிடித்தான். இப்படி அதைப் {ஈட்டியைப்} பிடித்த அபிமன்யு தன் வாளை உறையில் இருந்து எடுத்தான். அளவிலா சக்தி கொண்ட அந்தப் போர்வீரனின் {அபிமன்யுவின்} வலிமையையும் பெரும் சுறுசுறுப்பையும் சாட்சியாகக் கண்ட மன்னர்கள் அனைவரும் சேர்ந்து சிங்க கர்ஜனை செய்தனர்.

பிறகு, பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கரங்களின் வலிமையைக் கொண்டு, பெரும் காந்தியுடன் கூடியதும், வைடூரியக் கற்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த ஈட்டியைச் சல்லியன் மீதே ஏவினான். சமீபத்தில் சட்டை உரித்த பாம்புக்கு ஒப்பான அந்த ஈட்டி, சல்லியனின் தேரை அடைந்து, பின்னவனின் {சல்லியனின்} தேரோட்டியைக் கொன்று, அவனையும் அந்த வாகனத்தின் தட்டில் இருந்து கீழே விழச் செய்தது. பிறகு, விராடன், துருபதன், திருஷ்டகேது, யுதிஷ்டிரன், சாத்யகி, கேகயன், பீமன், திருஷ்டத்யும்னன், சிகண்டி, இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோர் அனைவரும், “அருமை! அருமை!” என்று சொல்லி வியந்தனர். பின்வாங்காதவனான அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} மகிழ்விக்கும் வண்ணம், கணைகள் ஏவும் பல்வேறு விதங்களிலான ஒலிகளும், சிங்க முழக்கங்கள் பலவும் அங்கே எழுந்தன.

எனினும், எதிரியின் வெற்றிக்கான அறிகுறிகளை உமது மகன்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிறகு, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} திடீரெனச் சூழ்ந்த அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைகளின் மாரியால் அவனை {அபிமன்யுவை} மறைத்தனர். பிறகு எதிரிகளைக் கொல்பவனான அர்தாயனி {ரிதாயனன் மகன்} (சல்லியன்), உமது மகன்களுக்கு நன்மையை விரும்பி, தன் தேரோட்டி வீழ்ந்ததையும் நினைவுகூர்ந்து, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து சினத்துடன் விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Friday, April 08, 2016

அர்ஜுனனின் உறுதிமொழி! - துரோண பர்வம் பகுதி – 013

Arjuna’s assurance! | Drona-Parva-Section-013 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : துரோணரின் உறுதிமொழியை அறிந்த யுதிஷ்டிரன்; பாண்டவர்கள் ஆலோசனை; யுதிஷ்டிரனைத் தேற்றிய அர்ஜுனன்; போரின் தொடக்கமும், துரோணரின் ஆற்றலும்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த வரம்புகளுக்கு உட்பட்டு மன்னனை {யுதிஷ்டிரனைப்} பிடிக்கத் துரோணர் உறுதியளித்த பிறகு, உமது துருப்பினர், யுதிஷ்டிரன் பிடிபடபோவதைக் ({துரோணரின் அந்த உறுதிமொழியைக்) கேட்டுச் சங்கொலிகள் மற்றும் தங்கள் கணைகளின் “விஸ்” ஒலிகள் ஆகியவற்றுடன் கலந்து தங்கள் சிங்க முழக்கங்களைப் பலவாறு வெளியிட்டனர். எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} நோக்கம் குறித்த அனைத்தையும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் ஒற்றர்கள் மூலம் விரைவில் விரிவாக அறிந்தான்.


பிறகு தன் சகோதரர்கள் அனைவரையும், தன் படையின் பிற மன்னர்கள் அனைவரையும் அழைத்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, துரோணரின் நோக்கத்தைக் குறித்துக் கேட்டாய். எனவே, அக்காரியம் சாதிக்கப்படுவதைத் தடுக்கத் தக்க நடவடிக்கைகளைப் பின்பற்றுவோமாக. எதிரிகளைக் கலங்கடிப்பவரான துரோணர் தன் உறுதிமொழியை வரம்புகளுக்குட்பட்டுச் செய்திருக்கிறார் என்பது உண்மையே, எனினும், ஓ! பெரும் வில்லாளியே {அர்ஜுனனே}, அவை {அந்த வரம்புகள்} உன்னைச் சார்ந்தவையே. எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, துரியோதனன், தன் விருப்பத்தின் கனியை {பலனை} துரோணரிடம் அடையாதவாறு நீ இன்று என் அருகிலேயே நின்று போரிடுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “எப்படி ஒருபோதும் என்னால் எனது ஆசானை {துரோணரைக்} கொல்ல முடியாதோ, அப்பட்டியே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மையும் என்னால் விட இயலாது. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, என் ஆசானை {துரோணரை} எதிர்த்துப் போரிடுவதைக் காட்டிலும் நான் போரில் என் உயிரையே விட்டுவிடுவேன் [1]. இந்தத் திருதராஷ்டிர மகன் {துரியோதனன்}, போரில் உம்மைக் கைப்பற்றி, அரசுரிமையை அடைய விரும்புகிறான். இவ்வுலகில் அவன் அந்த விருப்பத்தின் கனியை {பலனை} ஒருபோதும் அடையப் போவதில்லை. நட்சத்திரங்களுடன் கூடிய ஆகாயம் விழலாம், பூமி துண்டுகளாகச் சிதறிப் போகலாம், எனினும், நிச்சயம் நான் உயிரோடுள்ளவரை உம்மைப் பிடிப்பதில் துரோணரால் வெல்லவே முடியாது.

