Sunday, August 31, 2014

ஜெயத்ரதனின் சிறுமை! - வனபர்வம் பகுதி 265

The wretchedness of Jayadratha!  | Vana Parva - Section 265 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

ஜெயத்ரதன் திரௌபதியை அணுகியது; திரௌபதி ஜெயத்ரதனைக் கண்டித்து, நீண்ட பேச்சுகளால் தாமதம் செய்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதா {ஜனமேஜயா}, கோடிகாக்கியன் {கோடிகன்}, கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்} தனக்கும் இடையில் நடந்தவற்றை, காத்திருந்த {ஜெயத்ரதன் உட்பட்ட} அந்த இளவரசர்களுக்குச் சொன்னான். கோடிகாக்கியனின் வார்த்தைகளைக் கேட்ட சிபி குலக் கொழுந்தான ஜெயத்ரதன், “அவள் பேசியதை மட்டுமே கேட்ட என் இதயம், அந்தப் பெண்குல ரத்தினத்தின் மேல் காதல் கொள்கிறது. இப்படியிருக்கும்போது, நீ ஏன் (வெற்றியடையாமல்) திரும்பினாய்? நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கோடிகா}, இந்தப் பெண்ணை ஒரு முறை கண்ட பிறகு, மற்ற பெண்களெல்லாம் எனக்கு {பெண்} குரங்குகளைப் போலத் தெரிகிறார்கள். நான் இவளைக் கண்டவுடன், இவள் எனது இதயத்தைக் கொள்ளையிட்டுவிட்டாள். ஓ! சைப்பியா {கோடிகா}, இந்த அற்புதமான மங்கை, மனித வகையைச் சேர்ந்தவள்தானா என்று எனக்குச் சொல்?" என்று கேட்டான். அதற்குக் கோடிகன், “இந்த மங்கை புகழ்பெற்ற இளவரசியான கிருஷ்ணையாவாள் {திரௌபதியாவாள்}. இவள் துருபதனின் மகளும், பாண்டுவின் ஐந்து மகன்களுக்கும் பிரபலமான மனைவியுமாவாள். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} இவள் மதிப்பிற்குரிய, அன்பிற்குரிய, கற்புடைய மனைவியாவாள். இவளை உன்னுடன் சௌவீரத்திற்கு எடுத்துச் செல்" என்றான்.




வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிந்து, சௌவீரம் மற்றும் பிற நாடுகளுக்கு மன்னனான தீய மனம் கொண்ட ஜெயத்ரதனுக்கு இப்படிச் சொல்லப்பட்டதும், அவன் {ஜெயத்ரதன்}, “நான் திரௌபதியைப் பார்க்க வேண்டும்" என்றான். பிறகு, ஆறு பேருடன், அந்தத் தனிமையான ஆசிரமத்திற்குள், சிங்கக் குகைக்குள் நுழையும் ஓநாய் போல நுழைந்தான். பிறகு அவன் {ஜெயத்ரதன்} கிருஷ்ணையிடம் {திரௌபதி}, “உனக்கு வாழ்த்துகள், அருமையான மங்கையே! யாருடைய செழிப்பை நீ எப்போதும் விரும்புகிறாயோ அந்த உனது கணவர்கள் நன்றாக இருக்கிறார்களா?” என்று கேட்டான். அதற்குத் திரௌபதி, “குந்தியின் மகனும், குரு குலத்தைச் சேர்ந்தவருமான மன்னர் யுதிஷ்டிரரும், அவரது தம்பிகளும், நானும், நீர் விசாரிக்கும் அனைவரும் நலமாக இருக்கின்றோம். உமது நாடு, உமது அரசு,  அந்த அரசின் நிதிக் கருவூலம், உமது படைகள் ஆகியன நலமா? தனிப்பெரும் ஆட்சியாளராக, சைப்பியம், சிபி, சிந்து மற்றும் உமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள வளமை மிகுந்த நாடுகள் அனைத்தையும் நீதியுடன் ஆட்சி செய்கிறீரா? ஓ! இளவரசரே, உமது பாதங்களைக் கழுவி கொள்ள இந்த நீரைப் பெற்றுக் கொள்ளும். இந்த இருக்கையில் அமரும். உமது படை அணியினரின் காலை உணவுக்காக நான் ஐம்பது விலங்குகளைத் தருகிறேன். இது போக, குந்தியின் மகனான யுதிஷ்டிரர், மான்குட்டிகளையும் {Porcine deer = பன்றி போன்ற மான்கள்}, நயங்குமான்களையும், புள்ளி மான்களையும், இரலைகளையும் {கலைமான்களையும்}, எண்காற்புட்களையும் {சரபங்களையும் = சிங்கத்தையே கொல்லவல்ல எட்டுக் கால் பறவைகளையும்}, முயல்களையும், ருருமான்களையும், கரடிகளையும், சம்பரமான்களையும், கவயங்களையும், இன்னும் பல விலங்குகளையும், காட்டுப்பன்றிகளையும், காட்டெருமைகளையும், நான்கு கால் கொண்ட விலங்குகள் பலவற்றையும் உமக்குக் கொடுப்பார்" என்றாள்.

இதைக்கேட்ட ஜெயத்ரதன், “என்னிடம் உள்ள அனைத்தும் நன்றாக இருக்கின்றன. எங்களுக்குக் காலை உணவு அளிக்க முன்வந்து, உண்மையில் நீ அதை ஒருவகையில் கொடுத்துவிட்டாய் {By offering to provide our breakfast, thou hast in a manner actually done it.}. இப்போது வா. என் தேரில் பயணித்து, முழுமையான மகிழ்ச்சியை அடைவாயாக. நாடு பறிக்கப்பட்டு, சிறிதளவும் மாற்றமடைய முடியாதப் பேறைப் பெற்று, ஆற்றல்கள் முடங்கி, காட்டில் பரிதாபகரமான நிலையில் வாழும் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} நீ எதற்காகவும் பொருட்படுத்த வேண்டியதில்லை. உன்னைப் போன்ற அறிவுள்ள பெண் ஏழைக் கணவனுடன் இணைந்திருக்கமாட்டாள். அவள் {உன்னைப் போன்ற அறிவுள்ள பெண்} தனது தலைவன் வளமையில் இருக்கும்போது அவனைத் தொடர வேண்டும். ஆனால், கேடுகாலத்தில் அவனைக் கைவிட வேண்டும். பாண்டுவின் மகன்கள், தங்கள் உயர்ந்த நிலையில் இருந்து விழுந்துவிட்டனர். காலத்திற்கு அவர்களது நாட்டைத் தொலைத்துவிட்டார்கள். எனவே, அவர்களிடம் மதிப்புக் கொண்டு,  அவர்களது துன்பத்தில் நீ பங்கு கொள்ள வேண்டியதில்லை. எனவே, ஓ! அழகிய இடை கொண்டவளே {திரௌபதி}, பாண்டுவின் மகன்களைக் கைவிட்டு, எனது மனைவியாகி மகிழ்ச்சியடைந்து, என்னுடன் சிந்து மற்றும் சௌவீர நாடுகளைப் பகிர்ந்து கொள்" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயன்} தொடர்ந்தார், “சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணை அவ்விடத்தில் இருந்து விலகி, புருவங்களை நெறித்து முகம்சுழிதாள். அவனது வார்த்தைகளைப் பெரிதும் அவமதித்து, அலட்சியம் செய்த அந்த மெல்லிடையாளான கிருஷ்ணை {திரௌபதி}, சிந்து மன்னனிடம் {ஜெயத்ரதனிடம்}, “மீண்டும் அப்படிப் பேசாதே! உனக்கு வெட்கமாக இல்லையா? உன்னைப் பாதுகாத்துக் கொள்" என்று சொன்னாள். தனது கணவன் திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்தக் குற்றமற்ற குணம் கொண்ட மங்கை {திரௌபதி}, நீண்ட நேரம் {அவனிடம்} பேசி, அவனை முழுமையாக ஏமாற்றத் தொடங்கினாள்"
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


திரௌபதியின் வரவேற்பு! - வனபர்வம் பகுதி 264

The reception of Draupadi!  | Vana Parva - Section 264 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

திரௌபதி கோடிகனுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சிபி குலத்தவனால் {கோடிகனால்} இப்படிக் கேட்கப்பட்ட இளவரசி திரௌபதி, தன் கண்களை மெதுவாக நகர்த்தி, கடம்ப மர கிளையில் இருந்த தனது பிடியை விட்டு, தன் பட்டாடையைச் சரி செய்து கொண்டு, “ஓ! இளவரசரே {கோடிகா}, என்னைப் போன்ற ஒருத்தி உம்மிடம் இப்படி உரையாடுவது தகாது என்பது எனக்குத் தெரியும். ஆனால், உம்மிடம் பேச இங்கு வேறு ஆடவரோ, பெண்மணியோ இல்லை. நான் இங்கே தனியாக இருக்கிறேன். அதனால் என்னைப் பேச அனுமதியும். தகுதியுடைய ஐயா {கோடிகா}, என்னுடைய பாலினத்தை {நான் பெண் என்பதை} நினைவுகூர்ந்து, இந்தக் காட்டில் தனிமையில் இருக்கும் நான் உம்மிடம் பேசக்கூடாது என்பதை அறியும்.


ஓ! சைப்பியரே {கோடிகா}, சுரதனின் மகனான உம்மைக் கோடிகன் என்ற பெயரால் மக்கள் அறிகிறார்கள் என்றும் நான் {உம்மிடம் இருந்து} அறிந்தேன். எனவே, நான் என் பங்குக்கு, எனது உறவினர்களையும், எனது புகழ்வாய்ந்த குலத்தையும் இப்போது சொல்கிறேன். நான் மன்னர் துருபதரின் மகள், கிருஷ்ணை {திரௌபதி} என்ற பெயரால் மக்கள் என்னை அறிவார்கள். காண்டவப்பிரஸ்தத்தில் வாழ்ந்து வந்த ஐவரை நான் கணவர்களாக ஏற்றுக் கொண்டேன் என்பதை நீர் கேள்விப்பட்டிருக்கலாம். யுதிஷ்டிரர், பீமசேனர், அர்ஜுனர் மற்றும் மாத்ரியின் இருமகன்கள் {நகுல, சகாதேவர்கள்}ப் ஆகிய அந்த உயர்ந்த மனிதர்கள் {எனது கணவர்கள்}, என்னை இங்கே விட்டுவிட்டு, வேட்டையாடுவதற்காக நான்கு திசைகளில் சென்றிருக்கிறார்கள்.

