Showing posts with label திரௌபதி. Show all posts
Showing posts with label திரௌபதி. Show all posts

Saturday, January 11, 2020

ஒவ்வொருவராக விழுந்தனர்! - மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 2

Falling down one by one! | Mahaprasthanika-Parva-Section-2 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : வரிசையாகச் செல்லும்போது திரௌபதியும் பாண்டவர்களும் ஒவ்வொருவராக விழுவது; அவர்கள் விழக் காரணம் கேட்ட பீமனுக்குப் பதில் சொல்லி வந்த யுதிஷ்டிரன்; நாய் மட்டும் தொடர்ந்து சென்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்டவர்களும், யோகத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களுமான அந்த இளவரசர்கள் {பாண்டவர்கள்} வடக்கு நோக்கிச் சென்று மிகப் பெரும் மலையான ஹிமவானை {இமயத்தைக்} கண்டனர்.(1) ஹிமவானைக் கடந்த அவர்கள், மணல் நிறைந்த ஒரு பெரிய பாலைவனத்தைக் கண்டனர். பிறகு அவர்கள், உயர்ந்த சிகரங்கள் கொண்ட மலைகளில் முதன்மையான மேரு மலையைக் கண்டனர்.(2) யோகத்தில் குவிந்திருந்த அந்த வலிமைமிக்கவர்கள் அனைவரும் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, யாஜ்ஞசேனி {திரௌபதி} யோகத்தில் இருந்து வீழ்ந்து பூமியில் விழுந்தாள்.(3)

Saturday, January 04, 2020

சகாதேவன் புலம்பல்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 22

The lamentation of Sahadeva! | Asramavasika-Parva-Section-22 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 22)


பதிவின் சுருக்கம் : குந்தியைக் காண்பதற்காகப் புலம்பிய சகாதேவன் மற்றும் திரௌபதி; திருதராஷ்டிரன் முதலியோரைக் காண தம்பிமாருடனும், நகரமக்களுடனும் காட்டுக்குச் சென்ற யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மனிதர்களில் முதன்மையானவர்களும், தங்கள் தாயை மகிழ்ச்சியடையச் செய்பவர்களுமான வீரப் பாண்டவர்கள் துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்தனர்.(1) முன்பு எப்போதும் அரச அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்கள், அந்நேரத்தில் தங்கள் தலைநகரத்தில் எந்தச் செயல்களையும் கவனிக்காமல் இருந்தனர்.(2) துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள், எதனிலிருந்தும் இன்பத்தை ஈட்டத் தவறினார்கள். அவர்களிடம் யாரும் எதுவும் கேட்டாலும் எந்தப் பதிலையும் அவர்கள் சொல்லவில்லை.(3) தடுக்கப்பட முடியாதவர்களான அந்த வீரர்கள் பெருங்கடலைப் போன்ற ஆழமான ஈர்ப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும், துன்பத்தால் தாங்கள் தங்கள் ஞானத்தையும், புலன் உணர்வுகளையும் இழந்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள்.(4)

Sunday, October 29, 2017

பித்தனாகாதீர், ஆட்சிசெய்வீராக! - சாந்திபர்வம் பகுதி – 14

Don't be mad, govern! | Shanti-Parva-Section-14 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 14)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைச் சமாதானப்படுத்திய திரௌபதி; தண்ட நீதி மற்றும் மன்னரின் சிறப்பைச் சொன்னது; தார்தராஷ்டிரர்கள் நியாயமாகவே கொல்லப்பட்டதாகச் சொன்னது; ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன திரௌபதி...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குந்தியின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வேதங்களில் உள்ள இந்த உண்மைகளைச் சொல்லிக் கொண்டிருந்த தன் தம்பிகள் சொல்வதைப் பேச்சற்றவனாகக் கேட்டுக் கொண்டிருந்தபோது,(1) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெண்களில் முதன்மையானவளும், அகன்ற கண்களைக் கொண்டவளும், பேரழகியும், உன்னதப் பிறப்பைக் கொண்டவளுமான திரௌபதி, பல சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் ஒப்பானவர்களான தன் தம்பியருக்கு மத்தியில் யானை மந்தையின் தலைமையானையைப் போல அமர்ந்திருந்த அந்த மன்னர்களில் காளையிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னாள்.(2,3)

Sunday, October 08, 2017

மூவாயிரம் வருடங்கள் திரிவீர்! - சௌப்திக பர்வம் பகுதி – 16

Thou shall wander for three thousand years! | Sauptika-Parva-Section-16 | Mahabharata In Tamil

(ஐஷீக பர்வம் - 07)