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, “நான் போரில் உயிரை இழந்தாலுமிழப்பேன்; ஆசாரியரை எதிர்ப்பேன்; எவ்விதத்தாலும் உம்மைக் கைவிடேன்” என்று இருக்கிறது.

வஜ்ரதாரி {இந்திரன்}, அல்லது விஷ்ணுவின் தலைமையிலான தேவர்களே அவருக்கு {துரோணருக்குப்} போரில் உதவினாலும், களத்தில் உம்மைக் கைப்பற்றுவதில் அவரால் {துரோணரால்} வெல்லவே முடியாது. நான் உயிரோடுள்ளவரை, ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, அவர் {துரோணர்} ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவரே ஆனாலும், அந்தத் துரோணரிடம் நீர் அச்சங்கொள்வது உமக்குத் தகாது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, என் உறுதிமொழிகள் ஒருபோதும் நிறைவடையாமல் இருந்ததில்லை என்பதையும் நான் உமக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

எப்போதும் நான் பொய்மை ஏதும் பேசியிருப்பதாக எனக்கு நினைவில்லை.

எப்போதும் நான் வீழ்த்தப்பட்டதாகவும் எனக்கு நினைவில்லை.

எப்போதும் நான் ஓர் உறுதிமொழியைச் செய்துவிட்டு, அதில் ஒரு பகுதியை நிறைவேற்றாமல் இருந்ததாக எனக்கு நினைவில்லை” என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு பாண்டவ முகாமில், சங்குகள், பேரிகைகள், படகங்கள், மிருதங்கங்கள் ஆகியன ஒலிக்கப்பட்டு முழங்கின. உயர் ஆன்ம பாண்டவர்கள் சிங்க முழக்கங்களைச் செய்தனர். இவையும், அவர்களது வில்லின் பயங்கர நாணொலிகளும், உள்ளங்கை தட்டல்களும் சொர்க்கத்தையே எட்டின. பாண்டுவின் வலிமைமிக்க மகன்களின் முகாமில் இருந்து எழுந்த உரத்த சங்கொலிகளைக் கேட்டு, உமது படைப்பிரிவுகளிலும் பல்வேறு கருவிகள் இசைக்கப்பட்டன. பிறகு உமது படைப்பிரிவுகளும், அவர்களுடையனவும் போருக்காக அணிவகுக்கப்பட்டன. பிறகு போரை விரும்பிய அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து மெதுவாக முன்னேறினர். பாண்டவர்கள், குருக்கள் {கௌரவர்கள்}, துரோணர் மற்றும் பாஞ்சாலர்களுக்கு இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் கடுமையான ஒரு போர் தொடங்கியது.

சிருஞ்சயர்கள் கடுமையாகப் போரிட்டாலும், துரோணரால் பாதுகாக்கப்பட்ட அந்தப் படையை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. அதே போல, தாக்குவதில் திறம்பெற்ற உமது மகனின் {துரியோதனனின்} வலிமைமிக்கத் தேர்வீரர்களாலும், கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்ட பாண்டவப் படையை வீழ்த்த முடியவில்லை. துரோணர் மற்றும் அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட அவ்விரு படைகளும், இரவின் அமைதியில் பூத்துக் குலுங்கும் இரு காடுகளைப் போலச் செயலற்று நிற்பதாகத் தெரிந்தது.

பிறகு, தங்கத் தேரைக் கொண்டவர் (துரோணர்), சூரியனைப் போன்ற பெரும் காந்தியைக் கொண்டு, பாண்டவர்களின் படையணிகளை நசுக்கியபடி, தான் விரும்பியவாறெல்லாம் அவர்கள் மத்தியில் திரிந்தார். பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், தாங்கள் கொண்ட அச்சத்தால், பெரும் வேகத்தோடு விரைவாக முன்னேறி வந்த அந்தத் தனி வீரரை {துரோணரை} பலராகக் கருதினர். அவரால் ஏவப்பட்ட பயங்கரக் கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களிலும் பாய்ந்து பாண்டு மகனின் படையை அச்சுறுத்தின. உண்மையில் துரோணர், நூற்றுக்கணக்கான கிரணங்களுடன் கூடிய நடுநாள் சூரியனைப் போலவே தெரிந்தார்.