மன்னர் {யுதிஷ்டிரர்} கிழக்குத் திசையில் சென்றிருக்கிறார், பீமசேனர் தெற்கிலும், அர்ஜுனர் மேற்கிலும், இரட்டைச் சகோதரர்கள் {நகுலன், சகாதேவன் ஆகியோர்} வடக்கிலும் சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் {பாண்டவர்களிடம்} உரிய வரவேற்பைப் பெற்று நீங்கள் செல்லலாம். எனவே, இப்போது உங்கள் வண்டிகளை விட்டுக் கீழிறங்கி அவற்றுக்கு {வண்டிகளுக்கு} நீங்கள் விடை கொடுங்கள். உயர் ஆன்மா கொண்ட தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} விருந்தினர்களை மிகவும் பிடிக்கும். அவர் உங்களைக் கண்டு மிகவும் மகிழ்வார் என்பது நிச்சயம்" என்றாள். அந்தச் சைப்பியனின் மகனிடம் {கோடிகனிடம்} இப்படிச் சொன்ன, சந்திரன் போன்ற அழகிய முகம் கொண்ட துருபதன் மகள் {திரௌபதி}, தன் கணவன் {யுதிஷ்டிரன்} விருந்தோம்பல் செய்யும் குணத்தை நன்றாக நினைவுகூர்ந்து, தன் விசாலமான குடிசைக்குள் நுழைந்தாள்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


திரௌபதியிடம் பேசிய கோடிகன்! - வனபர்வம் பகுதி 263

Kotika spoke to Draupadi!  | Vana Parva - Section 263 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

ஜெயத்ரதன் கட்டளைக்கிணங்க கோடிகன் திரௌபதியிடம் சென்று பேசுவது; அவள் யார், யாருடைய மனைவி என்று விசாரித்து, தங்களைக் குறித்த அறிமுகத்தைச் சொல்வது ...

கோடிகன் {திரௌபதியிடம்} சொன்னான், "அற்புதமான மங்கையே, இரவு நேரத்தில் சுடர்விடும் நெருப்பெனப் பிரம்மாண்டமாகத் தெரிகிறாயே. இந்த ஆசிரமத்தில் இருக்கும் கடம்ப மரத்தில் சாய்ந்து கொண்டு, தென்றலால் தாலாட்டப்பட்டுத் தனியாக நிற்கும் நீ யார்? நேர்த்தியான அழகுடன் இருக்கும் நீ, இந்தக் காட்டுப் பகுதியில் எந்தப் பயத்தையும் உணரவில்லையா? {இங்கே உன்னைக் கண்டு}, தேவதையோ, யக்ஷியோ, தானவியோ, அற்புதமான அப்சரசோ, தைத்தியர் எவரின் மனைவியோ, நாக மன்னனின் மகளோ, ராட்சசியோ, வருணனின், யமனின், சோமனின், குபேரனின் மகளோ மனித உருவம் கொண்டு இந்தக் கானகத்தில் உலவுவதாக நான் உன்னைக் குறித்து எண்ணுகிறேன். அல்லது, தாத்ரி {தாதா}, விதாத்ரி {விதாதா}, சாவித்ரி {சூரியன்}, விபு, சக்ரன் {இந்திரன்} ஆகியோரின் மாளிகையில் இருந்து இங்கு வந்திருக்கிறாயா?



நாங்கள் யார் என்று எங்களிடம் நீ கேட்கவில்லை. உன்னை இங்கு யார் பாதுகாக்கிறார்கள் என்பதை நாங்கள் அறியவில்லை. மரியாதையுடன் உன்னைக் கேட்கிறேன், ஓ! நன்மங்கையே, பலமிக்க உனது தந்தை யார்? உனது கணவன், உறவிர்கள், குலம் ஆகிய பெயர்களை எங்களுக்குச் சொல். நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதையும் சொல். எங்களைப் பொறுத்தவரையில், நான் மன்னன் சுரதனின் மகன், என்னை மக்கள் கோடிகன் என்று அறிவார்கள். அந்தத் தங்கத்தேரில் வேள்விப்பீடத்தில் அமர்ந்திருக்கும் நெருப்புப்போல அமர்ந்திருக்கும் அந்த மனிதன், தாமரை இதழ்களைப் போல நீண்ட கண்களையுடைய அந்த வீரன், க்ஷேமங்கரன் என்ற பெயரால் அறியப்படும் திரிகார்த்த {நாட்டின்} மன்னனாவான். அவனுக்குப் பின்னால், இப்போதும் உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பவன் புளிந்த {குளிந்த நாட்டு} மன்னனின் புகழ்பெற்ற மகனாவான். பெரும் வில்லைத் தாங்கி, அகன்ற கண்களுடன், மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, மலைகளின் மார்புகளில் வாழ்பவன் அவன். கரிய நிறமும், அழகும் கொண்டவனும், எதிரகளை அழிப்பவனும், அந்தக் குளத்தின் அருகில் நின்று கொண்டிருப்பவனுமான அந்த இளைஞன், இக்ஷவாகு குலத்தில் வந்த சுபலனின் மகனாவான்.

ஓ! அற்புதமான மங்கையே, ஜெயத்ரதன் என்ற பெயர் பெற்ற, சௌவீர {நாட்டு} மன்னனைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கலாம். வேள்வி பீடத்தில் தோன்றும் நெருப்பு போல இருப்பவர்களும், சிவந்த குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இருப்பவர்களுமான அங்காரகன், குஞ்சரன், குப்தகன், சத்ருஞ்சயன், ஸ்ரீஞ்சயன், சுப்பிரவிருத்தன், பிரபாங்கரன், பிரமரன், ரவி, சூரன், பிரதாபன் மற்றும் குஹனன் ஆகிய பனிரெண்டு சௌவீர இளவரசர்களைத் தனது கொடி தாங்குபவர்களாக வைத்துக் கொண்டு, {போரில்} ஆறாயிரம் தேர்களின் தலைவனாக {முன்னணியில்} இருந்து கொண்டு, குதிரைகளுடனும், யானைகளுடன், காலாட்படையுடனும், செல்லும் அவனும் {ஜெயத்ரதனும்} அதோ அங்கே இருக்கிறான். அந்த மன்னனின் தம்பிகளான பலமிக்க வலாஹகன், அநீகன், விதாரணன் மற்றும் பிறரும் அவனைப் பின்தொடரும் தொண்டர்களுக்கு மத்தியில் இருக்கின்றனர். வலிய கரங்களும் கால்களும் கொண்ட இந்த இளைஞர்கள் அனைவரும் தீரச்செயல்களின் மலர்களாவர். அந்த மன்னன் {ஜெயத்ரதன்}, இவர்களுடனே, மருதர்களால் சூழப்பட்ட இந்திரனைப் போலத் தனது பயணத்தைச் செய்கிறான். ஓ! அழகிய கூந்தல் கொண்டவளே, நீ யாருடைய மனைவி, யாருடைய மகள் என்று (இது போன்ற விஷயங்களை) அறியாத எங்களுக்கு அவற்றைச் சொல்வாயாக" என்று கேட்டான் {கோடிகன்}
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, August 30, 2014

திரௌபதியைக் கண்ட ஜெயத்ரதன்! - வனபர்வம் பகுதி 262

Jayadratha beheld Draupadi!  | Vana Parva - Section 262 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்கள் அனைவரும் வேட்டைக்குச் சென்றது; அவ்வேளையில் ஜெயத்ரதன் திரௌபதியைக் காண்பது; அவளைக் கண்டு மயங்கிய அவன், அவளைப் பற்றி அறிய கோடிகனை அனுப்பியது ...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாரதக் குலத்தைச் சார்ந்த இத்தகுப் பெரும் வீரர்கள் காம்யகம் எனும் பெரும் காட்டில் தேவர்களைப் போலச் சுற்றிக் கொண்டும், வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டும், நாட்டின் எண்ணிலடங்கா காட்டுபகுதிகளையும், அழகான மலர்கள் பூக்கும் காலம் கொண்ட கானகத்தின் பரந்த பகுதிகளையும் மகிழ்ச்சியுடன் கண்டனர். ஒவ்வொருவரும் இந்திரனைப் போல இருந்து, எதிரிகளுக்குப் பயங்கரத்தைக் கொடுக்கும் அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அங்கே சிறிது காலம் தங்கினர். ஒரு நாள், எதிரிகளை வெல்லும் அந்தப் பராக்கிரமசாலிகள் {பாண்டவர்கள்}, தங்களுடன் இருந்த அந்தணர்களுக்கு உணவு கொடுப்பதற்காக, அனைத்து பக்கங்களுக்கும் வேட்டையாடச் சென்றனர். தவ மகிமை கொண்ட பெரும் துறவியான திருணபிந்துவிடமும், தங்கள் ஆன்ம வழிகாட்டியான தௌமியரிடமும் அனுமதி கேட்டு, திரௌபதியைத் தனியாக ஆசிரமத்தில் விட்டுச் சென்றனர்.


அதே வேளையில், சிந்துவின் புகழ்பெற்ற மன்னனான, விருத்தக்ஷத்ரனின் மகன் {ஜெயத்ரதன்}, திருமணம் செய்து கொள்ளும் நோக்குடன், சிறந்த அரச உடைகள் உடுத்தி, எண்ணற்ற இளவரசர்களின் துணையுடன் சால்வ நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். காம்யக வனத்தில் அந்த இளவரசன் {ஜெயத்ரதன்} நின்றான். அந்த ஒதுங்கிய இடத்தில், பாண்டவர்களின் கொண்டாடப்படும் அன்பிற்குரிய மனைவியான அழகிய திரௌபதி, ஆசிரமத்தின் வாசலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவளது அழகிய வடிவத்தால் பிரம்மாண்டமாக இருந்த அவள், கரிய மேகக் குவியலைப் பிரகாசிக்க வைக்கும் மின்னலைப் போல, அந்த வனத்தைச் சுற்றி ஒரு காந்தியைப் பரப்பிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவளை {திரௌபதியைக்} கண்ட எவரும், “இது அப்சரசா? தேவர்களின் மகளா? அல்லது தேவ மாயையா?” என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டனர். இந்த எண்ணத்தால் அவர்களது கரங்களும் குவிந்தன. அவர்கள் களங்கமற்ற வடிவழகு கொண்டவளை நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தனர்.

