The duties of robbers! | Shanti-Parva-Section-65 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 65)
பதிவின் சுருக்கம் : க்ஷத்திரியக் கடமைகளின் மேன்மை; கள்வர்களும் பின்பற்ற வேண்டிய கடமைகள்; அரசகடமைகள் மற்றும் தண்டநீதியின் முக்கியத்துவம் ஆகியவற்றை மாந்தாதாவுக்குச் சொன்ன இந்திரன்; பழங்காலத்தில் நடந்த இந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...

இந்திரன் {மந்தாதாவிடம்}, "ஓ! மன்னா {மந்தாதா}, இத்தகு சக்தியைக் கொண்டவையும், பிற கடமைகள் அனைத்தையும் உள்ளடக்கியவையும், கடமைகள் அனைத்திலும் முதன்மையானவையுமான க்ஷத்திரியக் கடமைகள், உலகின் நன்மையை நாடுபவர்களும், உயர் ஆன்மா கொண்டோர்களுமான உன்னைப் போன்ற மனிதர்களால் நோற்கப்பட வேண்டும். அந்தக் கடமைகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லையென்றால், அனைத்து உயிரினங்களும் அழிவையடையும்.(1) அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட மன்னன், உழவுக்கான நிலத்தை மீட்பது, அதற்கு உரமிடுவது, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளப் பெரும் வேள்விகளைச் செய்வது, கையேந்துவதைப் புறக்கணிப்பது {துறவைப் புறக்கணிப்பது}, குடிமக்களைப் பாதுகாப்பது போன்றவற்றையே தன் முதன்மையான கடமைகளாகக் கருத வேண்டும்.(2) (கொடைபெறுதலைக்) துறப்பதே அறங்களில் முதன்மையானது எனத் தவசிகள் சொல்கின்றனர். அனைத்து வகைத் துறவுகளிலும், போரில் உடலைக் கைவிடுவதே முதன்மையானது. எப்போதும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்றவர்களும்,(3) தங்கள் ஆசான்களிடம் முறையாகக் காத்திருந்தவர்களும், பெரும் கல்வி பெற்றவர்களுமான பூமியின் ஆட்சியாளர்கள், ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டு, இறுதியில் எவ்வாறு தங்கள் உடல்களைத் துறந்தனர் என்பதை உன் கண்களாலேயே கண்டாய். அறத்தகுதி ஈட்ட விரும்பும் க்ஷத்திரியன், பிரம்மச்சரிய வாழ்வுமுறையை வாழ்ந்து, பிறகு எப்போதும் தகுதியைத் தரக்கூடியதான இல்லற வாழ்வையே நோற்க வேண்டும்.(4) (குடிமக்களுக்கிடையே) நீதி தொடர்புடைய சராசரி கேள்விகளின் வழக்கில் தீர்ப்பளிப்பதில் அவன் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். அனைத்து வகையினரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்வதற்கும், அனைவரையும் பாதுகாப்பதற்கும், பல்வேறு திட்டங்கள், வழிமுறைகள், ஆற்றல்,(5) (நோக்கங்கள் நிறைவடைய நாடும்) உழைப்பு ஆகியவற்றுக்கும், அனைத்துக் கடமைகளையும் தங்கள் இலக்கினுள் கொண்ட க்ஷத்திரியக் கடமைகளே முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன. அரச கடமைகளின் விளைவாகவே பிற வகையினர் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்ற இயலும். இதன்காரணமாகவே தகுதியை உண்டாக்குவதில் அரச கடமைகளைச் சார்ந்தே பிற கடமைகள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.(6)