இந்திரனைக் காண இயலாத தானவர்களைப் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கோபம் நிறைந்த பரத்வாஜர் மகனை {துரோணரைக்) காண பாண்டவர்களில் ஒருவராலும் இயலவில்லை. பிறகு பரத்வாஜரின் வீர மகன்{துரோணர்}, (பகைவர்) துருப்புகளைக் குழப்பியபடி, கூரிய கணைகளால் திருஷ்டத்யும்னன் படைப்பிரைவை வேகமாக எரிக்கத் தொடங்கினார். தன் நேரான கணைகளால் திசைகள் அனைத்தையும் மறைத்துத் தடுத்த அவர், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இருந்த பாண்டவப் படையை நசுக்கத் தொடங்கினார்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Thursday, April 07, 2016

வரமளித்த துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 012

Drona granted boon! | Drona-Parva-Section-012 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்கு வரமொன்றை அளிப்பதாகச் சொன்ன துரோணர்; யுதிஷ்டிரனை உயிரோடு பிடிக்க வேண்டிய துரியோதனன்; வரமளித்த துரோணர்; துரோணரின் உறுதியை படையினரிடம் வெளிப்படுத்திய துரியோதனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சரி, என் கண்களால் அனைத்தையும் கண்டவாறே, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் கொல்லப்பட்ட துரோணர் எப்படி வீழ்ந்தார் என்பதை நான் உமக்கு விவரிப்பேன்.


துருப்புகளின் தலைமைப் பொறுப்பை அடைந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்}, உமது மகனிடம் {துரியோதனனிடம்} துருப்புகள் அனைத்தின் மத்தியில் இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! மன்னா {துரியோதனா}, கௌரவர்களில் காளையான கடலுக்குச்செல்பவள் (கங்கையின்) மகனுக்கு {பீஷ்மருக்குப்} பிறகு, துருப்புகளின் தலைமைப் பொறுப்பில் உடனே நிறுவி என்னை மதித்த உனது செயலுக்குத் தகுந்த கனியை {பயனை} நீ அடைவாய். உனது எந்தக் காரியத்தை நான் இப்போது அடைய வேண்டும்? நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக” {என்றார் துரோணர்}.

பிறகு, கர்ணன், துச்சாசனன் மற்றும் பிறரிடம் ஆலோசித்த மன்னன் துரியோதனன், வெல்லப்பட முடியாத வீரரும், வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான ஆசானிடம் {துரோணரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “நீர் எனக்கு ஒரு வரத்தை அளிப்பதாக இருந்தால், தேர்வீரர்களில் முதன்மையான யுதிஷ்டிரனை உயிருடன் பிடித்து, இங்கே என்னிடம் கொண்டு வருவீராக” {என்றான் துரியோதனன்}.

பிறகு, அந்தக் குருக்களின் ஆசான், உமது மகனின் {துரியோதனனின்} அவ்வார்த்தைகளைக் கேட்டுத் துருப்புகள் அனைத்தையும் மகிழ்விக்கும் வண்ணம் அவனுக்கு {துரியோதனனுக்குப்} பின்வரும் பதிலைச் சொன்னார், “எவனைக் கைப்பற்றுவதை நீ விரும்புகிறாயோ, அந்தக் குந்தியின் மகன் (யுதிஷ்டிரன்) பாராட்டுக்குரியவன். ஓ! வீழ்த்தப்படக் கடினமானவனே {துரியோதனா}, வேறு எந்த வரத்தையோ, (உதராணமாக) அவனது கொலையையோ நீ கேட்கவில்லை. ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, எக்காரணத்திற்காக நீ அவனது மரணத்தை விரும்பவில்லை? ஓ! துரியோதனா, கொள்கையில் அறியாமை கொண்டவனல்ல நீ என்பதில் ஐயமில்லை. எனவே, யுதிஷ்டிரனின் மரணத்தை ஏன் நீ வேண்டவில்லை? நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அவனது மரணத்தை விரும்பும் எந்த எதிரியையும் கொண்டிருக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியமானதாகும். அவன் உயிரோடிருக்க நீ விரும்புகிறாயானால், (ஒன்று) உன் குலத்தை அழிவிலிருந்து பாதுகாக்க முயல்கிறாய், அல்லது, ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, போரில் பாண்டவர்களை வீழ்த்தி அவர்கள் நாட்டை அவர்களுக்கே கொடுத்து (அவர்களுடன்) சகோதர உறவை நிறுவ விரும்புகிறாய். அந்தப் புத்திசாலி இளவரசனின் {யுதிஷ்டிரனின்} பிறப்பு மங்கலகரமானது. நீயே கூட அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பாசம் கொண்டிருப்பதால், அவன் அஜாதசத்ரு (எதிரிகளற்றவன்) என்று உண்மையாகவே அழைக்கப்படுகிறான்” {என்றார் துரோணர்}.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரால் இப்படிச் சொல்லப்பட்டதும், உமது மகனின் {துரியோதனனின்} நெஞ்சில் எப்போதும் இருக்கும் உணர்ச்சியானது திடீரெனத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பிருஹஸ்பதியைப் போன்றாராலும் கூடத் தங்கள் முக உணர்ச்சிகளை மூடிமறைக்க முடியாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதனால், மகிழ்ச்சியால் நிறைந்த உமது மகன் {துரியோதனன்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்,