பதிவின் சுருக்கம் : கருவை மீட்பேன் என்று சொன்ன கிருஷ்ணன்; அஸ்வத்தாமனைச் சபித்தது; கிருஷ்ணனின் சாபத்தை அங்கீகரித்த வியாசர்; சாபத்தை ஏற்றுக் கொண்டு, தன் தலையில் இருந்த மணியைக் கொடுத்த அஸ்வத்தாமன்; திரௌபதியிடம் திரும்பிச் சென்ற பாண்டவர்கள்; திரௌபதியிடம் மணியைக் கொடுத்த பீமன்; அம்மணியைத் தலையில் சூடிக்கொள்ளுமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன திரௌபதி...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} (பாண்டவப் பெண்களின் கருவறையில்) அவ்வாயுதம் ஏவப்படப்போவதை அறிந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, உற்சாகம் நிறைந்த இவ்வார்த்தைகளை அவனிடம் {அஸ்வத்தாமனிடம்} சொன்னான்:(1) "பக்தி நோன்புகளை நோற்கும் ஒரு குறிப்பிட்ட பிராமணர், இப்போது அர்ஜுனனின் மருமகளாக இருப்பவளான விராடனின் மகள் {உத்தரை} உபப்லாவ்யத்தில் இருக்கும்போது அவளைக் கண்டு,(2) "குரு குலம் அருகிப் போகும்போது உனக்கு ஒரு மகன் பிறப்பான். இந்தக் காரணத்திற்காக அந்த உன் மகன் பரீக்ஷித் என்ற பெயரால் அழைக்கப்படுவான்" என்றார்.(3) அந்தப் பக்திமானின் வார்த்தைகள் உண்மையாகும். பாண்டவர்கள் பரீக்ஷித் என்ற பெயரில் ஒரு மகனை {பேரனை} அடைவார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.(4)

பிராயத்தில் அமர்ந்த திரௌபதி! - சௌப்திக பர்வம் பகுதி – 11

Draupadi sat on praya! | Sauptika-Parva-Section-11 | Mahabharata In Tamil

(ஐஷீக பர்வம் - 02)


பதிவின் சுருக்கம் : திரௌபதியை யுதிஷ்டிரனிடம் அழைத்து வந்த நகுலன்; மயக்கமடைந்த திரௌபதி; அஸ்வத்தாமனைப் பாண்டவர்கள் கொல்லவில்லையெனில் பிராயத்தில் அமரப்போவதாகத் தீர்மானித்த திரௌபதி; அவளுக்கு ஆறுதல் சொன்ன யுதிஷ்டிரன்; அஸ்வத்தாமனைக் கொன்று அவனுடைய தலையிலுள்ள மணியைக் கொண்டு வரச் சொன்ன திரௌபதி; நகுலனைச் சாரதியாகக் கொண்டு அஸ்வத்தாமனைக் கொல்லப் புறப்பட்ட பீமன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஜனமேஜயா, போரில் தனது மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கண்ட மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆன்மா பெருந்துயரில் மூழ்கியது.(1) அந்த மகன்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளை நினைத்துப் பார்த்ததும் அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதியை ஆழமான சோகம் ஆட்கொண்டது.(2) உணர்வற்று நடுங்கிக் கொண்டிருந்த அவனுடைய கண்கள் கண்ணீரால் குளித்தன. அப்போது அவனது நண்பர்களும் கவலையில் மூழ்கியிருந்தாலும், அவனுக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கினர்.(3) அந்நேரத்தில் {தன் அண்ணனின்} குற்றேவல்களை நிறைவேற்றுவதில் திறம் கொண்டவனான நகுலன், பெரும் துயரில் இருந்த இளவரசி கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்}, சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில் அங்கே வந்து சேர்ந்தான்.(4) 

Tuesday, June 14, 2016

சுபத்திரையின் புலம்பல்! - துரோண பர்வம் பகுதி – 078

The lament of Subhadra! | Drona-Parva-Section-078 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டுப் புலம்பத் தொடங்கிய சுபத்திரை; சுபத்திரை, திரௌபதி, உத்தரை ஆகியோர் அழுது புலம்பி மயங்கி விழுந்தது; நீர் தெளித்து அவர்களின் மயக்கத்தைத் தெளிவித்த கிருஷ்ணன் மீண்டும் அர்ஜுனனிடம் வந்தது…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட சுபத்திரை, தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டு இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபடத் தொடங்கினாள்: “ஓ! பேறற்றவளான என் மகனே, ஓ! உன் தந்தைக்கு {அர்ஜுனனுக்கு} இணையான ஆற்றல் கொண்டவனே, ஓ! குழந்தாய் {அபிமன்யு}, போருக்குச் சென்ற நீ எவ்வாறு அழிந்தாய்? ஓ! குழந்தாய் {அபிமன்யு}, அழகான பற்கள் மற்றும் சிறந்த கண்களால் அருளப்பட்டதும், நீலத் தாமரைக்கு {கருநெய்தலுக்கு} [1] ஒப்பானதுமான உன் முகம், ஐயோ, போர்க்களத்தின் புழுதியால் மறைக்கப்பட்டு இப்போது எவ்வாறு காணப்படும்?


