Showing posts with label வேள்விமுகம். Show all posts
Showing posts with label வேள்விமுகம். Show all posts

Sunday, January 05, 2014

வேள்வி முகம் - 5 | முதற்கனல் | வெண்முரசு - ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=43885
http://venmurasu.in/2014/01/05/நூல்-ஒன்று-முதற்கனல்-5/

இந்தப் பகுதியில் வியாசர் குறித்த அறிமுகமும் செய்திகளும் வருகின்றன. மேலும் மஹாபாரதம் உரைக்க ஆரம்பிக்கிறார் வைசம்பாயனர்.

*********************************************************************************
வேள்வி முகம் - 5 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...
**************************************************************************************** இப்பதிவில் வியாசர் தங்கியிருந்த  இடம் வியாசவனம் என்று அழைக்கப்படுகிறது. வியாசர் ஒரு ஆலமரத்தடியில் தனது குடிலை அமைத்து தன்னந்தனியாக இருந்ததாகவும், பிறகு அவரது சீடர்களும் வந்து குடிலமைத்துக் கொண்டதாகவும் சொல்கிறார்.

வியாசரை கடும் முனிவராக கிட்டத்தட்ட செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் சோழ மன்னனின் குருவைப் போலத் தெரிகிறார். ஏனோ இந்தப் பதிவைப் படிக்கும்போது ஆயிரத்தில் ஒருவன் என் கண் முன்னே நிழலாடுகிறது.

விநாயகர் தனது தந்தத்தை ஒடித்து எழுதினார் என்பதைக் கேட்டிருக்கிறோம். அதை திரு.ஜெயமோகன் அவர்கள் ஏற்று புரிந்து கொள்ளும் விதம், வரலாறு குறித்த நமது மூடிய கண்களைத் திறக்கின்றன.

வியாசரை சீடர்கள் தூக்கிச் செல்லும் காட்சியும், அவர்களது பயணமும், வியாசர் தூங்கிய விதமும், வைசம்பாயனரின் தாய்ப்பாசம் போன்ற அன்பும், கண்முன் இல்லாத அந்த உலகத்திலேயே நம்மை வாழ வைக்கின்றன.

வியாசர் ஆஸ்தீகர் சந்திக்கும் இடமும், ஜனமேஜயனின் சீற்றமும், அதற்கு வியாசரின் பதிலுமெனக் கொடுத்து, அடுத்து என்ன என்று நம்மை ஏக்கப்பார்வை பார்க்க வைத்து இன்றைய பதிவை முடித்துவிட்டார்.

இந்தப் பதிவின் படம் அருமையாக வந்திருக்கிறது. இருப்பினும், இக்காட்சிக்கு பதிலாக அந்தக் கல் ஆலமரத்தில் வியாசர் தனது சீடர்களுடன் இருப்பது போன்று இருந்திருந்தாலோ, அல்லது காரிருளில் வியாசர் தனித்து கானகத்தில் நடப்பது போன்றோ இருந்திருந்தால் கூடுதல் சிறப்படைந்திருக்கும் எனக் கருதுகிறேன்.

இந்தப் பதிவில் எனக்குப் பிடித்த வரிகள்

* அதன்பின் வியாசர் குருஷேத்திரத்தை விட்டு விலகிச்செல்வதையே தன் இலக்காகக் கொண்டு பாரதவர்ஷமெங்கும் அலைந்தார். பனிமுடிகள் சூழ்ந்த இமையத்தின் சரிவுகளிலும் மழையும் வெயிலும் பொழிந்துகிடந்த தென்னகச்சமவெளிகளிலும் வாழ்ந்தார்.

கற்கக்கூடிய நூல்களையெல்லாம் கற்றார். மறக்கமுடிந்தவற்றையெல்லாம் மறந்தார். அத்தனைக்குப் பின்னரும் குருஷேத்திரத்தின் கனவுருத்தோற்றம் அவருக்குள் அப்படியேதான் இருந்தது. அவருக்குள்ளும் வெளியிலும் வீசிய எந்தக் கொடுங்காற்றும் அந்த ஓவியத்திரையை அசைக்கவில்லை.

* எதிர்ப்பால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்ட அவர்கள் நடுவே கற்பனையால் காலத்தை வென்றவர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர்.