விருத்தக்ஷத்ரனின் மகனும், சிந்துவின் மன்னனுமான ஜெயத்ரதன், களங்கமற்ற அழகுடைய அந்த மங்கையைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி, தீய நோக்கத்தால் பீடிக்கப்பட்டான். ஆசை கொழுந்து விட்டெரிய அவன் {ஜெயத்ரதன்} கோடிகன் என்ற இளவரசனிடம், “களங்கமற்ற வடிவம் கொண்ட இந்த மங்கை யாருடையவள்? இவள் மனித வகையைச் சார்ந்தவள்தானா? இந்தப் பேரழகியை அடைய முடிந்தால் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை [1]. அவளை என்னுடன் அழைத்துக் கொண்டு எனது வசிப்பிடத்திற்குத் திரும்புவேன். ஓ! ஐயா {கோடிகா}, இவள் யாரென்றும், இவள் எங்கிருந்து வந்திருக்கிறாள் என்றும், இந்த மென்மையானவள் முட்கள் நிறைந்த இந்தக் கானகத்திற்கு ஏன் வந்தாள் என்றும் அறிந்து வா. பெண் வகையில் ரத்தினமான இந்தக் கொடியிடையாள், பெரும் அழகு படைத்த இந்த மங்கை, அழகிய பற்களும், நீண்ட கண்களும் கொண்ட இவள் என்னைத் தலைவனாக ஏற்பாளா? இந்த அற்புதமான மங்கையின் கரங்களை அடைந்தால், நான் நிச்சயம் என்னை வெற்றியடைந்தவனாகக் கருதிக் கொள்வேன். போ, கோடிகா {கோடிகாஸ்யா}, இவளது தலைவன் யார் என்பதை விசாரித்து வா" என்றான் {ஜெயத்ரதன்}. இப்படிக் கேட்கப்பட்ட குண்டலங்கள் அணிந்திருந்த கோடிகன், தனது தேரில் இருந்து குதித்து, ஒரு நரி பெண் புலியை அணுகுவதைப் போல அவளின் {திரௌபதியின்} அருகில் வந்து, இந்த வார்த்தைகளைப் பேசினான்.

[1]  இங்கே I have no need to marry if I can secure this exquisitely beautiful creature. என்று ஜெயத்ரதன் சொல்வதாகவே கங்குலியில் உள்ளது. ஒருவேளை இதன்பிறகே ஜெயத்ரதன் துச்சலையை மணந்திருக்க வேண்டும் என்று யூகித்தால் வனபர்வம் பகுதி 269ல் யுதிஷ்டிரன், தன் தங்கை துச்சலையை நினைவுகூர்ந்து ஜெயத்ரதனிடம் கருணை காட்டுகிறான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, August 29, 2014

தப்பி ஓடிய துர்வாசர்! - வனபர்வம் பகுதி 261

Durvasa ran away!  | Vana Parva - Section 261 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

துர்வாசர் பாண்டவர்களிடம் சென்றது; திரௌபதி கிருஷ்ணனை வேண்டுவது; கிருஷ்ணன் சோற்றுப் பானையை வாங்கி, அதில் ஒட்டியிருந்த கீரையையும் ஒரு பருக்கையையும் உண்டு பசியாறியது; இதனால் துர்வாசரும், அவரது சீடர்களும் பசியாறுவது; பீமன் துர்வாசரை அழைக்கச் சென்றது; பீமன் அவரைக் காணாதது; அவர் ஓடிவிட்டதாக அங்கிருந்த துறவிகள் சொன்னது ...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஒருநாள், பாண்டவர்கள் வசதியாக அமர்ந்து விட்டார்கள் என்றும், கிருஷ்ணை {திரௌபதி} தனது உணவை உண்டு ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதையும் உறுதி செய்து கொண்ட தவசியான துர்வாசர், தனது பத்தாயிரம் {10000} சீடர்களுடன் அந்தக் {காம்யகக்} காட்டிற்குச் சென்றார். சிறப்புமிக்க, நேர்மையான மன்னனான யுதிஷ்டிரன், விருந்தினர் வந்ததைக் கண்டு, தனது தம்பிகளுடன் அவரை வரவேற்க முன்னேறிச் சென்றான். தனது கரங்களைக் கூப்பி, அவர் அமர்வதற்குச் சரியான அற்புதமான ஆசனத்தைக் காட்டி, முனிவர்களுக்குத் தகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்றான். பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்} அவரிடம் {துர்வாசரிடம்}, “ஓ! வணங்கத்தக்க ஐயா, உங்களுடைய பகல் நீராடுதல் மற்றும் சடங்குகளை முடித்து விரைவாகத் திரும்புங்கள்" என்றான். அம்மன்னன் எப்படித் தனக்கும் தன் சீடர்களுக்கும் உணவை வழங்குவான் என்பதை அறியாத பாவமற்ற முனிவர், சிஷ்யர்களுடன் சேர்ந்து நீராடச் சென்றார். தங்கள் ஆசைகளை அடக்கிய அந்த முனிவர் கூட்டம் தங்கள் சுத்திகரிப்பைச் செய்ய {நீராட} ஓடைக்குச் சென்றது.

அதே வேளையில் ஓ! மன்னா {ஜனமேஜயா}, கணவர்களுக்குத் தன்னை அர்ப்பணிந்திருந்த அற்புதமான இளவரசியான திரௌபதி, (முனிவர்களுக்குக் கொடுக்க வேண்டிய) உணவு குறித்துப் பெரும் கவலையில் இருந்தாள். அவள் கவலையோடு சிந்தித்த பிறகு உணவு வழங்கும் வழியை யாரும் வழங்க முடியாது என்று தீர்மானித்து, கம்சனைக் கொன்றவனான கிருஷ்ணனை உள்முகமாக வேண்டினாள். அந்த இளவரசி {திரௌபதி}, “கிருஷ்ணா, வலிமையான கரங்கள் கொண்ட ஓ! கிருஷ்ணா, ஓ! தேவகியின் மகனே, அளவிலாத சக்தி கொண்டவனே, ஓ! வாசுதேவா, தன்னை வணங்குபவர்களின் சிரமங்களை விலக்கும் ஓ! அண்டத்தின் தலைவா, நீயே ஆன்மா, நீயே இந்த அண்டத்தைப் படைப்பவனும் அழிப்பவனுமாவாய். ஓ! தலைவா, அல்லல் படுபவர்களுக்கு மீட்பனாய் இருப்பவன் நீயே. இந்த அண்டத்தையும், படைக்கப்பட்ட அனைத்தையும் காப்பவன் நீயே. உயர்ந்தவற்றிலெல்லாம் உயர்ந்தவன் நீயே. மனத்தோற்றங்களில் உண்டாகும் ஆஹுதிகளும், சித்திகளும் [1] நீயே. ஓ! உச்சமானவனே, முடிவற்றவனே, ஓ! நன்மைகள் அனைத்தையும் கொடுப்பவனே, ஆதரவற்றவர்களுக்குப் புகலிடமாய் இருப்பவன் நீயே. ஆத்மாவாலோ மன அளவிளோ, பிற வழிகளிலோ அறியமுடியாத ஓ! ஆதி பொருளே, நீயே அனைவரையும் ஆட்சி செய்பவனும், பிரம்மனின் தலைவனுமாவாய். நான் உனது பாதுகாப்பைத் தேடுகிறேன். ஓ! தேவா, உன்னைப் புகலிடமாகக் கொண்டோரிடம் எப்போதும் அன்புள்ளவனே, உன் கருணையால் என்னைப் பாதுகாப்பாயாக. கருநெய்தல் மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவனே. அல்லி மலரின் உள்வட்டத்தைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டவனே, மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனே, பிரகாசிக்கும் கௌஸ்துப ரத்தினத்தை மார்பில் தரித்தவனே. படைத்த அனைத்திற்கும் நீயே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறாய். நீயே அனைவருக்கும் பெரும் புகலிடமாக இருக்கிறாய். அண்டத்தின் {அண்டத்தின்} உயர்ந்த ஒளியும், சாரமுமாக நீயே இருக்கிறாய். அனைத்து திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் நீயே. உன்னையே அனைத்திற்கும் வித்தாகவும், அனைத்துப் பொக்கிஷங்களின் குவியலாகவும் சொல்கிறார்கள். உனது பாதுகாப்பில் இருக்கும்போது, ஓ! தேவர்களின் தலைவா, அனைத்து தீமைகளும் தங்கள் பயங்கரங்களை இழக்கின்றன. துச்சாசனனிடம் இருந்து நீ என்னை முன்பு காத்ததைப் போல, இந்தச் சிரமத்தில் இருந்து நீயே என்னை விடுவிக்க வேண்டும்" என்று வேண்டினாள் {திரௌபதி}.

[1] இந்த இரண்டு வார்த்தைகளின் பொருளிலும் சந்தேகம் உள்ளது. அறிவுத்திறன் மற்றும் அறநெறி உணர்வுத் திறன் ஆகியவற்றைக் குறிக்க வேதங்களில் இப்படி இருப்பதாகப் படுகிறது என்கிறார் கங்குலி.