[1] அபிமன்யுவும் கரிய நிறம் கொண்டவனாக இருந்திருக்கலாம். வேறொரு பதிப்பில் இவ்வரி, "கருநெய்தல் போலக் கறுப்பு நிறமுள்ள அழகான முகம்” என்று இருக்கிறது.

ஐயமில்லாத துணிவுடன் புறமுதுகிடாத உன்னை, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தலை, கழுத்து, கரங்கள், மார்பு, அடிவயிறு மற்றும் அங்கங்களுடன் களத்தில் விழுந்த உன்னை, அழகிய கண்களைக் கொண்ட உன்னை, ஆயுதக் காயங்களுடன் சிதைந்து போயிருக்கும் உன்னை உதிக்கும் சந்திரனைப் போலவே அனைத்து உயிரினங்களும் காண்கின்றன. ஐயோ, விலையுயர்ந்த மிக வெண்மையான படுக்கையில் கிடப்பவனான நீ, அனைத்து ஆடம்பரங்களுக்கும் தகுந்தவனான நீ, ஐயோ, கணைகளால் துளைக்கப்பட்ட உன் உடலுடன் வெறும் பூமியில் {தரையில்} எவ்வாறு இன்று உறங்குகிறாய்?

முன்னர், அழகிகளில் முதன்மையானோரால் பணிவிடை செய்யப்பட்ட வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {அபிமன்யு}, ஐயோ, போர்க்களத்தில் விழுந்து, நரிகளின் துணையுடன் தன் காலத்தை எவ்வாறு கழிக்கிறான்? முன்னர், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோரால் பாடிப் புகழப்பட்டவன், ஐயோ, கோரமாக ஊளையிடும் ஊனுண்ணும் விலங்குகளால் இன்று வரவேற்கப்படுவானே. ஓ! தலைவா {அபிமன்யு}, பாண்டவர்களையும், பாஞ்சாலர்கள் அனைவரையும் உன் பாதுகாவலர்களாகக் கொண்டும், ஐயோ, ஆதரவற்ற நிலையில் நீ யாரால் கொல்லப்பட்டாய்?

ஓ! மகனே, ஓ! பாவமற்றவனே {அபிமன்யு}, உன்னைக் கண்டு நான் இன்னும் நிறைவு கொள்ளவில்லையே. பேறற்றவளான நான் யமனின் வசிப்பிடத்திற்குச் செல்வேன் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. பெரிய கண்கள் மற்றும் அழகிய குழல்களைக் கொண்டதும், இனிய வார்த்தைகள், களிப்புமிக்க நறுமணம் ஆகியவற்றை வெளியிடுவதுமான பருக்களற்ற உன் மிருதுவான முகத்தை என் கண்களால் மீண்டும் எப்போது நான் காணப் போகிறேன்? பீமசேனரின் பலத்திற்கும், பார்த்தரின் {அர்ஜுனரின்} வில்வித்தகத்திற்கும், விருஷ்ணி வீரர்களின் ஆற்றலுக்கும், பாஞ்சாலர்களின் பலத்திற்கும் ஜயோ {இஃது இழிவே}! ஓ! வீரா {அபிமன்யு}, போரில் ஈடுபடுகையில் உன்னைப் பாதுகாக்க இயலாத கைகேயர்கள், சேதிகள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோருக்கும் ஐயோ {இஃது இழிவே}!

நான் இந்தப் பூமியை வெறுமையானதாகவும், உற்சாகமற்றதாகவும் இன்று காண்கிறேன். என் அபிமன்யுவைக் காணாது என் கண்கள் துயரால் அல்லலுறுகின்றன. நீ வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கை {சுபத்திரையின்} மகனும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} மகனும், வீரனும், அதிரதனும் ஆவாய். ஐயோ, கொல்லப்பட்ட உன்னை நான் எவ்வாறு காண்பேன்? ஐயோ ஓ! வீரா {அபிமன்யு}, கனவில் காணப்பட்ட பொக்கிஷமாகத் தோன்றி மறைந்தாயே. மனிதரைச் சேர்ந்த அனைத்தும் நீர்க்குமிழியைப் போல நிலையற்றனவே.