* வியாசரைக் குறித்த வர்ணனை //மரணத்தை வென்றாலும் மூப்பை வெல்லமுடியாத உடல் தசை வற்றி காட்டுத்தீயில் எரிந்து எஞ்சிய சுள்ளி போலிருந்தது. ஒருகாலத்தில் தாடியாகவும் தலைமயிராகவும் விழுதுவிட்டிருந்த கனத்த சடைக்கற்றைகள் முழுமையாகவே உதிர்ந்துபோய், தேமல்கள் பரவிச் சுருங்கிய தோல்மூடிய மண்டைஓடு தெரிந்தது. ஒன்றுடன் ஒன்று

ஏறிப்பின்னிய விரல்களில் நகங்கள் உள்நோக்கிச் சுருண்டிருக்க, கைகளிலும் கழுத்திலும் நரம்புகள் தளர்ந்த கொடிகள்போல் ஓடின. உள்ளடங்கிய வாயும் தொங்கிய நாசியும், சிப்பிகள்போன்று மூடிய கண்களுமாக அங்கே இருந்த அவருக்குள் அவர் வெகுதொலைவில் இருந்துகொண்டிருந்தார். வைசம்பாயனர் குருநாதரின் பாதங்களை வணங்கியபோது அவரது கண்கள் அதிர்ந்து பின்பு திறந்தன. கரிய உதடுகள் மெல்ல அசைந்தன.//

*  இந்த நகரம் தோல்கிழிந்த பெருமுரசு போல எனக்குத் தோன்றியது. உங்களைத் தடுக்கவில்லை என்றால் இந்த உலகத்தையே இப்படி ஆக்கிவிடுவீர்கள் என்று அறிந்தேன். இந்தவேள்வியை நிறுத்த வேண்டியது என்கடமை என்று கொண்டேன்” என்றான்.

* சமரமுனிவர் “ஆதியிலிருந்தது ஒன்றே. முதல்முடிவற்ற, இதுஅதுவற்ற, முதலியற்கை. அது பிளவற்ற காலத்தில் இருந்தது. அதில் முதல் எண்ணமெனும் மஹத் உருவானது. அது இருப்பு எனும் அகங்காரமாகியது. அகங்காரம் முக்குணங்களாக மாறி அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன. அண்டப்பேரியக்கம் தொடங்கியது” என்றார்.

*  “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்” என்றான்.

* மஹாபாரதம் முதல் அறிமுகம் //வைசம்பாயனர் சுவடியைப் பிரித்தார்.அனுஷ்டுப்பு சந்தத்தில் பதினெட்டு பர்வங்களாக இயற்றப்பட்டிருந்த பெருங்காவியத்தின் பெயர் ‘ஸ்ரீஜய’. அச்சுவடியை தன் தலைமேல் வைத்து வணங்கிய வைசம்பாயனர் ஓங்கிய குரலில் பாடினார். “நீரெனில் கடல், ஒளியெனில் சூரியன், இறையெனில் பிரம்மம், சொல்லெனில் வியாசனின் சொல்லேயாகும். அதுஅழியாது வாழ்க!”//இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, January 04, 2014

வேள்வி முகம் - 4 | முதற்கனல் | வெண்முரசு - ஜெயமோகன்


http://www.jeyamohan.in/?p=43860

இந்தப் பகுதியில் ஜனமேஜயன் வைசம்பாயனர் மூலமாக வேள்வியைத் தொடர்ந்து செய்தல்; ஜனமேஜயனின் சிறுவயது நிகழ்வான சரமா என்ற நாய் கொடுத்த சாபம்; பாம்புகள் வந்து வேள்வியில் மடிவது; ஆஸ்தீகர் தட்சகனைக் காப்பாற்றியது ஆகிய நிகழ்வுகள் வருகின்றன.

****************************************************************************************
 வேள்வி முகம் - 4 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...

****************************************************************************************
இந்தப் பதிவில் வரும் நாய்க்குட்டி கதை முழு மஹாபாரதத்தில் உண்டு என்றாலும், அந்த நாய்க்குட்டியின் பெயர் அதில் காணக்கிடைக்காது. மேலும் நாய்க்குட்டி விழியிழந்தது என்ற செய்தியும் கிடையாது. மேலும் சரமா என்ற பெயர் கொண்ட அந்த நாய்க்குட்டியின் தாயை, நாய்களுக்கான தெய்வமாக மாற்றிச் சொல்லியிருக்கிறார்.  //எட்டு நாட்களுக்கு முன் காட்டுநாய் ஒன்று பெற்றிட்டது அந்தக்குட்டி. அதை அதன் அன்னை ஷிப்ரதேஜஸ் என அழைத்தது.// //தர்ப்பை முட்கள் கண்ணில் குத்த நாய்க்குட்டி விழிகளை இழந்து ஓலமிட்டழுதபடி செடிகளில் முட்டியும், கற்களில் தடுக்கியும், கொடிகளில் சிக்கியும் காட்டுக்குள் ஓடியது.//