ஆஹுதி என்றால் விருப்பம் அல்லது கருதியது முடித்தல் என்றும், சித்தி என்றால் நினைத்தல் அல்லது ஆலோசித்தல் என்றும் பொருள் என்கிறார்கள். ஆஹுதி என்பது வேள்விப் பயன், அதன் மூலம் விளைந்த பொருள். ஆஹுதி கொடுக்க மறுத்ததாலேயே தக்ஷன் ஈசனால் கொல்லப் படுகிறான்


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தன்னை நம்பியிருப்பவர்களிடம் கருணையாக இருப்பவனும், மர்மமான இயக்கங்கள் கொண்டவனும், பெரியவனும், இறையாண்மை உள்ள தேவனும், பூமியின் தலைவனுமான தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, கிருஷ்ணையால் {திரௌபதியால்} துதிக்கப்பட்டதும், அவளது சிரமத்தைக் கண்டு, தன்னருகே படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ருக்மிணியை விட்டு எழுந்து உடனே அந்த இடத்திற்குச் {காம்யக வனத்திற்குச்} சென்றான். வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கண்ட திரௌபதி பெரும் மகிழ்ச்சியடைந்து, அவனை வணங்கி, முனிவர்களின் வருகையையும், மற்றும் யாவையும் தெரிவித்தாள். அனைத்தையும் கேட்ட கிருஷ்ணன் அவளிடம் {திரௌபதியிடம்}, "நான் பசியால் மிகவும் வருந்துகிறேன். தாமதமில்லாமல் எனக்கு ஏதாவது உணவைக் கொடு. உன் மற்ற வேலைகளைப் பிறகு செய்யலாம்" என்றான்.

கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணை {திரௌபதி} குழப்பம் கொண்டு அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “நான் உண்ணும் வரைதான் சூரியனால் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் உணவு இருக்கும். ஆனால், ஏற்கனவே நான் என் உணவை இன்று உண்டுவிட்டேன். இப்போது அதில் {அந்தப் பாத்திரத்தில்} உணவு இல்லை" என்றாள். பிறகு அந்தத் தாமரைக் கண் கொண்ட வணங்கத்தக்கவன் {கிருஷ்ணன்} கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, இது கேலிக்கான நேரமில்லை. பசியால் நான் மிகவும் துன்புறுகிறேன். விரைவாகச் சென்று அந்தப் பாத்திரத்தை எடுத்துவந்து என்னிடம் காட்டு" என்றான். யது குலத்தின் ஆபரணமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அந்தப் பாத்திரம் இது போன்ற நிலையில் கொண்டு வரப்பட்டபோது, அவன் அதற்குள் நோட்டம் விட்டு, அதன் விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்த, ஒரு பருக்கை அரிசியையும், கீரையையும் {Vegetable = காய்கறி} கண்டான். அதை விழுங்கிய அவன் {கிருஷ்ணன்}, அவளிடம் {திரௌபதியிடம்}, “அண்டத்தின் ஆன்மாவான தேவன் ஹரியை இது நிறைவு கொள்ளச்செய்யட்டும். வேள்விகளில் {அவிர்ப்பாகம்} உண்ணும் தேவனுக்கும் {இந்திரனுக்கு} இது தெவிட்டும் நிலையை உண்டாக்கட்டும்" என்றான்.

பிறகு நீண்ட கரங்கள் கொண்டவனும், துன்பங்களுக்கு ஆறுதலாக இருப்பவனுமானவன் {கிருஷ்ணன்}, பீமசேனனிடம், “விரைந்து சென்று முனிவர்களை உணவு உண்ண அழைப்பாயாக" என்றான். பிறகு ஓ! நல்ல மன்னா {ஜனமேஜயா}, கொண்டாடப்படும் பீமசேனன், தங்கள் சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்ய அருகில் இருந்த தெளிந்த குளிர்ச்சியான நீர் ஓடும் ஓடைக்குச் சென்றிருக்கும் அனைத்து முனிவர்களையும், துர்வாசரையும், பிறரையும் அழைப்பதற்காக, விரைவாகச் சென்றான். அதே வேளையில், ஆற்றில் மூழ்கி எழுந்த துறவியர், தங்கள் உடல்களைத் தேய்த்துக் கொண்டிருந்தனர். பிறகு தங்கள் வயிறு நிரம்பியிருப்பதாக உணர்ந்தனர். ஓடையை விட்டு வெளியே வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு துர்வாசரிடம் திரும்பிய அத்துறவியர், “மன்னனை உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு, நீராட இங்கே வந்துவிட்டோம். ஆனால், ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே {துர்வாசரே}, நமது வயிறு கழுத்து வரை நிரம்பியிருப்பதாகக் காணப்படுகிறது. இப்போது நம்மால் எதையும் உண்ண எப்படி முடியும்? நமக்காகத் தயாரிக்கப்படும் உணவு பயனற்றுப் போகும். இப்போது செய்வதற்கு எது தகுந்தது?” என்று கேட்டனர்.

அதற்குத் துர்வாசர், “உணவைப் பாழாக்கியதால், நாம் அரச முனிவனான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பெரும் தீங்கை இழைத்துவிட்டோம். பாண்டவர்கள் தங்கள் கோபப் பார்வையால் நம்மைப் பார்த்து எரித்துவிடமாட்டார்களா? அரச முனியான யுதிஷ்டிரன் பெரும் தவச் சக்தியைப் பெற்றிருக்கிறான் என்பதை நான் அறிவேன். அந்தணர்களே, ஹரிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன். உயர் ஆன்ம {மகாத்மாவான} பாண்டவர்கள் அனைவரும், அறம் பயில்பவர்கள் {தர்மவான்கள்}, கற்றவர்கள், போர்க்குணம் மிக்கவர்கள், தவத்துறவிலும் நோன்பிலும் கவனம் உள்ளவர்கள், வாசுதேவனுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள், நன்னடத்தைகளை விதிப்படி எப்போதும் நோற்பவர்களுமாவர். தூண்டப்பட்டால், பஞ்சுக்குவியலை எரிக்கும் நெருப்பு போலத் தங்கள் கோபத்தால் நம் அனைவரையும் எரித்துவிடுவார்கள். எனவே, சீடர்களே, நீங்கள் அனைவரும் அவர்களை (மீண்டும்) பார்க்காமல் விரைவாக ஓடுங்கள்" என்றார் {துர்வாசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தங்கள் ஆன்ம குருவால் இப்படி அறிவுறுத்தப்பட்ட அந்த அந்தணர்கள் அனைவரும், பாண்டவர்களிடம் பெரும் அச்சம் கொண்டு, அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடினர். அந்தத் தெய்வீக நதியின் அருகே, அற்புதமான முனிவர்களைக் காணாத பீமசேனன், அந்த நதித்துறைகளில் இங்கும் அங்கும் என அனைத்து இடங்களிலும் தேடினான். அந்த இடத்தில் இருந்த துறவிகளால், அவர்கள் ஓடிவிட்டனர் என்பதை அறிந்த அவன் {பீமன்}, திரும்பி வந்து, யுதிஷ்டிரனிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். பிறகு அடங்கிய புலன்கள் கொண்ட பாண்டவர்கள் அனைவரும், அவர்களை எதிர்பார்த்து சிறிது நேரம் காத்திருந்தனர்.

யுதிஷ்டிரன், “நடு இரவில் திடீரென வந்து நம்மை முனிவர்கள் ஏமாற்றிவிடலாம். ஓ! உண்மைகளால் {தெய்வத்தால்} உருவாக்கப்பட்ட இந்தக் கடும்சிரமத்தில் இருந்து நாம் எப்படித் தப்புவது?” என்று சொன்னான். இப்படிப்பட்ட நினைவுகளில் மூழ்கி, நீண்ட பெருமூச்சுகளை அடிக்கடி விட்டுக்கொண்டிருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்ட கிருஷ்ணன், திடீரென அவர்கள் முன் தோன்றி, அவர்களிடம், “பிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, கோபக்கார மூனிவர் மூலம் உங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தை அறிந்த திரௌபதி என்னிடம் மன்றாடினாள். எனவே, நான் இங்கு விரைவாக வந்தேன். ஆனால், இப்போது, முனிவர் துர்வாசரிடம் நீங்கள் சிறிதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களது தவச் சக்திகளுக்குப் பயந்து, முன்பே அவர் ஓடிப்போய்விட்டார். அறம் சார்ந்த மனிதர்கள் எப்போதும் துன்பப்படுவதில்லை. நான் எனது வீட்டிற்குத் திரும்ப இப்போது உங்களிடம் நான் அனுமதி கோருகிறேன். நீங்கள் எப்போதும் வளத்துடன் இருப்பீராக!” என்றான் {கிருஷ்ணன்}

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திரௌபதியுடன் இருந்த பிருதையின் மகன்கள் கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்டு மனம் அமைதியடைந்தார்கள். நோய் (வருத்தம்) அகன்ற அவர்கள் {பாண்டவர்கள்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்}, "அகன்ற கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மனிதர்கள், ஒரு படகின் மூலமாகப் பாதுகாப்பாகக் கரையை அடைவதைப் போல, உன் துணையைக் கொண்ட நாங்கள், ஓ! தலைவா, கோவிந்தா {கிருஷ்ணா}, தப்பமுடியாத சிரமத்தில் இருந்து தப்பித்தோம். இப்போது நீ அமைதியுடன் திரும்பலாம். வளமை உனதாகட்டும்" என்றனர். இப்படி வழியனுப்பப்பட்ட அவன் {கிருஷ்ணன்}, தனது தலைநகரை அடைந்தான்.. ஓ! அருளப்பட்ட தலைவா {ஜனமேஜயா}, வனம் விட்டு வனம் உலவித் திரிந்த பாண்டவர்கள், திரௌபதியுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தினர். ஓ! மன்னா, இப்படியே நீ சொல்லச்சொன்ன கதையை உனக்குச் சொல்லிவிட்டேன். இப்படியே காட்டில் இருந்த பாண்டவர்களிடம் திருதராஷ்டிரனின் தீய மகன்களின் தந்திரங்கள் பலிக்கவில்லை"
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


துர்வாசரை உபசரித்த துரியோதனன்! - வனபர்வம் பகுதி 260

Duryodhana entertained Durvasa!  | Vana Parva - Section 260 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வம்)