உனக்கு நேர்ந்த தீங்கால் இந்த உன் இளம் மனைவி {உத்தரை} துயரில் மூழ்கியிருக்கிறாள். ஐயோ, கன்றில்லா பசுவைப் போல இருக்கும் அவளை நான் எவ்வாறு தேற்றுவேன்? ஐயோ, ஓ! மகனே {அபிமன்யு}, உன்னைக் காண ஏங்கி, பெருமையின் கனியைத் தாங்கப் போகும் சமயத்தில், குறித்த காலத்திற்கு முன்பே என்னிடம் இருந்து சென்றுவிட்டாயே. கேசவரை {கிருஷ்ணரை} உன் பாதுகாவலராகக் கொண்டும், ஆதரவற்றவனைப் போல நீ கொல்லப்பட்டதால், ஞானியராலும் யமனின் நடத்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதில் ஐயமில்லை.

ஓ! மகனே {அபிமன்யு}, வேள்விகள் செய்வோர், தூய்மையடைந்த ஆன்மா கொண்ட பிராமணர்கள், பிரம்மச்சரியம் பயின்றோர், புனித நீர்நிலைகளில் நீராடியோர், நன்றிமிக்கோர், தொண்டாற்றுவோர், தங்கள் ஆசான்களுக்குச் சேவை செய்யத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டோர், அபரிமிதமான வேள்விக் கொடை அளித்தோர் ஆகியோரின் உலகங்கள் உனதாகட்டும்.

போரிடுகையில் துணிச்சலுடன் புறமுதுகிடாதவர்கள், தங்கள் எதிரிகளைக் கொன்றுவிட்டுப் போரில் வீழ்ந்தவர்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை {கதியை} நீயும் அடைவாயாக.

ஆயிரம் பசுக்களைத் தானமளித்தவர்கள், வேள்விகளில் தானமளித்தவர்கள், தகுந்தோருக்கு வீடுகள் மற்றும் மாளிகைகளைத் தானமளித்தவர்கள் ஆகியோர் எந்த மங்கல முடிவை அடைவார்களோ, ரத்தினங்களையும், நகைகளையும் தகுந்த பிராமணர்களுக்குத் தானமளித்தோர், குற்றவாளிகளைத் தண்டிப்போர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

பிரம்மச்சரியத்துடன் கடும் நோன்புகளை நோற்ற முனிவர்கள், ஒரே கணவனுடன் வாழ்ந்த பெண்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, நன்னடத்தைக் கொண்ட மன்னர்கள், கடமைகளை முறையாக நோற்று, ஒன்றன்பின் ஒன்றாக வாழ்வின் நான்கு நிலைகளையும் வாழ்ந்தவர்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, ஏழைகளிடமும், துயருற்றோரிடமும் கருணை கொண்டோர், தங்களிடமும், தங்களை அண்டியிருப்போரிடமும் எந்தப் பாகுபாடுமின்றிச் சமமாக இனிப்புகளைப் பகிர்ந்து கொள்வோர், வஞ்சகம் மற்றும் கொடுமை ஆகியவற்றை எப்போதும் செய்யாதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, நோன்புகள் நோற்பவர்கள், அறம் சார்ந்தோர், ஆசான்களின் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டோர், விருந்தோம்பாமல் எவ்விருந்தினரையும் அனுப்பாதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, துன்பத்திலும், மிகக் கடுமையான இக்கட்டான சூழல்களிலும் துன்பத்தீயில் எவ்வளவு அதிகமாக எரிக்கப்பட்டாலும், தங்கள் ஆன்மாக்களின் சமநிலையை {மன அமைதியை} இழக்காதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ மகனே {அபிமன்யு}, தங்கள் தந்தைமார், தாய்மார் மற்றும் பிறரின் சேவைக்கு எப்போதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டோர், தங்கள் மனைவியரிடம் மட்டுமே அர்ப்பணிப்பு கொண்டோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, பிறர் மனைவியரிடம் தங்களைத் தாங்களே தடுத்துக் கொள்வோர், பருவ காலங்களில் தங்கள் மனைவியரிடம் மட்டும் தோழமையை நாடுவோர் ஆகிய ஞானியர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, அனைத்து உயிரினங்களையும் சமாதானக் கண்ணுடன் நோக்குவோர், பிறருக்கு எப்போதும் துன்பத்தை அளிக்காதோர், எப்போதும் மன்னிப்போர் {பொறுமையுடன் இருப்போர்} ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, தேன், இறைச்சி, மது, செருக்கு, பொய்மை ஆகியவற்றில் இருந்து விலகியிருப்போர், பிறருக்குத் துன்பம் தருவதைத் தவிர்ப்போர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை {கதியை} நீயும் அடைவாயாக.