முழு மஹாபாரதத்தில் சூத சாதியைச் சேர்ந்த கட்டுமானக் கலைஞனின் பெயர் லோஹிதாக்ஷா என்று வருகிறது. ஆனால் இங்கு வேறு பெயர் சுட்டப்படுகிறது. //ஜனமேஜயன் அக்கணத்தில் வேள்விச்சாலையைக் கட்டிய சிற்பி விஸ்வசேனன் நிமித்தம்பார்த்து அந்தவேள்விக்கு ஒரு அந்தணனால் தடைவரக்கூடும் என்று சொன்ன சொற்களைத்தான் நினைவுகூர்ந்தார்.//


இந்தப் பதிவில் எனக்குப் பிடித்த வரிகள்


* புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன என்று அவர் அறிந்தார்.

* அன்னை மடியில் தாவி ஏறும் குழந்தைகள் போல, ஆற்றில் கலக்கும் சிற்றோடைகள் போல நெருப்பை அணுகி அதில் இணைந்துகொண்டன.

* இவ்வுலகத்தின் அழுக்குகள் எல்லாம் பொசுங்கி விட்டன… நாளை உதித்து எழும் சூரியன் புத்தம்புதிய பூமியை பார்க்கப்போகிறான்!

* எரிந்து எழுந்த வேள்விச்சுடரில் அவர்கள் தங்கள் இறுதி ஆகுதியைச் செலுத்தினர். தலைமுறைகள் உறங்கும் தங்கள் விந்துக்களின் வீரியங்கள் அனைத்தும் அவியாகுக என்றனர். அந்த மதலைகளைப் பற்றிய தங்கள் கனவுகளும் எரிந்தழிக என்றனர்.

* என் மூதாதையர் எனக்களித்த நல்லூழ்கள் அனைத்தையும் கேளுங்கள். இதை மட்டும் கேட்காதீர்கள்.

* “மாமன்னரே, நெறிநூல்களின்படி மண்ணாளும் குலமே தாய்வழி வருவது. வேதவிதிகளுக்கான குலம் தந்தையின் வழியாக வருவதே. நான் வேத அதிகாரம் கொண்ட அந்தணரிஷியின் மைந்தன்” என்றான். மன்னன் வைசம்பாயனரை நோக்க “ஆம் அவர் சொல்வது சரிதான்” என்றார் அவர்.

* ஆஸ்தீகன் அமைதியான குரலில் “ஜனமேஜய மன்னரே! நான் செய்ததன் பொருள் இப்போது உங்களுக்குப் புரியாது. ஒருநாள் உங்கள் தலைமுறைகள் இதை புரிந்துகொள்வார்கள்… நான் உங்களுக்காக உங்கள் மக்களுக்காக இந்த உலகத்தின் நன்மைக்காகவே இதைச் செய்தேன். இது என் தன்னறம்” என்றான்.இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, January 03, 2014

வேள்வி முகம் - 3 | முதற்கனல் | வெண்முரசு - ஜெயமோகன்

வேள்வி முகம் - 3 | முதற்கனல் | வெண்முரசு - ஜெயமோகன்
http://www.jeyamohan.in/?p=43847


இந்தப் பகுதியில் ஜனமேஜயன் தனது தந்தை பரிக்ஷித்தின் கதையை உதங்கா மூலமாக அறிதல். உதங்கா பரிக்ஷித் சமீகரை அவமதித்ததையும் அதனால் அவனுக்கு ஏற்பட்ட சாபத்தையும், பரிக்ஷித் இறந்த முறையையும் எடுத்துச் சொல்கிறார் ஜெயமோகன்

*********************************************************
******************************* 
 வேள்வி முகம் - 3 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...
****************************************************************************************
இந்தப் பதிவு ஜனமேஜயன், அபிமன்யு, உத்தரை, கிருஷ்ணன், பரிக்ஷித்து, பரிக்ஷித்துக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என ஓட்டமும் நடையுமாக பல கதைகளை விவரித்துவிடுகின்றது. இருப்பினும் சொற்களின் ஆழம் நம்மை நின்று கவனித்து செல்ல வைக்கிறது.