{துரியோதனன் துரோணரிடம்}, “போரில் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்வதால், ஓ! ஆசானே {துரோணரே}, வெற்றி எனதாகாது. யுதிஷ்டிரன் கொல்லப்பட்டால், பிறகு நம் அனைவரையும் பார்த்தன் {அர்ஜுனன்} கொன்றுவிடுவான் என்பதில் ஐயமில்லை. மேலும், அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் தேவர்களாலும் கொல்ல முடியாது. அவ்வழக்கில், அவர்களில் பிழைக்கும் ஒருவனும் கூட நம் அனைவரையும் அழித்துவிடுவான் [1]. எனினும், யுதிஷ்டிரன் தன் உறுதிமொழிகளில் உண்மைநிறைந்தவனாவான். அவனை {யுதிஷ்டிரனை} இங்கே (உயிருடன்) கொண்டு வந்து, மீண்டும் ஒருமுறை பகடையில் வீழ்த்தினால், பாண்டவர்கள் அனைவரும் யுதிஷ்டிரனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்கள் ஆகையால், அவர்கள் மீண்டும் ஒருமுறை காட்டுக்குச் செல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு வெற்றியே நீடித்த ஒன்று எனத் தெளிவாகத் தெரிகிறது. இதற்காகவே நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் கொலையை எவ்வழியிலும் நான் விரும்பவில்லை” {என்றான் துரியோதனன்}.

[1] வேறொரு பதிப்பில் இந்த இடம் வேறு மாதிரியாக இருக்கிறது, “பாண்டவர்கள் அனைவரும், தங்கள் மகன்களோடு போரில் கொல்லப்படுவார்களாகில், அப்போது அரசர்கள் அனைவரையும் மிச்சமின்றித் தன் வசப்படுத்திக் கொண்டு, சமுத்திரங்கள், அரண்யங்கள் ஆகியவற்றைக் கொண்டதும், செழிப்புள்ளதுமான அந்தப் பூமியை வென்று புருஷோத்தமான கிருஷ்ணன் திரௌபதிக்காவது, குந்திக்காவது கொடுத்து விடுவான். அந்தப் பாண்டவர்களுள் இந்தக் கிருஷ்ணன் மிச்சமாக இருப்பானாகில் இவனே நம்மை மிஞ்சும்படி செய்யமாட்டான்” என்று இருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

பொருளாதாய அறிவியலின் {அர்த்த தத்துவங்களின்} உண்மைகளை அறிந்தவரும், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவருமான துரோணர், துரியோதனனின் இந்தக் குறுக்குப் புத்தியை உறுதிசெய்து கொண்டு, சிறிது நேரம் சிந்தித்துப் பின்வரும் வழியில் அந்த வரத்தைக் கட்டுப்படுத்தி அவனுக்கு அளித்தார்.

துரோணர் {துரியோதனிடம்}, “வீரனான அர்ஜுனன், யுதிஷ்டிரனைப் போரில் பாதுகாக்கவில்லை எனில், அந்த மூத்த பாண்டவன் {யுதிஷ்டிரன்} ஏற்கனவே உன் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டதாக நினைத்துக் கொள்வாயாக. பார்த்தனை {அர்ஜுனனைப்} பொறுத்தவரை, இந்திரனின் தலைமையிலான தேவர்கள் மற்றும் அசுரர்களால் கூடப் போரில் அவனை எதிர்க்க இயலாது. இதன் காரணமாகவே, நீ செய்யச் சொல்லி என்னிடம் கேட்பதை நான் செய்யத் துணியேன்.

அர்ஜுனன் சீடன் என்பதிலும், ஆயுதங்களில் நானே அவனது முதல் ஆசான் என்பதிலும் ஐயமில்லை. எனினும், அவன் இளமையானவன், பெரும் நற்பேறைக் கொண்டவன், மேலும் (தன் நோக்கங்களைச் சாதிக்க) அதிகப்படியாக முனைபவனுமாவான். மேலும், அவன் {அர்ஜுனன்} இந்திரன் மற்றும் ருத்ரனிடமிருந்த பல ஆயுதங்களை அடைந்திருக்கிறான். {இவை} தவிரவும், அவன் உன்னால் {கோபம்} தூண்டப்பட்டவனாகவும் இருக்கிறான். எனவே, நீ என்னிடம் கேட்டதைச் செய்ய நான் துணியேன்.