பத்தாயிரம் சீடர்களுடன் துர்வாசர் துரியோதனனைச் சந்திப்பது; துர்வாசரை துரியோதனன் நன்கு உபசரிப்பது; வரமளிக்க முற்பட்ட துர்வாசரிடம், துரியோதனன் பாண்டவர்கள் உண்ட பிறகு அவர்களிடம் அவர் செல்ல வேண்டும் என்று கோரியது; பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதாக துரியோதனனுக்கு துர்வாசர் வாக்களித்தது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, கிருஷ்ணை {திரௌபதி} உணவு உண்ணும் வரை, உணவு நாடி வந்த அந்தணர்களுக்கும் பிறருக்கும், சூரியனிடம் இருந்து பெற்ற உணவை, பலவகைப்பட்ட மான்கறியோடு {Venison} பகிர்ந்தளித்து, முனிவர்களுடன் இனிய விவாதங்களை மேற்கொண்டு வந்த அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்து வந்த போது, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனியின் ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்ட துரியோதனனும், திருதராஷ்டிரனின் மற்ற மகன்களும் அவர்களிடம் எப்படி நடந்து கொண்டனர்? நான்  உம்மிடம் இதையே கேட்கிறேன். எனக்கு இவ்விஷயத்தில் ஞானம் வழங்குவதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, நகரத்தில் வாழ்வது போலவே காட்டிலும் பாண்டவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன், கலைநயமிக்க {artful} {வஞ்சனையில் நுண்ணறிவுள்ள என்கிறது கும்பகோணம் பதிப்பு} கர்ணன், துச்சாசனன், மற்றும் பிறரோடு சேர்ந்து அவர்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தான். அந்தத் தீய மனம் கொண்டோர், பல்வேறு தீய திட்டங்களை நடத்த ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது, அறம்சார்ந்த, கொண்டாடப்படும் துறவியான துர்வாசர், தம் சுயஇச்சையால், பத்தாயிரம் {10000} சீடர்களுடன் குருக்களின் அந்த நகரத்திற்கு {ஹஸ்தினாபுரம்} வந்தார். எளிதில் கோபம் கொள்ளும் அத்துறவி {துர்வாசர்} வந்ததைக் கண்ட துரியோதனன், தனது தம்பிகளுடன் சேர்ந்து பெரும் பணிவுடனும், அடக்கத்துடனும், மென்மையுடனும் அவரை வரவேற்றான். அந்த முனிவருக்கு {துர்வாசருக்கு} அடிமை போல, தானே வேலை செய்த அந்த இளவரசன் {துரியோதனன்}, அவரை {துர்வாசரை} சரியான முறையில், போற்றி வரவேற்றான். அந்தச் சிறப்புமிக்க முனிவர் {துர்வாசர்} சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அப்போதெல்லாம் துரியோதனன், பழிக்கு {சாபத்திற்கு அஞ்சி} ஆளாகாமல், விழிப்புடனும் விடாமுயற்சியுடனும் அவரை {துர்வாசரை} இரவும், பகலும் கவனித்துக் கொண்டான்.

சில நேரங்களில் அந்த முனிவர் {துர்வாசர்}, “நான் பசித்திருக்கிறேன், ஓ! மன்னா {துரியோதனா}, எனக்கு விரைவாக ஏதாவது உணவைக் கொடு" என்று கேட்பார். சில நேரங்களில், குளிப்பதற்காக வெளியே சென்று, நேரம் கடந்து வந்து, “எனக்குப் பசியில்லை. நான் இன்று எதுவும் உண்ணமாட்டேன்" என்று சொல்லி அவனது {துரியோதனனின்} பார்வையில் இருந்து மறைந்துவிடுவார். சில நேரங்களில், திடீரென வந்து, “விரைவாக எங்களுக்கு உணவளி" என்பார். இன்னும் சில நேரங்களில் ஏதாவது குறும்பு செய்ய விரும்பியவராய், நடு இரவில் எழுந்து, உணவைத் தயாரிக்கச் செய்து, முக்கியத்துவம் இல்லாதவற்றில் குறை கண்டு {carp}, அவற்றை உண்ணவே மாட்டார். இவ்விதமெல்லாம் அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} நடந்து கொண்ட அந்த முனிவர் {துர்வாசர்}, கோபமோ எரிச்சலோ அடையாத மன்னன் துரியோதனனைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா} கட்டுக்கடங்காதவரான துர்வாசர் அவனிடம் {துரியோதனனிடம்}, “உனக்கு வரங்களை அருளும் சக்தி எனக்கு உள்ளது. உனது இதயம் விரும்பும் எதையும் நீ என்னிடம் கேட்கலாம். நற்பேறு உனதாகட்டும். நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். அறத்திற்கும், அறநெறிகளுக்கும் புறம்பில்லாத எதையும் நீ என்னிடம் இருந்து அடையலாம்" என்று சொன்னார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெருந்துறவியின் {துர்வாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சுயோதனன் {துரியோதனன்}, புதிய உயிரைப் பெற்றதாக உணர்ந்தான். உண்மையில், வரவேற்புக்குப் பிறகு முனிவர் மகிழ்ந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் என்று அவனும் {துரியோதனனும்}, கர்ணனும், துச்சாசனனும் முன்பே பேசி வைத்திருந்தனர். அந்தத் தீய மனம் கொண்ட மன்னன் {துரியோதனன்}, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டதை நினைத்துப் பார்த்து, பின்வரும் உதவியை மகிழ்ச்சியுடன் கேட்டான். அவன் {துரியோதனன்}, “பெரும் மன்னரான யுதிஷ்டிரரே, எங்கள் குலத்தில் சிறந்தவரும், மூத்தவரும் ஆவார். அந்தப் பக்திமான் {யுதிஷ்டிரர்}, இப்போது தனது தம்பிகளுடன் சேர்ந்து காட்டில் வாழ்ந்து வருகிறார். எனவே, ஓ! அந்தணரே {துர்வாசரே}, உமது சீடர்களுடன் என்னிடம் வந்ததுபோல, அந்தச் சிறப்பு வாய்ந்தவரிடமும் {யுதிஷ்டிரரிடமும்} நீர் ஒரு முறை விருந்தினராகச் செல்ல வேண்டும். நீர் எனக்கு உதவி செய்ய விரும்பினால், மென்மையான சிறந்த பெண்மணியான கொண்டாடப்படும் பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அந்தணர்களுக்கும், தனது கணவர்களுக்கும் உணவு படைத்து, அவளும் உண்டு முடித்து, ஓய்வெடுக்கப் படுக்கும்போது, நீர் அவரிடம் {யுதிஷ்டிரரிடம்} செல்ல வேண்டும்" என்று கோரினான் {துரியோதனன்}.

அதற்கு அம்முனிவர் {துர்வாசர்}, “உனது திருப்திக்காக நான் அவ்வாறே செய்வேன்" என்றார். இப்படிச் சுயோதனனிடம் சொன்ன அந்தச் சிறந்த அந்தணரான துர்வாசர், முன்பு எப்படி வந்தாரோ அப்படியே சென்றார். தான் விரும்பிய அனைத்தையும் அடைந்துவிட்டதாகச் சுயோதனன் தன்னைக் கருதிக் கொண்டான். பிறகு, பெரும் மனநிறைவுடன் கர்ணனின் கரங்களைப் பற்றிக் கொண்டான். கர்ணனும், தனது தம்பிகளுடன் இருந்த மன்னனிடம் {துரியோதனனிடம்} மகிழ்ச்சியாக, “சிறு நற்பேறாலேயே, நீ நன்கு செயல்பட்டு உனது விருப்பங்களையும் அடைந்தாய். உனது நற்பேறாலேயே, உனது எதிரிகள், கடக்க முடியாத ஆபத்தான கடலில் மூழ்கினர். அந்தப் பாண்டுவின் மகன்கள் இப்போது, துர்வாசரின் கோபம் எனும் நெருப்புக்குள் விழப்போகிறார்கள். அவர்கள் செய்த தவறால், இருள் நிறைந்த பள்ளத்திற்குள் விழுந்துவிட்டனர்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, நடந்ததில் தங்கள் மனநிறைவை வெளிப்படுத்திய, தீய சூழ்ச்சிகள் செய்யும் துரியோதனனும் மற்றவர்களும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியோடு திரும்பினர். 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


சொர்க்கத்தை மறுத்த முத்கலர்! - வனபர்வம் பகுதி 259

Mudgala declined heaven!  | Vana Parva - Section 259 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சொர்க்கம், நிலையற்றது என்றெண்ணிய முத்கலர் சொர்க்கத்தை ஏற்க மறுத்தது; முத்கலரின் கதையைச் சொன்ன வியாசர் திரும்பிச் சென்றது...

தேவர்களின் தூதுவன் {முத்கலரிடம்}, "ஓ! பெரும் தவசியே {முத்கலரே}, நீர் குறைந்த அறிவுள்ளவராக இருக்கிறீர்; பெரும் புகழைத் தரத்தக்க தெய்வீக அருளை அடைந்தும், ஞானமற்ற மனிதரைப் போல இன்னும் தீர்மானித்துக் கொண்டிருக்கிறீர். ஓ! முனிவரே {முத்கலரே}, சொர்க்கம் என்று அறியப்படும் பகுதி, நமக்கு மேலே இருககிறது. கோபுரத்தின் உயரங்களுக்கு மேலே இருக்கும் அது, ஓ! தவசியே {முத்கலரே}, எப்போதும் தெய்வீகத் தேர்கள் பயணிக்கும் அற்புதமான பாதைகளைக் கொண்டிருக்கிறது. நாத்திகர்கள், உண்மையற்றவர்கள், தவம் பயிலாதவர்கள், பெரும் வேள்விகளைச் செய்யாதவர்கள் ஆகியோர் அங்குச் செல்ல முடியாது. அறம்சார்ந்த ஆன்மா கொண்டவர்கள், மனதை அடக்கியவர்கள், தங்கள் உணர்வுகளை அடக்கியவர்கள், தங்கள் புலன்கள் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள், தீமை விலக்கியவர்கள், தானம் செய்வதில் முனைப்புடன் இருப்பவர்கள், புலன்களையும், உள்ளுணர்வுகளையும் வென்று, போர்வடுக்களை மேனியில் தாங்கிய மனிதர்கள் மட்டுமே அந்தப் பகுதிகளை அடைய முடியும். ஓ! அந்தணரே {முத்கலரே}, நற்செயல்கள் செய்பவர்களால் அடையப்படும் அவ்வுலகங்களில் பக்திமான்களே வசிக்கின்றனர்.