திரு.ஜெயமோகன் அவர்கள் முற்றிலும் வித்தியாசமான கதையைத் தருகிறார். அது மூலத்திற்கு சற்றும் நெருக்கமில்லாததாக இருந்தாலும் வசீகரமாக இருக்கிறது. குறிப்பாக சமீகரின் மகனான சிரிங்கின் என்ற பாத்திரத்தை குரங்காகவும் அவனது பெயரை கவிதாஜன் என்பதாகவும் சொல்கிறார். இவற்றை எந்தப் புராணத்தில் இருந்து எடுத்தாரோ தெரியவில்லை. இந்தக் கதை முற்றிலும் புதியதாக இருக்கிறது. அனகன் என்ற பாம்பைக் குறித்த செய்திகளும் புதியதாகவே இருக்கிறது. மேலும் தட்சகனை எப்படி தட்சனாக உருவகிக்கிறார் என்பது விளங்கவில்லை. எது எப்படி இருப்பினும் கதை சொல்லும் அழகு தனித்து நிற்கிறது. படிக்கச் சுவையாக இருக்கிறது.

இனி வேள்வி முகம் 3-ல் நான் ரசித்த சில வரிகள்.
  1. உத்தங்கர் உரக்கச்சிரித்து ‘நினைத்தேன். ஒவ்வொரு கணமும் நிகழும் விதியின் ஆட்டத்தைப்பற்றிய முழுமையான அறியாமை இல்லையேல் ஒருவன் இந்த போலி ஆடுகளத்தின் முன் குனிந்து அமரமுடியாது’ என்றார். ‘ஆடு ,ஆடு, உன்னைத்தேடி உனக்கான விஷம் வந்துசேரும்’ என்றபின் திரும்பிச்சென்றார்.
  2. அபிமன்யுவின் மரணத்தின் போது உத்தரையின் மனநிலையை //அரண்மனைக்கு அப்பால் என்ன நடக்கிறதென்பதே அறியாத பேதைப்பெண்ணாக இருந்தாள். ஒவ்வொருநாளும் இறப்புச்செய்திகள் வருவதைக்கொண்டுதான் அவள் குருஷேத்ரப்போரையே அறிந்தாள். அவள் இரவுகள் தோறும் அஞ்சிக்கொண்டிருந்த செய்தி ஒருநாள் வந்தது. அவள் சிலநாட்கள் மட்டுமே அறிந்திருந்த இளம்கணவன், இன்னமும் முழுமையாக அவள் பார்த்திராத முகத்தைக்கொண்ட சிறுவன், மீளமுடியாத படைவளையத்தில் சிக்கி களத்தில் உயிரிழந்தான்// என்ற வார்த்தைகளால் படம்பிடித்துக் காட்டுகிறார்.
  3. பரீட்சித்தின் பெயர்க்காரணம் //சிப்பிகளுக்குள் வளர்ந்த சோதனையாலேயே அவனை அனைவரும் பரீட்சித் என்று அழைத்தனர்.//
  4. பாண்டவர்களின் நெடும்பயணம் //பரீட்சித்துக்கு பதினெட்டு வயதிருக்கையில் சக்ரவர்த்தி யுதிஷ்டிரர் அவனை இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசனாக பட்டம்சூட்டி ஆட்சியதிகாரத்தை யுயுத்சுவிடம் கையளித்துவிட்டு தன் சகோதரர்களுடன் மகாபிரஸ்தானம் சென்றார்.//
  5. ஆனகன் என்ற பாம்பைப் பற்றிய இது முற்றிலும் புதிய செய்தி //ஜனமேஜயா, அந்தப்பாம்பின் பெயர் ஆனகன் என்றார் உத்தங்கர். மண்ணுலகை நிறைத்திருக்கும் நாகர்களின் உலகைச்சேர்ந்தவன் அவன். குருகுலமன்னர்களை ஒவ்வொருகணமும் நாகங்கள் பின் தொடர்ந்துகொண்டிருந்தன. அன்றைய பணியை ஆனகன் செய்துகொண்டிருந்தான். //
  6. சமீகரின் மகன் பெயர் சிரிங்கின் ஆனால் இந்தப் பதிவில் சிரிங்கின் என்கிறார்.
  7. குருக்ஷேத்திரம் குறித்து சொல்லுதல் //அஸ்தினபுரியின் ஒவ்வொரு மனமும் அறிந்த இடம், மூன்றுதலைமுறைகளாக எவருமே வந்திராத இடம் என்றான் கவிஜாதன். இங்கே வருவதற்கு மானுடப்பாதைகள் இல்லை, நரிகளின் தடம் மட்டுமே உள்ளது. இந்த மண்ணின் பெயர்தான் குருஷேத்ரம்.//
  8. இந்தப் பதிவின் படம் இந்த வரிகளை விளக்குகிறது, //அங்கே ஆடும் நிழல்களை கவனிக்கும்படி கவிஜாதன் சொன்னான். ஒளியைக் கண்ட கண்களை நிழலைக்காணும்படி பழக்கியபோது பரீட்சித் நாகங்களைக் கண்டான். இருண்ட மெல்லிய நிழலாட்டங்களாக நாகங்கள் அங்கே நிறைந்திருந்தன. கண் தெளியும்தோறும் நாகங்கள் பெருகிக்கொண்டே சென்று ஒரு கட்டத்தில் கருநாகங்களாலான மாபெரும் வலையொன்றைக் காணமுடிந்தது. நெளிந்துகொண்டிருந்த அந்தவலையில் அந்த படுகளம் சிக்கி அசைந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது.//
  9. இங்கே தட்சகன் என்ற பாம்பை தட்சன் என்கிறார். ஒரு வேளை பார்வதியின் தகப்பனான தட்சனே தட்கன் என ஏற்றுக் கொள்கிறாரோ என்னவோ //அதோ சுடர்விடும் அந்த இரு செவ்விழிகளும் நாகங்களின் அரசனான தட்சனுடையவை. இன்றில் இருந்து ஏழாம் நாள், மார்கழி மாதம் சப்தரிஷி விண்மீன்கள் ஏழும் ஒரே ராசியில் வந்து சேரும்போது நீ அவன் விஷக்கடியை ஏற்று உயிர்விடுவாய்’ என்றான் கவிஜாதன்.//
  10. நாகம் சம்பந்தமான தத்துவ செய்தி //நாகங்கள் தங்கள் நிழல்களில் இருந்தே மீண்டும் முளைத்தெழக்கூடியவை. ஒவ்வொரு உடலிலும் நாகங்கள் உள்ளன. மிருகங்களில் வாலாகவும் நாவாகவும் இருப்பவை நாகங்களே. மனிதர்களின் கைநகங்களெல்லாம் நாகத்தின் பற்களே’ //