செயல்படுத்தக்கூடிய எவ்வழியிலாவது அர்ஜுனன் போரில் இருந்து நீக்கப்படட்டும். பார்த்தன் {அர்ஜுனன்} விலக்கப்பட்டதும், மன்னன் யுதிஷ்டிரன் ஏற்கனவே வீழ்ந்துவிட்டதாக நீ கருதலாம். ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனா}, அவனை {யுதிஷ்டிரனைக்} கொல்வதில் அல்ல, அவனைக் கைப்பற்றுவதிலேயே வெற்றி இருக்கிறது. தந்திரத்தால் கூட அவனைக் கைப்பற்றுவது சாதிக்கப்படலாம்.

உண்மையில், மனிதர்களில் புலியான குந்திமகன் தனஞ்சயன் {அர்ஜுனன்} களத்தில் இருந்து விலக்கப்பட்டால், உண்மைக்கும், நீதிக்கும் தன்னை அர்ப்பணித்திருக்கும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்} போரில் என் முன்னிலையில் ஒருக்கணம் நின்றாலும் கூட அவனைக் கைப்பற்றி இன்றே அவனை உன் கட்டுப்பாட்டின் கீழ் நான் கொண்டு வருவேன் என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, பல்குனனின் {அர்ஜுனனின்} முன்னிலையில் இந்திரனின் தலைமையிலான தேவர்கள் மற்றும் அசுரர்களாலும் கூடப் போரில் யுதிஷ்டிரன் பிடிக்க இயலாதவனாவான்” என்றார் {துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த வரம்புகளுக்கு உடன்பட்டு மன்னனை {யுதிஷ்டிரனைக்} கைப்பற்றுவதாகத் துரோணர் உறுதியளித்தாலும், உமது முட்டாள் மகன்கள், யுதிஷ்டிரன் ஏற்கனவே பிடிபட்டதாகவே கருதினர். பாண்டவர்களிடம் துரோணர் கொண்ட சார்பு நிலையை {பாரபட்சத்தை} உமது மகன் (துரியோதனன்) அறிவான். எனவே, துரோணரைத் தன் உறுதிமொழியில் நிலைக்கச் செய்யும் பொருட்டு, அவன் {துரியோதனன்} அந்த ஆலோசனைகளை வெளியிட்டான். பிறகு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, துரோணர் (மூத்த) பாண்டவனை {யுதிஷ்டிரனைக்} கைப்பற்றுவதாக வாக்குறுதி அளித்த அந்தச் செய்தி, துரியோதனனால் அவனது துருப்பினர் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது {பிரகடனப்படுத்தப்பட்டது}” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Wednesday, April 06, 2016

கிருஷ்ணன் பெருமை சொன்ன திருதராஷ்டிரன்! - துரோண பர்வம் பகுதி – 011

The greatness of Krishna listed by Dhritarashtra! | Drona-Parva-Section-011 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 11)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் வரலாற்றை நினைவுகூர்ந்த திருதராஷ்டிரன் தன் மகன்களின் நிலையை எண்ணி வருந்தியது...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, கோவிந்தன் {கிருஷ்ணன்} வேறு எந்த மனிதனாலும் சாதிக்க முடியாத அருஞ்செயல்களைச் செய்தான், அந்த வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தெய்வீகச் செயல்களைக் கேட்பாயாக.

ஓ! சஞ்சயா, மாட்டிடையன் (நந்தன்) குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அந்த உயர் ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்}, சிறுவனாக இருந்தபோதே தன் கரங்களின் வலிமையை மூவுலகங்களும் அறியச் செய்தான்.

பலத்தில் (தெய்வீக குதிரையான) உச்சைஸ்வனுக்கு இணையானவனும், காற்றின் வேகத்தைக் கொண்டவனும், யமுனையின் (கரைகளில் உள்ள) காடுகளில் வாழ்ந்தவனுமான ஹயராஜனைக் [1] கொன்றான்.

[1] ஹயராஜன் என்பான் உண்மையில் குதிரைகளின் இளவரசனாவான். கேசி என்றும் அழைக்கப்பட்ட அவன் குதிரையின் வடிவில் இருந்த அசுரனாவான் என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.

பசுக்களுக்குக் காலனாக எழுந்தவனும், பயங்கரச் செயல்கள் புரிபவனும், காளையின் வடிவில் இருந்தவனுமான தானவனைத் {ரிஷபனைத்} தன் வெறும் கைகள் இரண்டால் தன் குழந்தைப் பருவத்திலேயே கொன்றான்.


தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, பிரலம்பன், ஜம்பன், பீடன் மற்றும் தேவர்களுக்குப் பயங்கரனாக இருந்த முரண் ஆகிய வலிமைமிக்க அசுரர்களையும் கொன்றான்.

அதுபோலவே ஜராசந்தனால் பாதுகாக்கப்பட்ட பயங்கர சக்தி கொண்ட கம்சனும், அவனது தொண்டர்களும், தன்னாற்றலின் துணையை மட்டுமே [2] கொண்ட கிருஷ்ணனால் போரில் கொல்லப்பட்டனர்.

