The Marriage of Yayati! | Adi Parva - Section 81 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 17)
பதிவின் சுருக்கம் : தேவயானியை மீண்டும் கண்ட யயாதி; அவளும், சர்மிஷ்டையும் யார் என்று கேட்ட யயாதி; தன்னை மணந்து கொள்ள வேண்டும் என யயாதியைக் கேட்ட தேவயானி; அஞ்சிய யயாதி; யயாதிக்கும், தேவயானிக்கும் இடையில் நடந்த உரையாடல்; தேவயானியை யயாதிக்கு மனைவியாக அளித்த சுக்கிராச்சாரியார்...
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே!, சில காலம் கழித்து, அழகான நிறம் கொண்ட தேவயானி, இன்பமாக இருக்கக் கானகத்திற்குச் சென்றாள்.(1) சர்மிஷ்டையுடனும் மற்ற பணிப்பெண்களுடனும் சென்ற தேவயானி, பழைய இடத்திலேயே திரிந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.(2) அத்தனை பணியாட்களின் சேவையையும் ஏற்றுப் பெருமகிழ்வு கொண்டாள். இதயம் இலகுவாகி விளையாடிக்கொண்டு, மலர்களிலிருக்கும் தேனையும், பலதரப்பட்ட கனிகளையும் உண்டு களித்தாள். அந்த நேரத்தில், நகுஷனின் மகன் யயாதி மிகுந்த களைப்புடனும், தாகத்துடனும் மானைத் தேடிக் கொண்டு அங்கு வந்தான். அங்கு, தேவலோக ஆபரணங்கள் பூண்டு, நறுமணத்துடன் திகழ்ந்த தேவயானி, சர்மிஷ்டை மற்றும் பல மங்கையரையும் கண்டான்.(3-5) அங்கிருந்தவர்களிலேயே இனிய புன்னகையுடைய தேவயானி, அழகிய நிறத்துடனும், இணையில்லாத அழகுடனும், இயல்பாகச் சாய்ந்திருந்தாள். அவளது கால்களைச் சர்மிஷ்டை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள்.(6)