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


வேள்வி முகம் - 2 | முதற்கனல் | வெண்முரசு - ஜெயமோகன்

இங்கு விவாதிக்கப்படும் பதிவு http://www.jeyamohan.in/?p=43838 என்ற லிங்கில் இருக்கிறது.

இப்பதிவில் மானசா தேவியால் வழியனுப்பப்பட்ட ஆஸ்தீகரின் பயணம் விவரிக்கப்படுகிறது
*******************************************************
இப்பதிவில் நான் ரசித்தவை....

ஆஸ்தீகர் பயணத்திற்காக எடுத்தச்சென்ற பொருட்களைப் பற்றிய குறிப்புடன் ஆரம்பிக்கிறது வேள்விமுகம் - 2

மகனை வழியனுப்பிவிட்டு பார்த்துக் கொண்டிருக்கும் தாய் நம் முன் ஓவியமாகத் தெரிகிறாள். அந்த அளவு வார்த்தைகளையில் அழுத்தம்.

பாரதப் பண்பாட்டைச் சொல்ல //பாரதத்தின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் அஸ்தினபுரிக்குச் செல்லும் ஒரு பாதை இருந்தது. இரவுகளில் மரத்தடிகளிலும் மழைபெய்யும்போது கோயில்மண்டபங்களிலும் கழித்தபடி கால்களில் புழுதிபடிய, சிவந்த சருமம் வெந்து கருக அவன் நடந்து சென்றுகொண்டே இருந்தான். மரவுரியணிந்த முனிகுமாரனை ஒவ்வொரு ஊரிலும் குடும்பத்தவர்கள் வந்து வணங்கி உணவும் நீரும் இடமும் அளித்து வழியனுப்பிவைத்தனர்.// ஊரே முனிவர்களை விருந்தினராகக் கருதி உணவு கொடுத்தனர் என்ற செய்தியைச் சொல்கிறார்.

//இருநூற்றெழுபது நாட்களுக்குப்பின் அவன் அஸ்தினபுரியின் பெருமதில்வளைவை சிறிய செம்மண்குன்று ஒன்றின் மேல் நின்று பார்த்தான்.// என்ற செய்தியின் மூலம் ஆஸ்தீகரின் பயண கால அளவைச் சொல்கிறார். முழு மஹாபாரதத்தில் இந்த விவரங்களைத் தேடினால் கிடைக்காது.