[2] எந்த ஆயுதங்களும் இல்லாமல் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

போரில் பெரும் வல்லமையும் ஆற்றலும் கொண்டவனும், ஒரு முழு அக்ஷௌஹிணியின் தலைவனும், போஜர்களின் மன்னனும், கம்சனின் இரண்டாவது தம்பியும், சூரசேனர்களின் மன்னனுமான சுநாமன், எதிரிகளைக் கொல்பவனும், பலதேவனைத் தனக்கு அடுத்தவனாகக் கொண்டவனுமான அந்தக் கிருஷ்ணனால் அவனுடைய துருப்புகளுடன் சேர்த்துப் போரில் எரிக்கப்பட்டான்.

பெரும் கோபம் கொண்ட இருபிறப்பாள முனிவர் {துர்வாசர்}, {கிருஷ்ணனின்} (ஆராதனையில் மனம் நிறைந்து) அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} வரங்களை அளித்தார்.

தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், பெரும் துணிச்சல் மிக்கவனுமான கிருஷ்ணன், ஒரு சுயம்வரத்தில் மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தி, காந்தாரர்கள் மன்னனின் மகளைக் கவர்ந்தான். கோபம் கொண்ட அந்த மன்னர்களை, ஏதோ அவர்கள் பிறப்பால் குதிரைகளைப் போல அவன் {கிருஷ்ணன்}, தன் திருமணத் தேரில் பூட்டிச் சாட்டையால் காயப்படுத்தினான்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, வேறொருவனை {பீமனைக்} கருவியாகப் பயன்படுத்தி ஒரு முழு அக்ஷௌஹிணி துருப்புகளுக்குத் தலைவனான ஜராசந்தனைக் கொல்லச் செய்தான் [3].

[3] மகதர்களின் பலமிக்க மன்னனும், கிருஷ்ணனின் உறுதியான எதிரியுமான ஜராசந்தன், கிருஷ்ணனின் தூண்டுதலின் பேரில் பீமனால் கொல்லப்பட்டான் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

வலிமைமிக்கக் கிருஷ்ணன், மன்னர்களின் தலைவனான சேதிகளின் வீர மன்னனையும் {சிசுபாலனையும்}, ஏதோ ஒரு விலங்கை {கொல்வதைப்} போல, ஆர்க்கியம் சம்பந்தமாகப் பின்னவன் சச்சரவை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தில் கொன்றான்.

தன் ஆற்றலை வெளிப்படுத்திய மாதவன் {கிருஷ்ணன்} ஆகாயத்தில் இருந்ததும், சால்வனால் காக்கப்பட்டதும், நாட முடியாததுமான “சௌபம்” என்று அழைக்கப்பட்ட தைத்திய நகரத்தைக் கடலுக்குள் வீசினான்.

அங்கர்கள், வங்கர்கள், கலிங்கர்கள், மகதர்கள், காசிகள், கோசலர்கள், வாத்சியர்கள், கார்க்யர்கள், பௌண்டரர்கள் ஆகிய இவர்களை அனைவரையும் அவன் {கிருஷ்ணன்} போரில் வீழ்த்தினான்.

அவந்திகள், தெற்கத்தியர்கள், மலைவாசிகள், தசேரகர்கள், காஸ்மீரர்கள், ஔரஷிகர்கள், பிசாசர்கள், சமுத்கலர்கள், காம்போஜர்கள், வாடதானர்கள், சோழர்கள், பாண்டியர்கள், ஓ! சஞ்சயா, திர்கர்த்தர்கள், மாலவர்கள், வீழ்த்துவதற்குக் கடினமான தரதர்கள், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்த வந்த கசர்கள், சகர்கள், தொண்டர்களுடன் கூடிய யவனர்கள் ஆகியோர் அனைவரும் அந்தத் தாமரைக் கண்ணனால் {கிருஷ்ணனால்} வீழ்த்தப்பட்டனர்.

பழங்காலத்தில் அனைத்து வகை நீர்வாழ் உயிரினங்களாலும் சூழப்பட்ட கடலில் புகுந்து நீரின் ஆழத்திற்குள் இருந்த வருணனையும் போரில் வென்றான்.

அந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பாதாளத்தின் ஆழங்களில் வாழ்ந்த பஞ்சஜன்யனைப் (பஞ்சஜன்யன் என்ற பெயர் கொண்ட தானவனைப்} போரில் கொன்று பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் தெய்வீக சங்கை அடைந்தான்.

வலிமைமிக்கவனான கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்து காண்டவ வனத்தில் அக்னியை மனம் நிறையச் செய்து, வெல்லப்படமுடியாத நெருப்பாயுதத்தையும் {ஆக்னேயாஸ்திரத்தையும்}, (சுதர்சனம் என்றழைக்கப்படும்} சக்கரத்தையும் பெற்றான்.