Thursday, August 28, 2014

முத்கலரும்! துர்வாசரும்! - வனபர்வம் பகுதி 258

Mudgala and Durvasa!  | Vana Parva - Section 258 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

முத்கலர் மற்றும் துர்வாசகர் கதையை வியாசர் யுதிஷ்டிரனுக்கு உரைத்தல்; துர்வாசர் முத்கலரைச் சோதித்தால்; முத்கலரை அழைத்துச் செல்ல தேவ தூதன் வந்தது...


யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஏன் அந்த உயர் ஆன்மா கொண்டவர் {முத்கலர்} ஒரு துரோணம் சோளத்தைத் தானமளித்தார்? ஓ! பக்தியில் பெரியவரே {வியாசரே}, யாருக்கு, எந்தக் குறிப்பிட்ட முறையில் அவர் தானமளித்தார்? இதை நீர் எனக்குச் சொல்லும். அனைத்தையும் சாட்சியாகக் கண்டு வரும், ஆறு குணம் கொண்டவனை {பரமாத்மாவை}, தனது பயிற்சிகளால் நிறைவு கொள்ள வைத்த அறம்சார்ந்த மனிதன், தன் பிறவிப் பயனை அடைந்தவனாவான் என நான் கருதுகிறேன்" என்றான்.

Wednesday, August 27, 2014

காம்யகம் வந்த வியாசர்! - வனபர்வம் பகுதி 257

Vyasa visited Kamyaka!  | Vana Parva - Section 257 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

காம்யக வனத்தில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; தானம், தவம் ஆகியவற்றில் எது அதிகப் பலனைக் கொடுக்கும் என்ற விளக்கம்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, காட்டில் வசிக்கும் அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள், அவல நிலையிலேயே பதினோரு {11} வருடங்களைக் கழித்தனர். மகிழ்ச்சியை அனுபவிக்கத் தகுந்த அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள, தங்களுக்கு ஏற்பட்ட சூழ்நிலையால் அடைகாக்கும் நிலையை அடைந்து, பழங்களிலும், கிழங்குகளிலும் வாழ்ந்து, தங்கள் நாட்களைத் துன்பகரமாகவே கழித்தனர். அந்த அரசமுனியான பலமிக்கக் கரங்கள் கொண்ட யுதிஷ்டிரன், தன் தம்பிகளுக்கு நேர்ந்த இந்த எல்லை கடந்து துன்பம், தனது தவறாலேயே ஏற்பட்டது என்று நினைத்தான். தன் சூதாட்டச் செயலால் விளைந்த அந்தத் துன்பங்களை நினைத்துப் பார்த்த அவனால் {யுதிஷ்டிரனால்} நிம்மதியாக உறங்க முடியவில்லை. தன் இதயம் ஈட்டியால் துளைக்கப்பட்டதைப் போல உணர்ந்தான். சூத மகனின் {கர்ணனின்} கடுமையான வார்த்தைகளை நினைத்துப் பார்த்த அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, தன் கோப விஷத்தை ஒடுக்கி, பெருமூச்சு விட்டபடி, தனது நேரத்தை எளிமையான தோற்றத்தில் கழித்தான். அர்ஜுனன், இரட்டையர் இருவர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, சிறப்புமிக்கத் திரௌபதி, மனிதர்களில் பெரும் பலம் படைத்த பராக்கிரமம் மிக்கப் பீமன் ஆகியோர், தங்கள் பார்வையை யுதிஷ்டிரன் மேல் செலுத்தும்போதெல்லாம் {அவன் நிலையைக் கண்டு} மிகவும் கசப்பான வலியை உணர்ந்தனர். (வனவாசக் கெடுவில்) மிகக் குறைந்த காலமே எஞ்சியிருப்பதை நினைத்துப்பார்த்து, கோபமும் நம்பிக்கையும் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், பல்வேறு முயற்சிகளையும் பயிற்சிகளையும் நாடி, தங்கள் உடல்களைப் பல்வேறு உருவங்களில் சமைத்தனர்.


சிறிது காலம் கழித்து வலிமைமிக்கத் துறவியும், சத்தியவதியின் மகனுமான வியாசர் பாண்டவர்களைக் காண அங்கே வந்தார். தங்களை நோக்கி அவர் வருவதைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன் முன்சென்று, அந்த உயர் ஆன்மா கொண்டவரை முறைப்படி வரவேற்றான். வியாசரை வணங்கி, அவரை மனம் நிறைய வைத்த புலன்களை அடக்கிய பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்த முனிவர் அமர்ந்த பிறகு, அவர் சொல்வதைக் கேட்கும் வண்ணம், அவருக்கு முன்பு அமர்ந்தான். தனது பேரர்கள் மெலிந்து போய், காட்டில் கிடைப்பதை வைத்து உண்டு வாழ்வதைக் கண்ட அந்த வலிமைமிக்கத் தவசி {வியாசர்}, இரக்கத்தால் உந்தப்பட்டு, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், “ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் சிறந்தவனே, கடும் தவம் புரியாதவர்கள் இவ்வுலகில் பெரும் மகிழ்ச்சியை அடைய முடியாது. மனிதர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறியே அனுபவிக்கிறார்கள்; இது நிச்சயம். ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, எந்த மனிதனும் தடையற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. உயர்ந்த ஞானத்தைக் கொண்ட ஒரு ஞானி, வாழ்வு என்பது பள்ளம் மேடுகள் நிறைந்ததே என்பதை அறிந்து, இன்பத்தாலோ, துன்பத்தாலோ நிறைந்திருப்பதில்லை.

பயிரைத் {விதைகளைத்} தூவுபவன் {பயிரிடும் உழவன்}, காலத்தை உணர்ந்து, பயிரின் பலன்களை அனுபவிப்பதைப் போல, மகிழ்ச்சி வரும்போது ஒருவன் மகிழ்ந்திருக்க வேண்டும்; துன்பம் வரும்போது, அவன் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும். தவத்திற்கு மேன்மையானது எதுவுமில்லை; தவத்தினால் ஒருவன் வலிமையான கனியை அடைகிறான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தவத்தால் அடைய முடியாதது எதுவும் இல்லை என்பதை அறிந்து கொள். உண்மை, நேர்மை, கோபத்தில் இருந்து விடுதலை, நீதி, சுய அடக்கம், காரியங்களில் கட்டுப்பாடு, அசுத்தம் விலக்கல், சூதற்ற தன்மை, புனிதம், புலன்கள் ஒடுக்கம் ஆகியவை, ஓ! வலிமைமிக்க ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, நற்செயல்கள் செய்யும் ஒரு மனிதனை சுத்தப்படுத்துகின்றன. தீமை மற்றும் மிருகத்தனமான வழிகளுக்கு அடிமையாக இருக்கும் மூடர்கள், இவ்வாழ்வுக்குப் பிறகு, மிருகத்தனமான பிறப்புகளை அடைந்து {மிருகங்களாகப் பிறந்து}, எப்போதும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. இவ்வுலகில் செய்யப்படும் செயல்களின் கனிகளையெல்லாம், {அம்மனிதன்} அடுத்த உலகில் அறுக்கிறான். எனவே, ஒருவன் தவத்தாலும், நோன்புகள் நோற்பதாலும் தனது உடலை கட்டுப்படுத்த வேண்டும்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சூதற்ற மகிழ்ச்சியான மனதுடன், {தானம்} பெறுபவர்களிடம் சென்று, அவருக்கு மரியாதை செலுத்தி, தனது சக்திக்குத் தக்க ஒருவன் தானம் அளிக்க வேண்டும். உண்மை பேசும் மனிதன், தொல்லைகளற்ற வாழ்வைப் பெறுகிறான். கோபம் களைந்த ஒருவன் நேர்மையை அடைகிறான். துர்குணம் களைந்த ஒருவன் உச்சபட்ச மனநிறைவை அடைகிறான். தனது புலன்களையும், உள்மனதையும் வென்ற ஒருவன், இன்னல்களை அறியமாட்டான். புலன்களை வென்ற ஒரு மனிதன் மற்றவர்களுடைய செழிப்பின் உயர்வைக் கண்டு பாதிப்படையமாட்டான். அனைவருக்கும் அவர்களுக்கு உரியதைக் கொடுத்து, வரங்களை அளிப்பவன், மகிழ்ச்சியை அடைந்து, அவனது இன்பத்திற்கான அனைத்துப் பொருட்களையும் அடைகிறான். பொறாமை களைந்த மனிதன் பூரண நிம்மதியை அடைகிறான். மரியாதைக்குரியவர்களை மரியாதையுடன் நடத்துபவன், சிறப்புமிக்கக் குலத்தில் பிறப்பை அடைகிறான். தன் புலன்களை வெல்பவன், தீப்பேறுகளைச் {துரதிர்ஷ்டங்களைச்} சந்திப்பதில்லை. நன்மையைத் தொடரும் மனதுடையவன் {நன்மை செய்ய விரும்புபவன்}, இயற்கைக்குத் தான் செய்ய வேண்டிய கடனை செலுத்துவதன் காரணமாக, நேர்மையான மனதுடையவனாக மீண்டும் பிறக்கிறான்" என்றார்.