அஸ்தினாபுரி வர்ணனை அழகாக இருக்கிறது.

ஜனமேஜயன் நடத்திய நாக வேள்வியை //அஸ்தினபுரியில் மாமன்னன் ஜனமேஜயன் பலகட்டங்களாக ஐந்துமாதங்களாக நடத்திவந்த மாபெரும் பூதவேள்வி ஒன்று அன்று முடிவுக்கு வந்துகொண்டிருந்தது.// என்று சொல்கிறார்.

இன்றைய பதிவில் இருக்கும் படத்திற்கான கரு இந்த வரிகளே //வானத்தில் எழுந்ததுபோல ஜனமேஜயனின் அரண்மனைமுகடு தெரிந்தது. மரப்பலகையால் செய்யப்பட்டு வெண்சுண்ணமும் அரக்கும் கலந்து பூசப்பட்ட கவிழ்ந்த தாமரைவடிவமான கூரைக்குவை, மண்ணிலிறங்கிய மேகக்குமிழ்போல. அதன் மேல் குருவம்சத்தின் அமுதகலசச் சின்னத்தைத் தாங்கிய பெரிய பொன்னிறக்கொடி துவண்டு அசைந்தது. அதைச்சுற்றி தாமரைக்கூட்டங்கள் போல வெண்ணிறமான சிறியமுகடுகள். அரண்மனையின் உள்கோட்டை செம்மண் நிறத்தில் வட்டமாக சுற்றிவளைத்திருக்க அதன் நுழைவாசலின் மரத்தாலான தோரண வளைவுக்குமேல் தொங்கிய காவல்மணியாகிய காஞ்சனம் தாலிச்சின்னம்போல பொன்னிறமாக சுடர்விட்டுக்கொண்டிருந்தது.//

வர்ணபேதம் குறித்து //நடுவே சென்று மேலும் இரண்டாகப் பிரிந்த பந்தல்களில் ஒருபக்கம் செந்நிற தலைப்பாகைகள் அணிந்த சத்ரியர். மறுபக்கம் பொன்னிறத் தலைப்பாகைகள் அணிந்த வைசியர். அப்பால் நீலநிறத்தலைப்பாகை அணிந்த சூத்திரர். ஒவ்வொரு பகுதியிலும் பெண்களுக்கான இடம் தனியாக பகுக்கப்பட்டிருந்தது.// என்று சொல்கிறார். இவையும் தேவி பாகவதத்தில் இருக்கிறதா அல்லது ஆசிரியரின் புனைவா என்பது தெரியவில்லை.

கட்டியம் கூறுதல் வித்தியாசமாக இருக்கிறது //முதலில் கட்டியம் சொல்லும் கோல்காரன் உள்ளே வந்தான். கையில் பெரிய பொன்னாலான தலைக்கோலை வைத்திருந்தான். மிடுக்குடன் உள்ளே வந்து அவைமேடை மேல் ஏறி நின்று தலைக்கோலை மேலே தூக்கி உரக்கக் கூவினான் “ஜெயவிஜயீபவ! அஸ்தினபுரத்தை ஆளும் வேந்தர், அத்திரி முனிவரின் கொடிவழிவந்தவர், குருகுலத்தோன்றல் பரிட்சித் மாமன்னரின் புதல்வர், மண்ணுக்கும் விண்ணுக்கும் இனியவர், பாரதவர்ஷத்தின் தலைவர் ஜனமேஜய மகாசக்ரவர்த்தி எழுந்தருள்கிறார்!”//

ஜனமேஜயன் வேள்விப்பந்தலுக்கு வருவதுடன் இன்றைய பதிவை முடிக்கிறார்.

*******************************************************

மேற்கண்டவாறு வெண்முரசின் ஒவ்வொரு பதிவையும் இதே போல எனது முகநூல் நிலைத்தகவலில் இந்த வலைப்பூவிலும் தினமும் பதியலாம் என்றிருக்கிறேன்.

அதாவது, வெண்முரசின் அந்தப் பதிவின் பாத்திரங்களும் சம்பவங்களும், முழு மஹாபாரதத்தில் எங்கெல்லாம் ஒத்திசைகிறதோ, அவற்றைத் திரட்டி முழு மஹாபாரதத்தின் அந்த லிங்குகளைக் கொடுத்தலும் வெண்முரசின் அந்தப் பதிவில் நான் ரசித்த பகுதிகளைச் சொல்தலும் அந்த நிலைத்தகவலில் இருக்கும்.