அடக்கமுடையோர், அனைத்து சாத்திரங்களின் அறிவு கொண்டோர், அறிவில் நிறைவு கொண்டோர், ஆசைகளைக் கட்டுக்குள் வைத்தோர் ஆகியோர் அடையும் இலக்கை நீயும் அடைவாயாக” என்றாள் {சுபத்திரை}.

{இப்படி சுபத்திரை} துயரத்தில் பீடிக்கப்பட்டு இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பாஞ்சால இளவரசி (திரௌபதி), விராடன் மகளுடன் {உத்தரையுடன்} உற்சாகமற்ற  அந்தச் சுபத்திரையிடம் வந்தாள். பெரும் துன்பத்தால் அவர்கள் அனைவரும், இதயத்தைப் பிளக்கும் புலம்பல்களில் ஈடுபட்டு அதிகமாக அழுதனர். சோகத்தால் நினைவிழந்த மனிதர்களைப் போல, அவர்கள் அனைவரும் மயங்கிப் பூமியில் விழுந்தனர்.

நீருடன் தயாராக நின்ற கிருஷ்ணன், இதயம் துளைக்கப்பட்டவளும், அழுது, சுயநினைவை இழந்து, நடுங்கிக் கொண்டிருந்தவளுமான தன் தங்கையின் {சுபத்திரையின்} மேல் நீரைத் தெளித்து, ஆழமாகத் துன்புற்று, அத்தகு சந்தர்ப்பத்தில் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொன்னான். அந்தத் தாமரைக் கண்ணன் {கிருஷ்ணன்}, "ஓ! சுபத்திரையே, துன்புறாதே! ஓ! பாஞ்சாலி {திரௌபதியே}, உத்தரையைத் தேற்றுவாயாக! க்ஷத்திரியரில் காளையான அபிமன்யு மெச்சத்தகுந்த இலக்கையே அடைந்திருக்கிறான்.

ஓ! அழகிய முகம் கொண்டவளே {சுபத்திரையே}, பெரும்புகழ் கொண்ட அபிமன்யு அடைந்த இலக்கையே நம் குலத்தில் உயிருடன் இருப்போர் அனைவரும் அடையட்டும். ஓ! பெண்ணே {சுபத்திரையே}, எவருடைய உதவியுமில்லாமல் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு} அடைந்த சாதனையையே, எங்கள் நண்பர்களுடன் சேர்ந்த நாங்கள் அனைவரும் இந்தப் போரில் அடைய விரும்புகிறோம்” என்றான் {கிருஷ்ணன்}.

தன் தங்கையையும் {சுபத்திரையையும்}, திரௌபதியையும், உத்தரையையும் இப்படித் தேற்றிய பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த வலிமைமிக்கக் கரத்தைக் கொண்டோன் (கிருஷ்ணன்} பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} சென்றான். அப்போது, கிருஷ்ணன், அங்கிருந்த மன்னர்கள், நண்பர்கள் மற்றும் அர்ஜுனனை வணங்கியபடியே (பின்னவனின் {அர்ஜுனனின்}) அந்தப்புரத்திற்குள் நுழைந்தான். பிறகு அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

Wednesday, June 24, 2015

துகிலுரிக்கப்படுகையில் கண்ணன் ஏன் வரவில்லை?




திருவாழ்மார்பன் என்ற வாசக நண்பர் ஒருவர் மேற்கண்ட கேள்வியை நமது விவாத மேடையில் (http://mahabharatham.arasan.info/p/blog-page_23.html#nabble-td435)கேட்டிருந்தார்.

அதற்கு நான், "அச்சமயத்தில் கால்நடையாக வந்து சபையில் மறைந்திருந்தான் என்று ஒரு குறிப்பு உள்ளது.  அதேவேளை தான் சால்வ நாட்டில் போரில் இருந்ததாக கிருஷ்ணன் சொல்வதாகவும்  ஒரு குறிப்பும் உள்ளது. திரௌபதி துகிலுரிப்பு அந்த இடத்தைத் தவிர மகாபாரத்தில் வேறு எங்குமே குறிப்பிடப்படவில்லை என்றே நினைக்கிறேன். இதில் தெளிவடைந்தால்தான். கிருஷ்ணன் ஏன் வரவில்லை என்பதற்குள் நுழையமுடியும்." என்று சுருக்கமாகப் பதிலளித்திருந்தேன்.