யுதிஷ்டிரன் {வியாசரிடம்} கேட்டான், "ஓ! அறம்சார்ந்தவர்களில் சிறந்தவரே, ஓ! வலிமைமிக்கத் தவசியே {வியாசரே}, தானமளிப்பதிலும், தவம் மேற்கொள்வதிலும், அடுத்த உலகத்திற்குத் தேவையான கூடுதல் செயல்திறனை {அல்லது பலாபலனை = efficacy} எது கொடுக்கும்? பயில்வதற்கு {செய்வதற்கு} எது கடினமானது?" என்று கேட்டான்.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, தானத்தைவிட இவ்வுலகில் பயில்வதற்குக் கடினமானது ஏதுமில்லை. செல்வத்தில் {அதைச் சம்பாதிப்பதில்} மனிதர்கள் அதிகத் தாகம் கொள்கின்றனர். செல்வமும் சிரமத்துடனே அடையப்படுகிறது. ஓ! பெருந்தன்மை கொண்டவனே, வீர மனிதர்கள், செல்வத்தை அடைவதற்காக, தங்கள் இன்னுயிரையும் கைவிட்டு {இன்னுயிர் மீதுள்ள பற்றைக் கைவிட்டு} கடலின் ஆழங்களுக்குள்ளும், கானகத்திற்குள்ளும் நுழைகின்றனர். செல்வத்திற்காக, சிலர் உழவு {விவசாயம்} செய்கின்றனர், சிலர் பசுக்களை வளர்க்கின்றனர், சிலர் சேவகம் செய்கின்றனர். எனவே, இத்தகு சிரமங்களுக்கு ஆட்பட்டு அடையும் செல்வத்தைத் துறப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. தானத்தைவிடப் பயில்வதற்குக் கடினமானது எதுவும் இல்லையென்பதால், வரங்களை அளிப்பது கூட, அனைத்திற்கும் மேன்மையானது என்பது எனது கருத்து.

குறிப்பாக ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். முறையாக அடைந்த செல்வத்தை, சரியான நேரத்தில், சரியான இடத்தில் பக்தியுள்ள மனிதர்களுக்குக் {தானம்} கொடுக்க வேண்டும். ஆனால், முறையற்று அடைந்த செல்வத்தைக் கொண்டு தானம் செய்பவன், மறுபிறவியின் தீமையில் இருந்து தப்ப முடியாது. ஓ! யுதிஷ்டிரா, குறித்த நேரத்தில், தகுந்த ஆளுக்கு {தானம் பெறுபவருக்கு}, சுத்தமான மனதுடன் சிறு தானத்தைச் செய்தால் கூட, {அந்த தானமளிக்கும் மனிதன்}, மறு உலகத்தில் வற்றாத பலன்களை அடைவான் என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஒரு பழங்கதை இருக்கிறது. முத்கலர், ஒரு துரோணம் [1] சோளத்தைத் தானம் செய்ததால் நல்ல பலனை அடைந்தார்.

[1] மிகச் சிறிய அளவு {அளவுகோல்} என்கிறார் கங்குலி. சமஸ்க்ருதத்தில் ‘த்ரோணீ’ என்றால் வாளி போன்ற ஒரு பாத்திரம், அது போன்றதொரு பாத்திரத்தில் பிறந்ததாலேயே துரோணருக்கும் அவ்வாறு பெயர் வந்தது. துரோணம் என்பது ஒரு பாத்திர அளவாக இருக்கக்கூடும்.



இந்த இடத்தில் இருந்து விரீஹித்ரௌணிக பர்வம் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் கங்குலியின் மொழிபெயர்ப்பில் கோஷ யாத்திரா பர்வமே தொடர்கிறது. 260பகுதியில் தான் கோஷயாத்திரா பர்வம் முடிகிறது. அதன் பிறகு  261ம் பகுதியில் திரௌபதி ஹரணப் பர்வம் தொடங்குகிறது.


இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


யுதிஷ்டிரன் கனவில் வந்த மான்கள்? - வனபர்வம் பகுதி 256

Deer dream of Yudhishthira!  | Vana Parva - Section 256 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரன் கனவில் வந்த மான்கள், பாண்டவர்கள் துவைத வனத்தை விட்டுப் போகும்படியும், தாங்கள் பல்கிப் பெருக வழி கொடுக்கும்படியும் இரந்து கேட்டது; தன் கனவைத் தனது தம்பிகளுக்கு வெளிப்படுத்திய யுதிஷ்டிரன், அனைவரையும் அழைத்துக் கொண்டு காம்யகம் சென்றது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், "துரியோதனனை விடுவித்த பிறகு, பாண்டுவின் பலமிக்க மகன்கள் அந்தக் காட்டில் என்ன செய்தனர்? இதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்"


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஒரு சமயம், யுதிஷ்டிரன், இரவில் துவைத வனத்தில் படுத்துக் கொண்டிருந்தபோது, ஏதோ சில மான்கள், கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவனது கனவில் தோன்றின. கூப்பிய கரங்களுடன் உடல் நடுங்க நின்று கொண்டிருந்தவற்றிடம் {மான்களிடம்} அந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, “நீங்கள் சொல்ல விரும்பியதை என்னிடம் சொலுங்கள். நீங்கள் யார்? நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான். {பாண்டவர்களால்} கொல்லப்பட்டவையில் மீந்திருந்த அந்தமான்கள், குந்தியின் மகனான சிறப்புமிக்கப் பாண்டவனால் {யுதிஷ்டிரனால்}, இப்படி அணுகி அழைக்கப்பட்டபோது, அவை அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, {உங்களால்} கொல்லப்பட்டவைகளில் இன்னும் உயிரோடு இருப்பவர்கள் நாங்கள். நாங்கள் {உங்களால்" மொத்தமாகக் கொல்லப்படலாம். எனவே, உங்கள் வசிப்பிடத்தை மாற்றுங்கள். ஓ! பலமிக்க மன்னா {யுதிஷ்டிரா}, உனது தம்பிகள் அனைவரும் ஆயுதங்கள் அறிந்த வீரர்கள். இந்தக் காட்டில் வசிப்பவற்றின் எண்ணிக்கையை அவர்கள் குறைத்துவிட்டனர். ஓ! பலமிக்க மனம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, எஞ்சியவர்களான நாங்களே இப்போது {எங்கள் குலத்தின்} வித்தாக இருக்கிறோம். ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, உன் கருணையால் எங்களைப் பல்கிப் பெருக விடு" என்றன.

அழிக்கப்பட்டவை போக வித்துப் போல மீந்திருந்த அந்த மான்கள் அச்சத்துடன் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட நீதிமானான யுதிஷ்டிரன் பெரும் துயரால் தாக்கப்பட்டான். அனைத்து உயிர்களின் நன்மையைக் கருத்தில் கொண்ட அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அவற்றிடம் {அந்த மான்களிடம்}, “அப்படியே ஆகட்டும். நீங்கள் சொன்னது போலவே செயல்படுகிறேன்" என்றான். இப்படிப்பட்ட காட்சியால் விழித்தெழுந்த அந்த அற்புதமான மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த மான்களின் மீது இரக்கம் கொண்டு, அங்குக் கூடியிருந்த தனது தம்பிகளிடம், “கொல்லப்பட்டவை போக மீந்திருக்கும் அந்த மான்கள், இரவில் என்னை அணுகி அழைத்து, "நாங்கள் எங்கள் குலங்களின் நினைவுக் குறிப்புகளைப் போலவே எஞ்சியிருக்கிறோம். நீ அருளப்பட்டிரு. எங்களிடம் இரக்கங்கொள்" என்றன. அவை உண்மையையே பேசியுள்ளன. நாம் இந்தக் கானகவாசிகளிடம் {வனவிலங்குகளிடம்} பரிதாபம் கொள்ள வேண்டும். ஒரு வருடம் மற்றும் எட்டு மாதங்களாக நாம் அவற்றை உணவாகக் கொண்டிருக்கிறோம்.

எனவே, பாலைவனத்தின் தொடக்கத்தில், திருணபிந்து எனும் தடாகத்திற்கு அருகில், வனவிலங்குகள் நிறைந்த, கானகங்களில் சிறந்த, அழகிய காம்யக வனத்திற்கே நாம் மீண்டும் செல்வோம். அங்கே நமது மீத நாட்களை இனிமையாகக் கடத்துவோம்" என்றான். பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அறநெறிகள் அறிந்த பாண்டவர்கள், தங்களுடன் இருந்த அந்தணர்கள் மற்றும் தங்களோடு வாழ்ந்தவர்களோடு, இந்திரசேனன் மற்றும் பிற பணியாட்களுடன் விரைவராக (அந்த இடத்திற்கு) சென்றனர். சோளம் மற்றும் தெளிந்த நீர் நிறைந்த, (பயணிகள்) நடக்கும் பாதை வழியாக முன்னேறி, கடைசியாகக் காம்யக வனத்தில் ஆன்மத் தகுதி உடையவர்கள் நிறைந்த புனிதமான ஆசிரமத்தைக் கண்டார்கள். தெய்வீக உலகங்களுக்குள் நுழையும் பக்திமான்கள் போல, பாரதக் குலத்தின் முதன்மையான அந்தக் கௌரவர்கள் {பாண்டவர்கள்}, அந்த அந்தணர்களில் காளைகளால் சூழப்பட்டு, அந்தக் கானகத்தில் {காம்யகத்திற்குள்} நுழைந்தார்கள்.



இந்த இடத்தோடு மிருகஸ்வப்நோத்பவ பர்வமும் முற்றுபெற்று, அடுத்த பகுதியில் இருந்து விரீஹித்ரௌணிக பர்வம் ஆரம்பிக்கிறது. ஆனால் கங்குலி இங்கும் கோஷ யாத்திரா பர்வத்தைத் தொடர்ந்து செல்கிறார்.260பகுதியில் தான் கோஷயாத்திரா பர்வத்தை முடிக்கிறார். அதன் பிறகு 261ம் பகுதியில் திரௌபதி ஹரணப் பர்வம் தொடங்குகிறது.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, August 26, 2014

கர்ணனின் சபதம்? - வனபர்வம் பகுதி 255

The vow of Karna!  | Vana Parva - Section 255 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

துரியோதனன் செய்த வேள்வி, யுதிஷ்டிரன் செய்த வேள்வியின் பதினாறில் ஒரு பங்குக்குக் கூட ஈடாகாது என்று சிலர் சொல்வது; நண்பர்கள் துரியோதனன் செய்த வேள்வியை மெச்சுவது; நான் எப்போது ராஜசூய வேள்வியைச் செய்வேன் என்று துரியோதனன் கேட்பது; கர்ணன் ஏற்கும் நோன்பு; கர்ணன் ஏற்ற சபதத்தைக் கேள்விப்பட்ட யுதிஷ்டிரன் துயருறுவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, துரியோதனன் (நகரத்திற்குள்) நுழைந்து கொண்டிருந்த போது, தோற்காத வலிமை கொண்ட அந்த இளவரசனைப் புகழ்ச்சியாளர்கள் {சூதர்கள்} துதிபாடினர். அந்த வலிமைமிக்க வில்லாளியான மன்னர்களில் முதன்மையானவனை {துரியோதனனை} பிறரும் புகழ்ந்தனர். அவன் மீது நெல் பொரிகளையும் {fried paddy}, சந்தனக் குழம்பையும் வாரி இறைத்த குடிமக்கள், “ஓ! மன்னா {துரியோதனா}, நீ அடைந்த நற்பேறாலேயே உனது வேள்வி தடையில்லாமல் நிறைவேறியது" என்றார்கள். அங்கிருந்தவர்களில் இரக்கமற்ற பேச்சுக் கொண்ட சிலர் அந்தப் பூமியின் தலைவனிடம் {துரியோதனனிடம்}, “நிச்சயமாக, இவ்வேள்வி யுதிஷ்டிரனுடைய வேள்வியுடன் ஒப்பிட முடியாததாகும்; இது அதில் {யுதிஷ்டிரன் நடத்திய வேள்வியில்} பதினாறில் ஒரு பங்கிற்குக்கூட ஈடாகாது" என்றனர். பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காத பொறுப்பற்ற சிலர் அம்மன்னனிடம் இப்படியே பேசினர்.