வீரனான கிருஷ்ணன், கருடன் மீதேறிச் சென்று அமராவதியை (அமராவதிவாசிகளை} அச்சுறுத்தி மகேந்திரனிடம் இருந்து {இந்திரனின் அரண்மனையில் இருந்து} பாரிஜாதத்தை {பாரிஜாதம் என்றழைக்கப்பட்ட தெய்வீக மலரைக்} [4] கொண்டு வந்தான். கிருஷ்ணனின் ஆற்றலை அறிந்த சக்ரன் {இந்திரன்} அச்செயலை அமைதியாகப் பொறுத்தான்.

[4] அமராவதியில் இருந்து பூமிக்குப் பாரிஜாதத்தை மறுநடவு செய்தான் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் “பாரிஜாத மரத்தைக் கொண்டுவந்தான்” என்றிருக்கிறது.

மன்னர்களில், கிருஷ்ணனால் வீழ்த்தப்பட்டாத எவரும் இருப்பதாக நாம் கேட்டதில்லை.

ஓ! சஞ்சயா, என் சபையில் அந்தக் கமலக்கண்ணன் செய்த அற்புதமான செயலை அவனைத் தவிர இவ்வுலகத்தில் வேறு எவன் செய்யத்தகுந்தவன்?

அர்ப்பணிப்பால் {பக்தியால்} சரணமடைந்த நான், கிருஷ்ணனை ஈசுவரனாகக் கண்ட காரணத்தினால், (அந்த அருஞ்செயலைக் குறித்த) அனைத்தும் என்னால் நன்கு அறியப்பட்டது. ஓ! சஞ்சயா, அதைச் சாட்சியாக என் கண்களால் கண்ட என்னால், பெரும் சக்தியும், பெரும் புத்திக்கூர்மையும் கொண்ட ரிஷிகேசனுடைய (முடிவற்ற) சாதனைகளின் எல்லையைக் காண இயலவில்லை.

கதன், சாம்பன், பிரத்யும்னன், விதூரதன், [5] சாருதேஷ்ணன், சாரணன், உல்முகன், நிசடன், வீரனான ஜில்லிபப்ரு, பிருது, விபிருது, சமீகன், அரிமேஜயன் ஆகிய இவர்களும், தாக்குவதில் சாதித்தவர்களான இன்னும் பிற வலிமைமிக்க விருஷ்ணி வீரர்களும், விருஷ்ணி வீரனான அந்த உயர் ஆன்ம கேசவனால் {கிருஷ்ணனால்} அழைக்கப்படும்போது, பாண்டவப் படையில் தங்கள் நிலைகளை எடுத்துப் போர்க்களத்தில் நிற்பார்கள். பிறகு (என் தரப்பில்) அனைத்தும் பெரும் ஆபத்துக்குள்ளாகும். இதுவே என் எண்ணம்.

[5] வேறொரு பதிப்பில் இங்கே அகாவஹன், அனிருத்தன், என்று கூடுதல் பெயர்களும் இருக்கின்றன.

ஜனார்த்தனன் எங்கே இருக்கிறானோ, அங்கே பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், கைலாச சிகரத்திற்கு ஒப்பானவனும், காட்டு மலர்களாலான மாலைகளை அணிந்தவனும், கலப்பையை ஆயுதமாகத் தரித்தவனுமான வீர ராமன் {பலராமன்} இருப்பான்.

ஓ! சஞ்சயா, அனைவருக்கும் தந்தை அந்த வாசுதேவன் என மறுபிறப்பாளர்கள் எவனைச் சொல்கிறார்களோ, அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} பாண்டவர்களுக்காகப் போரிடுவானா? ஓ! மகனே, ஓ! சஞ்சயா, பாண்டவர்களுக்காக அவன் கவசம் தரித்தானெனில், அவனது எதிராளியாக இருக்க நம்மில் ஒருவரும் இல்லை.

கௌரவர்கள், பாண்டவர்களை வீழ்த்த நேர்ந்தால், அந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, பின்னவர்களுக்காக {பாண்டவர்களுக்காக} தன் வலிமைமிக்க ஆயுதத்தை எடுப்பான். அந்த மனிதர்களில் புலி, அந்த வலிமைமிக்கவன் {கிருஷ்ணன்}, போரில் மன்னர்கள் அனைவரையும், கௌரவர்களையும் கொன்று குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} முழு உலகத்தையும் கொடுப்பான். ரிஷிகேசனை {கிருஷ்ணனைத்} தேரோட்டியாகவும், தனஞ்சயனை {அர்ஜுனனை} அதன் போராளியாகவும் கொண்ட தேரை, வேறு எந்தத் தேரால் போரில் எதிர்க்க முடியும்? எவ்வழியிலும் குருக்களால் {கௌரவர்களால்} வெற்றியை அடைய முடியாது. எனவே, அந்தப் போர் எவ்வாறு நடைபெற்றது என்பது அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக.