அக்கேள்விக்கு நண்பர் தாமரை அவர்களும் பின்னர் பதிலளித்திருந்தார். அருமையான விளக்கங்களுடன் தர்க்கரீதியாகவும் பக்திரீதியாகவும் அவர் விளக்கியிருந்த விதம் அருமையாக இருந்தது. ஸ்ரீமத் பாகவத புராணத்தில் கீழ்க்கண்ட விளக்கங்கள் இருக்கின்றன என்றும் இறுதியில் அவர் குறிப்பிடுகிறார்.

இவ்விளக்கம் முகப்பு பக்கத்திலும் வர வேண்டும் என்று எண்ணி இங்கே அதை மறுபதிவு செய்கிறேன். கீழ்வருவன நண்பர் திரு.தாமரை அவர்களின் விளக்கம்.

**************************************************

கண்ணன் சால்வ மன்னனுடன் போரில் இருந்தான் என்பது ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைக்க வேண்டிய செய்தி. காரணம் இருக்கிறது. திரௌபதி கண்ணனைச் சரணடைந்தவுடன் அவள் ஆடை வளர்ந்து மானங்காக்கப்பட்டதே. அப்படி இருந்தும் அவன் சால்வ மன்னனுடன் போரில் இருந்தது காரணம் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

கண்ணன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றவில்லை? 

(கண்ணனின் அற்புத விளக்கம்)

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.

இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.

ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்

.
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.

நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.

விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.

அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.

தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.

அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய்.

மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,
எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?

ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:

''துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

'ஐயோ... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;

என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.

பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.

அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..

.துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

''அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.

''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?'' புன்னகைத்தான் கண்ணன்

.''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.

அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.

நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!

பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?

அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!

இந்த விளக்கம் பாகவத புராணத்தில் உள்ளது.

முழு விவாதத்தையும் படிக்க : http://mahabharatham.arasan.info/p/blog-page_23.html#nabble-td435 என்ற சுட்டிக்குச் செல்லவும்


Friday, May 08, 2015

"இந்தக் கூந்தலை நினைப்பாயாக!" என்ற திரௌபதி! - உத்யோக பர்வம் பகுதி 82

"Call these tresses to thy mind" said Draupadi! | Udyoga Parva - Section 82 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –11)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் வார்த்தைகளைத் துரியோதனன் கேட்க மாட்டான் என்றும்; நாட்டைக் கொடுக்காத துரியோதனனிடம் சமாதானம் பேசுவது தகாது என்றும்; கொல்லத்தக்கவர்களைக் கொல்லாதிருப்பதும் பாவமே என்றும்; கிருஷ்ணனும் பாண்டவர்களும் உயிரோடு இருக்கும்போதே தனக்கு அவமதிப்பு நிகழ்ந்தது என்றும்; அதைச் செய்த துச்சாசனனின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்றும் திரௌபதி சொன்னது; அர்ஜுனனின் வில்திறத்தையும், பீமனின் பலத்தையும் இகழ்ந்து கிருஷ்ணனிடம் திரௌபதி சொன்னது; திரௌபதிக்கு நீதி செய்வதாகக் கிருஷ்ணன் உறுதியளித்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அறமும் பொருளும் நிறைந்த மன்னரின் {யுதிஷ்டிரரின்} அமைதிநிறைந்த வார்த்தைகளைக் கேட்டவளும், பெரும் துயரத்தில் இருந்தவளும், நீண்ட கூந்தலுடையவளும், மன்னன் துருபதனின் மகளுமான கிருஷ்ணை {திரௌபதி}, சகாதேவனையும், வலிமைமிக்கத் தேர் வீரனான சாத்யகியையும் புகழ்ந்தபடி, சாத்யகியின் அருகில் அமர்ந்திருந்த மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினாள்.


பீமசேனன் சமாதானம் அறிவிப்பதைக் கண்ட அந்தப் புத்திசாலிப் பெண் {திரௌபதி}, துயரம் மேலிட, கண்கள் குளமாக, "ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, ஓ! நீதிமானே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தனது ஆலோசகர்களுடன் கூடிய திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பாண்டவர்களின் மகிழ்ச்சியை எப்படி ஏமாற்றுகரமாகத் திருடினான் என்பதை நீ அறிவாய். ஓ! தாசார்ஹ குலத்தவனே {கிருஷ்ணா}, தனிப்பட்ட முறையில் மன்னரால் {திருதராஷ்டிரரால்} சஞ்சயனுக்குச் சொல்லப்பட்ட செய்தியை நீ அறிவாய்.