இருப்பினும் அவனது {துரியோதனனின்} நண்பர்கள், “உனது இந்த வேள்வி மற்ற அனைத்தையும் விஞ்சி நிற்கிறது. இதுபோன்ற வேள்வியைச் செய்து புனிதமடைந்த யயாதி, நகுஷன், மாந்தாதா, பாரதன் ஆகியோர் சொர்க்கம் சென்றனர்" என்றனர். இத்தகு ஏற்புடைய வார்த்தைகளைத் தனது நண்பர்களிடம் கேட்ட அந்த ஏகாதிபதி {துரியோதனன்}, ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, மிகவும் மனநிறைவு கொண்டு, நகரத்திற்குள் நுழைந்து இறுதியாகத் தனது சொந்த வசிப்பிடத்திற்குச் சென்றான். பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தன் தந்தை {திருதராஷ்டிரன்}, தாய் {காந்தாரி}, பீஷ்மர், துரோணர், கிருபர், ஞானியான விதுரன் ஆகியோரைத் தலைமையாகக் கொண்ட பிறரின் பாதங்களை வழிபட்டான். பிறகு தன் தம்பிகளால் வழிபடப்பட்டான். அந்தத் தம்பிகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவன் {துரியோதனன்}, தம்பிகள் சூழ தனது அற்புத இருக்கையில் அமர்ந்தான்.

அப்போது, சூதனின் மகன் {கர்ணன்} எழுந்து, “ஓ! பாரதகுலத்தில் முதன்மையானவனே {துரியோதனா}, உனது இந்தப் பெரும் வேள்வி, நீ பெற்ற நற்பேறாலேயே நல்ல முறையில் நிறைவடைந்தது. எனினும், பிருதையின் {குந்தியின்} மகன்களைப் {பாண்டவர்களைப்} போர்க்களத்தில் கொன்ற பிறகு, நீ ராஜசூய வேள்வியைச் செய்யும்போது, ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, நான் உனக்கும் மீண்டும் பெருமையை ஏற்படுத்துவேன்" என்றான். பிறகு திருதராஷ்டிரன் மகனான அந்தப் பலமிக்க மன்னன் {துரியோதனன்}, “நீ சொல்வது உண்மையே. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கர்ணா}, தீய மனம் கொண்ட பாண்டவர்கள் கொல்லப்பட்டு, பிரம்மாண்டமான ராஜசூயம் என்னால் செய்யப்படும்போது, ஓ! வீரா {கர்ணா}, நீ மீண்டும் என்னைப் பெருமைப் படுத்துவாய்" என்று மறுமொழி கூறினான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, இப்படிச் சொன்ன அந்தக் கௌரவன் {துரியோதனன்} கர்ணனை ஆரத்தழுவி, ஓ! பலமிக்க மன்னா {ஜனமேஜயா}, வேள்விகளில் முதன்மையான ராஜசூயத்தைக் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தான்.

அந்த மன்னர்களில் சிறந்தவன் {துரியோதனன்}, தன்னைச் சூழ்ந்திருந்த குருக்களிடம், “கௌரவர்களே, பாண்டவர்களைக் கொன்று, பெரும்பொருட்களால் செய்ய வேண்டிய ராஜசூயம் என்ற முதன்மையான வேள்வியை நான் எப்போது செய்வேன்?” என்று கேட்டான். அப்போது, கர்ணன் அவனிடம் {துரியோதனனிடம்}, “ஓ மன்னர்களில் களிறே {யானையே} {ராஜகுஞ்சரா} {துரியோதனா}, நான் சொல்வதைக் கேள். அர்ஜுனனை நான் கொல்லாதவரை, நான் யாரையும் எனது பாதத்தைக் கழுவ விட மாட்டேன்; இறைச்சியை உண்ணாதிருப்பேன்; நான் அசுர நோன்பை நோற்பேன் [1], எவர் என்னிடம் எதைக் (எந்தப் பொருளைக்) கோரினாலும், “அது என்னிடம் இல்லை" என்று எப்போதும் சொல்ல மாட்டேன்.” என்றான் கர்ணன். போர்க்களத்தில் பல்குனனைக் {அர்ஜுனனைக்} கொல்வேன் என்று கர்ணன் சபதமேற்ற போது, பெரும் பலம் வாய்ந்த ரதசாரதிகளும், பெரும் வில்லாளிகளுமான திருதராஷ்டிரனின் மகன்கள் உற்சாகத்தால் பெருத்த ஆரவாரம் செய்தனர். அந்தத் திருதராஷ்டிரனின் மகன்கள் பாண்டவர்கள் ஏற்கனவே வெல்லப்பட்டதாகவே நினைத்தனர். பிறகு, மன்னர்களின் தலைவனான அருள் நிறைந்த துரியோதனன், மனிதர்களில் காளையரான அவர்களை விட்டுவிட்டு, சித்திரரதத் தோட்டத்திற்குள் நுழையும் தலைவன் குபேரனைப் போலத் தனது அறைக்குள் நுழைந்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளிகள் அனைவரும் தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்றனர்.

[1] (பர்துவான் பண்டிட்டுகளின் {வங்காள மொழியில் பாரதத்தை மொழிபெயர்த்தவர்கள் என நினைக்கிறேன்} கூற்றுப்படி) இந்த அசுரர்கள் நோன்பு என்பது மது குடிக்க மாட்டேன் என்று நோன்பேற்பதாகும் {இங்கே கும்பகோணம் தமிழ் பதிப்பும் மதுவுண்ண மாட்டேன் என்றே சொல்கிறது}. ஆனால் இங்கே ஆரியர்களின் சுத்தமான நடத்தைகளைக் கைவிட்டு, "எனது விருப்பம் நிறைவேறும் வரை அசுரர்களின் நடத்தையைக் கைக்கொள்வேன்" என்று கர்ணன் நோன்பேற்பதாகக் கொள்வதே பகுத்தறிவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கங்குலி சொல்கிறார். வழக்கம் போல இந்த விளக்கத்துக்கு மத்தியில் { } என்ற அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும் கருத்துகள் என்னுடையவை.

அதேவேளையில், தூதர்கள் பேசிய வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெரும்பலம் வாய்ந்த வில்லாளிகளான பாண்டவர்கள் பரபரப்படைந்து, கவலையடைந்தனர். (அந்நேரத்தில் இருந்து) அவர்கள் சிறு மகிழ்ச்சியையும் அனுபவிக்கவில்லை. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மேலும், விஜயனை {அர்ஜுனனைக்} கொல்ல சூதமகன் {கர்ணன்} ஏற்ற சபதத்தைப் புலனாய்வின் மூலம் பெற்ற {பாண்டவர்களின்} ஒற்றர்கள், அச்செய்தியை அவர்களுக்குக் {பாண்டவர்களுக்குக்} கொண்டு வந்தனர். ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, இதைக் கேட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, கவலையின் எல்லையை அடைந்தான். துளைக்க முடியாத கவசம் கொண்ட கர்ணனை அற்புத பராக்கிரமம் கொண்டவன் என்று கருதி, தங்கள் துன்பங்களையெல்லாம் நினைவு கூர்ந்த அவன் {யுதிஷ்டிரன்}, அமைதியை அறியவில்லை. கவலை நிறைந்த அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவன் {யுதிஷ்டிரன்}, மூர்க்கமான விலங்குகள் நிறைந்த அந்தத் துவைதவனத்தைக் கைவிட மனதில் தீர்மானம் கொண்டான்.

அதேவேளையில், திருதராஷ்டிரனின் அரச மகன் {துரியோதனன்}, தனது வீரமிக்கத் தம்பிகளுடனும், பீஷ்மர், துரோணர் மற்றும் கிருபருடனும் சேர்ந்து பூமியை ஆளத் தொடங்கினான். படையெடுப்பு செய்த புகழ் என்ற மகுடம் தரித்த சூதமகனின் {கர்ணனின்} உதவியுடன் துரியோதனன், எப்போதும் பூமியின் ஆட்சியாளர்களின் நன்மையிலேயே எப்போதும் குறியோடு இருந்தான். அபரிமிதமான தானங்களுடன் வேள்விகளைச் செய்து அந்தணர்களில் முதன்மையானவர்களை வழிபட்டான். எதிரிகளை வீழ்த்துபவனான அந்த வீரன் {துரியோதனன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தானத்தையும் இன்பம் அனுபவிப்பதையும் பலனாகக் கொண்டவையே செல்வங்கள் என்பதை உறுதியாக மனதில் தீர்மானித்துத் தனது தம்பிகளுக்கு நன்மைகளைச் செய்தான்.



இந்த இடத்தோடு கோஷயாத்திரா பர்வம் முற்றுபெற்று மிருகஸ்வப்நோத்பவ பர்வம் ஆரம்பிக்கிறது. ஆனால் கங்குலி இங்கு முடிக்காமல் கோஷயாத்திரா பர்வத்தைத் தொடர்ந்து செல்கிறார்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்