அர்ஜுனன், கேசவனின் {கிருஷ்ணனின்} உயிராவான், மேலும் கிருஷ்ணனே எப்போதும் வெற்றியாவான், கிருஷ்ணனிலேயே எப்போதும் புகழும் இருக்கிறது. அனைத்து உலகங்களிலும் பீபத்சு {அர்ஜுனன்} வெல்லப்படமுடியாதவனாவான். கேசவனிலேயே முடிவில்லாத புண்ணியங்கள் அதிகமாக இருக்கிறது. மூடனான துரியோதனன் விதியின் காரணமாகக் கிருஷ்ணனை, அந்தக் கேசவனை அறியாததால், தன் முன்னே காலனின் பாசத்தை {சுருக்குக் கயிற்றைக்} கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஐயோ, தாசார்ஹ குலத்தோனான கிருஷ்ணனையும், பாண்டுவின் மகனான அர்ஜுனனையும் துரியோதனன் அறியவில்லை.

இந்த உயர் ஆன்மாக்கள் புராதனத் தேவர்களாவர். அவர்களே நரனும், நாராயணனுமாவர். உண்மையில் அவர்கள் ஒரே ஆன்மாவைக் கொண்டவர்களாகயிருப்பினும், பூமியில் அவர்கள் தனித்தனி வடிவம் கொண்டவர்களாக மனிதர்களால் காணப்படுகிறார்கள். உலகம் பரந்த புகழைக் கொண்ட இந்த வெல்லப்பட முடியாத இணை நினைத்தால், தங்கள் மனத்தாலேயே இந்தப் படையை அழித்துவிட முடியும். அவர்கள் கொண்ட மனிதநேயத்தின் விளைவாலேயே அவர்கள் அதை {அழிவை} விரும்பவில்லை [6].

[6] தேவர்களாக இருப்பினும் அவர்கள் தங்கள் பிறப்பை மனிதர்களாகக் கொண்டிருக்கிறார்கள், எனவே அவர்கள் மனிதர்களின் வழிகளிலேயே தங்கள் நோக்கங்களை அடைவார்கள். இதன் காரணமாகவே அவர்கள் இந்தப் படையை அழிக்க விரும்பாமல் இருக்கிறார்கள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

பீஷ்மரின் மரணம் மற்றும், உயர் ஆன்ம துரோணரின் கொலை ஆகியன யுகமே மாறிவிட்டதைப் போல உணர்வுகளைப் புரட்டுகின்றன. உண்மையில், பிரம்மச்சரியத்தாலோ, வேதங்களின் கல்வியாலோ, (அறச்) சடங்குகளாலோ, ஆயுதங்களாலோ எவனாலும் மரணத்தைத் தவிர்க்க இயலாது. போரில் வெல்லப்பட முடியாதவர்களும், உலகங்கள் அனைத்திலும் மதிக்கப்படுபவர்களும், ஆயுதங்களை அறிந்த வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணரின் கொலையைக் கேட்டும், ஓ! சஞ்சயா, நான் இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறேன்?

பீஷ்மர் மற்றும் துரோணரின் மரணத்தின் விளைவாக, ஓ! சஞ்சயா, யுதிஷ்டிரனின் எந்தச் செழிப்பைக் கண்டு நாங்கள் பொறாமை கொண்டோமோ, அதையே இனிமேல் நாங்கள் சார்ந்து வாழ வேண்டியிருக்கும். உண்மையில், என் செயல்களின் விளைவாலேயே குருக்களுக்கு இந்த அழிவு நேர்ந்திருக்கிறது. ஓ! சூதா {சஞ்சயா}, அழிவடையக் கனிந்திருக்கும் இவர்களைக் கொல்ல புல்லும் இடியாக மாறும் [7]. எந்த யுதிஷ்டிரனின் கோபத்தால் பீஷ்மரும், துரோணரும் வீழ்ந்தனரோ அந்த யுதிஷ்டிரன் அடையப்போகும் உலகம் முடிவிலான செழிப்பைக் கொண்டது. அவனது {யுதிஷ்டிரனது} மனநிலையின் விளைவாலேயே நல்லோர் யுதிஷ்டிரனின் தரப்பை அடைந்து என் மகனுக்கு {துரியோதனனுக்குப்} பகையாகினர்.

[7] காலத்தினால் பக்குவம் செய்யப்பட்ட மனிதர்களைக் கொல்லும் விஷயத்தில் புல்லும் கூட வஜ்ராயுதம் போல ஆகிறது.

அனைத்தையும் அழிக்க வந்த குரூரமான அந்தக் காலத்தை {யாராலும்} வெற்றி கொள்ள முடியாது. புத்திமான்களால் ஒருவிதமாகக் கணக்கிடப்பட்ட காரியங்களும் கூட, விதியால் வேறு விதமாக நிகழ்கின்றன. இதுவே என் எண்ணம். எனவே, தவிர்க்க முடியாததும், மிகக் கடுமையான சோக நினைவைத் தரக்கூடியதும், (நம்மால்) கடக்க முடியாததுமான இந்தப் பயங்கரப் பேரிடர் நிகழ்ந்த போது நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” {என்றான் திருதராஷ்டிரன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top