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Wednesday, January 01, 2014

வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1 பகுதி ஒன்று : வேள்விமுகம்

திரு.ஜெயமோகன் அவர்களின் மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் முதல் பகுதி வெளி வந்துவிட்டது.

காலையில் எழுந்ததும் அவரது வலைத்தளத்தில் தான் விழித்தேன். கணினியை எழுப்பும்போதே எப்படி ஆரம்பித்திருப்பாரோ, கதைக்களம் எவ்வாறிருக்கும், எந்தக் கதையில் இருந்து ஆரம்பித்திருப்பார். எதில் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். தொடக்கம் அருமையாக இருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே சுவிட்சில் இருந்து கை எடுத்தேன்.

கணினி எழுந்ததுமே, நெருப்பு நரியின் இலட்சனையைத் தேடினேன். அது தினந்தோறும் செய்வதுதான் என்றாலும் இன்றைக்கு அதைச் செய்ய அதிக நேரம் பிடித்ததாக உணர்ந்தேன். நெருப்பு நரியுடன் ஜெயமோகனின் வெண்முரசு பக்கமும் எழுந்தது.

எடுத்தவுடன் பரபரவென்று பதிவின் கீழே சென்றேன். படம் இருந்தது. அற்புதமான படம். ஆனால் எதற்காக இப்படி ஒரு படம். சரி படிக்காமல் அனுமானிக்கமுடியாது என்று கருதி வெண்முரசின் முதல் பகுதியான வேள்வி முகத்தில் பயணித்தேன். "வேள்வி முகம்" இந்தத் தலைப்பில் தான் எவ்வளவு பொருள்.

மானச தேவி என்ற சொல்லைப் படித்ததுமே, இது சரியான ஆரம்பம் ஆஸ்தீகரின் கதையைத் தொடுகிறார் ஜெயமோகன் என்று ஊகித்துவிட்டேன். ஆனால் அந்த ஆஸ்தீகர், ஜரத்காருவின் கதையைச் சொல்வதற்கு முன் அவர் தரும் வர்ணனை நம்மை அமானுஷ்ய உலகத்திற்கே இட்டுச் செல்கின்றன. இந்த ஒரு பதிவை வைத்துக் கொண்டே ஹாலிவுட்டில் ஒரு திரைப்படமே எடுத்துவிடலாம். மேம்போக்காகப் பார்ப்பதற்கு இது மிகைப்பட்ட பாராட்டாகத் தெரியும். ஆனால் ஆழ்ந்து அவதானித்துப் படித்தால் அதன் பிரம்மாண்டமும், இந்த ஒருபதிவில் அவர் எவ்வளவு நீண்ட காலம் நம்மைப் பயணிக்க வைக்கிறார் என்பதும் புரியும்.

இந்திய இலக்கியங்களில் உலக உயிரினங்களின் தோற்றம் ஒரு பெரும் முட்டையில் இருந்து உருவெடுத்ததாகச் சொல்வார்கள். கிட்டத்தட்ட அதையே உருவமாக, ஆதி இருளில் கிடந்த பெரும் கண்ணில்லா பாம்பு, தனது வாலைத் தனது வாயில் கவ்வி சுருண்டு கிடந்தது என்கிறார் திரு.ஜெயமோகன். என்ன அற்புதமான உருவகம்?

மேலும் நாகம் என்பதற்கு பொருள், நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதையும் கதையுனேயே இணைக்கிறார். ஒரு குழந்தைக்கு {ஆஸ்தீகர்} கதை சொல்லும் தாய் {மானச தேவி}, நாகம் என்றால் "நான் இல்லை" என்ற பொருளைச் சொல்வதாகச் சொல்கிறார். தட்சன் என்ற பெயருக்கு இமையாத கண்கள் கொண்டவன் என்ற பொருளாம். மரீதி என்ற பெயருக்கு வெண்ணிற ஒளி என்ற பொருளையும் சொல்கிறார். மேலும் முடிவில்லாத காமமே தட்சன், முடிவில்லாத வளமே வீரிணி என்றும் சொல்கிறார். ஒரே பதிவில் நமக்கு எவ்வளவு விவரங்கள் கிடைக்கின்றன பாருங்கள். இவற்றை முழு மஹாபாரதத்தைப் படித்தாலும் பெற முடியாது. ஆனால் மகாபாரதத்தை சிறிதாவது அறியாதவர்களுக்கு நேரடியாக வெண்முரசைப் படித்தால் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும். ஆனால் அதுவும் ஒரு திரில்லிங்கான சுகானுபவமாகத்தான் இருக்கும்.