பதிலுக்குச் சஞ்சயனிடம் சொல்லப்பட்ட அனைத்தையும் நீ கேட்டாய். ஓ! பெரும் பிரகாசம் உடையவனே {கிருஷ்ணா}, "அவிஸ்தலம், விருகஸ்தலம், மாகந்தி, வாரணாவதம் மற்றும் ஐந்தாவதாக ஏதாவது ஒன்று என ஐந்து கிராமங்கள் மட்டும் எங்களுக்குக் கொடுக்கப்படட்டும்" என்ற வார்த்தைகளே சொல்லப்பட்டன. ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, ஓ! கேசவா {கிருஷ்ணா}, துரியோதனனுக்கும், அவனது ஆலோசகர்களுக்கும் உன்னால் சொல்லப்பட வேண்டியது என்று முன்னர்ச் சொல்லப்பட்ட செய்தி இதுவே.

ஆனால், ஓ! கிருஷ்ணா, ஓ! தாசார்ஹ குலத்தவனே, அடக்கமும், அமைதிக்கான ஆவலும் உடைய யுதிஷ்டிரரின் வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி சுயோதனன் {துரியோதனன்} நடக்கமாட்டான். ஓ! கிருஷ்ணா, நாட்டைக் கொடுக்காமல் சமாதானத்தை அடைய துரியோதனன் விரும்பினால், அத்தகு சமாதானத்தைச் செய்து கொள்ள அங்குச் செல்ல வேண்டிய தேவையே இல்லை. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, கோபத்துடன் இருக்கும் திருதராஷ்டிரரின் படையை எதிர்கொள்ளச் சிருஞ்சயர்களுடன் கூடிய பாண்டவர்கள் இயன்றவர்களே. அவர்கள் {கௌரவர்கள்} சமரசக் கலைகளுள் எதற்கும் உடன்படாமல் இருக்கிறார்கள் என்றால், இனியும் அவர்களுக்கு நீ கருணை காட்டுவது முறையாகாது.

ஓ! கிருஷ்ணா, தன் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் ஒருவன், சமரசத்தின் மூலமாகவோ, கொடைகளின் மூலமாகவோ சமாதானத்துக்கு உடன்படாத தன் எதிரிகளைக் கடுமையாக நடத்த வேண்டும். எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்ட அச்யுதா {கிருஷ்ணா}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் உதவியைப் பெற்ற நீ, கடுமையான தண்டனைக்குத் தகுந்த அவர்களை விரைவாகத் தண்டிக்க வேண்டும். உண்மையில், அது பிருதையின் {குந்தியின்} மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} நன்மை செய்ததாகவே ஆகும். உனக்கும் அது புகழைக் கொடுக்கும். ஓ! கிருஷ்ணா, சாதிக்கப்பட்டால், அதுவே க்ஷத்திரிய குலம் முழுமைக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கும்.

பேராசை கொண்டிருப்பவன் க்ஷத்திரியனாக இருப்பினும், பிராமணனைத் தவிர வேறு எந்த வகையைச் சார்ந்தவனாக இருப்பினும், பாவம் நிறைந்த அவன், க்ஷத்திரிய வகைக்கான கடமைகளில் உண்மையாக இருக்கும் ஒருவனால் நிச்சயம் கொல்லத்தக்கவனே ஆவான். ஓ! ஐயா, பிற வகையைச் சேர்ந்த அனைவருக்கும் பிராமணர்களே ஆசான்களாக இருப்பதாலும், அனைத்தையும் பகிர்ந்து கொள்வதில் முதலாக இருப்பதாலும் பிராமணர்கள் இதில் தவிர்க்கப்படலாம்.

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சாத்திரங்கள் அறிந்த நபர்கள், கொல்லத்தகாதவர்களைக் கொல்வது பாவம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். எனவே, கொல்லத்தக்கவர்களைக் கொல்லாதிருப்பதும் அதற்கு நிகரான பாவமே.