ஆதிநாகம் தான் கண்ணில்லாதது என்று ஆரம்பிக்கிறாரே, பிறகு அதற்கு கண்கள் எப்படி உருவாகின. அதற்கு எவ்வளவு அழகான விளக்கத்தைத் தருகிறார் பாருங்கள். "கண்ணில்லா நாகத்திற்கு அகத்திலிருந்து இச்சை பிறந்து இரண்டு கண்களாக அதன் முகத்தில் திறந்தது" என்கிறார்

காலம் உருவான கதையை "இரு நாகங்கள் தழுவித்தழுவி இறுகிய பின் மேலும் தழுவும் பொருட்டு அவர்களின் தழுவல் சற்றே தளர்ந்த போது இருவருக்கும் நடுவே காலம் புகுந்து கொண்டது." என்கிறார். இதற்கு முன் இதுபோன்ற ஒரு தத்துவ வர்ணனையை நான் படித்ததில்லை.

"நீங்களும் நானும் நாம் ஒருபோதும் அறியமுடியாத காலநாடகத்தின் இரு சிறு துளிகள் மட்டுமே" என்று தன் கணவரிடம் பேசிய மானச தேவி, அதைத் தனது குழந்தையிடம் {ஆஸ்தீகரிடம்} சொல்கிறாள்.

மானச தேவியின் மகனை ஆயுள் இல்லாதவனாக சபிக்கிறார் ஜரத்காரு, அதைத் தன் மகனிடம் சொல்லும் தாய் எப்படிச் சொல்கிறார் என்று பாருங்கள், "உனக்கு முதுமை இல்லை. உன் தந்தை உனக்களித்த வரமாகவே அதைக்கொள். உன்னை முதியவனாக பார்க்கும் நிலை எனக்கும் இல்லை. அது என் காதலுக்கு அவர் அளித்த கொடை என்றே எண்ணுகிறேன்." என்று சொல்கிறாள்.

ஓவியர் திரு.ஷண்முகவேல் அவர்களின் இந்தப் பதிவுக்கான ஓவியத்தை வார்த்தைகளால் பாராட்டுவது தகாது. ஆசிரியரின் உள்ளக்காட்சிகளைத் தன் மணக்கண்ணில், கண்டு அதைத் தூரிகையில் வடித்து, கணினியில் மெருக்கேற்றி பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வெண்முரசின் அனைத்துப் பதிவுகளுக்கும் இது போன்ற ஒரு படம் இருந்தால் மிக அருமையாக இருக்கும் என்று மனம் எதிர்பார்க்கிறது.

மொத்தத்தில் முதல் பதிவே அற்புதமாக வந்திருக்கிறது.

பி.கு.: முதல்பகுதி தேவிபாகவதத்துக்கும் கடன்பட்டது. வயக்கவீட்டு விசாலாட்சியம்மாவின் குரலில் இருந்து தொடங்கியிருக்கிறேன் என்று திரு.ஜெயமோகன் அவர்கள் தனது வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

திரு.ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு நாவலின் முதல் பகுதியான வேள்வி முகத்தைப் படிப்பதற்கு முன் முழுமஹாபாரதத்தின் கீழ்க்கண்ட சுட்டிகளில் இருக்கும் பதிவுகளைப் படித்த பிறகு படிக்க ஆரம்பிப்பது, அப்பதிவை எளிதாக அணுக உதவியாக இருக்கும்

1. ஜரத்காருவும் யயவரர்களும் | ஆதிபர்வம் - பகுதி 13 - http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section13.html
4. வாசுகியின் கவலை |ஆதிபர்வம் - பகுதி 39 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section39.html
6. ஜரத்காரு கேட்ட பிச்சை | ஆதிபர்வம் - பகுதி 46 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section46.html
7. மனைவியைப் பிரிந்த ஜரத்காரு | ஆதிபர்வம் - பகுதி 47 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section47.html
8. ஆஸ்தீகர் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 48 -  http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section48.html

திரு.ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு நாவலின் முதல் பகுதியான வேள்வி முகத்தைப் படிக்க - http://www.jeyamohan.in/?p=43820 என்ற லிங்குக்குச் செல்லவும்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top