ஆகவே, ஓ! கிருஷ்ணா, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் படைகளோடு சேர்ந்து, உன்னைப் பாவம் அண்டாதவாறு செயல்படுவாயாக. உன் மீதுள்ள அதீத நம்பிக்கையாலேயே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சொன்னதையே நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, என்னைப் போன்ற பெண் இந்தப் பூமியில் வேறு எவள் இருக்கிறாள்? வேள்விப் பீடத்தில் உதித்தவள் நான், மன்னன் துருபதரின் மகள் நான். ஓ! கிருஷ்ணா, உனது அன்பிற்குரிய நண்பனான திருஷ்டத்யும்னனின் தங்கை நான். திருமணத்தின் மூலமாக அஜமீட குலத்துப் பெண்ணாகவும், ஒப்பற்ற பாண்டுவின் மருமகளாகவும் ஆனவள் நான். காந்தியில் ஐந்து இந்திரர்களுக்கு ஒப்பான பாண்டு மகன்களின் ராணி நான். இந்த ஐந்து வீரர்களால் {பாண்டவர்களால்}, ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்கத் தேர்வீரர்களான ஐந்து மகன்களைப் பெற்றேன். அபிமன்யுவைப் போன்றே அவர்களும் உனக்குத் தார்மீக அடிப்படையில் கட்டுண்டவர்களே.

இப்படிப்பபட்ட நான், ஓ! கிருஷ்ணா, நீ வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, தலைமுடியைப் பற்றிச் சபைக்கு இழுத்து வரப்பட்டு, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} கண் முன்பாகவே அவமதிக்கப்பட்டேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டு மகன்களும், பாஞ்சாலர்களும், விருஷ்ணிகளும் உயிரோடு இருக்கும்போதே, அந்த இழிந்தவர்களால் சபையின் பார்வைக்கு வெளிப்படுத்தப்பட்டு, அடிமையைப் போல நடத்தப்பட்டேன். இதைக் கண்டும் பாண்டவர்கள் அனைவரும் கோபப்படாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். அப்போதே நான் உன்னை என் இதயத்தால் {மனதால்} அழைத்தேன்.

ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, "என்னைக் காப்பாற்று, ஓ! என்னைக் காப்பாற்று" என்று சொல்லி {உன்னை} அழைத்தேன். பிறகு ஒப்பற்ற மன்னரும், எனது மாமனாருமான திருதராஷ்டிரர், என்னிடம், "ஓ! பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, ஏதாவது வரம் கேள். நீ எனது கையால் வரங்களையும், ஏன் மரியாதையையும் கூடப் பெறத் தகுந்தவளாவாய்" என்றார். இப்படிச் சொல்லப்பட்ட நான், "தேர்கள் மற்றும் ஆயுதங்களுடன் பாண்டவர்கள் விடுதலை பெற்றவர்களாகட்டும்" என்று கேட்டேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அதனால் பாண்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், காட்டுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது இந்தச் சோகங்கள் அனைத்தையும் நீ அறிவாய். ஓ! தாமரை போன்ற கண்களை உடையவனே {கிருஷ்ணா}, இந்தத் துயரில் இருந்து எனது கணவர்கள், உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய என்னைக் காப்பாயாக. ஓ! கிருஷ்ணா, தார்மீக அடிப்படையில் நான் பீஷ்மர் மற்றும் திருதராஷ்டிரர் ஆகிய இருவருக்கும் மருமகளாவேன். அப்படியிருந்தும், நான் வலுக்கட்டாயமாக அடிமையாக்கப்பட்டேன். ஓ! கிருஷ்ணா, அந்தத் துரியோதனன் இந்தக் கணம் வரை உயிரோடு இருக்கிறான், பார்த்தரின் {அர்ஜுனரின்} விற்திறத்திற்கு ஐயோ, பீமசேனரின் பலத்திற்கு ஐயோ. உனது கைகளாலான எந்த உதவிக்காவது நான் தகுந்தவளென்றால், உனக்கு என் மீது ஏதாவது கருணை இருந்தால், ஓ! கிருஷ்ணா, உனது கோபம் திருதராஷ்டிரர் மகன்கள் மீது திரும்பட்டும்" என்றாள் {திரௌபதி}

திரௌபதி துகிலுரித்தல் சம்பவம் குறித்து இங்கே ஏதும் குறிப்பில்லை.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்னதும், தாமரை இதழ்களைப் போன்ற பெரியதும் கருமையானதுமான கண்களைக் கொண்ட அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, கண்ணீரால் குளித்தாள். சுருள் முனை கொண்டதும், அடர்நீல நிறம் கொண்டதும், அனைத்து நறுமணப் பொருட்களால் நறுமணமூட்டப்பட்டதும், அனைத்து மங்கலக்குறிகளைக் கொண்டதும், பின்னலாகக் கட்டப்பட்டிருந்தாலும், பெரும்பாம்பு போலப் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருந்ததுமான தனது கூந்தலைத் தன் இடது கையில் பற்றிக் கொண்டு, பெண் யானையைப் போல நடந்து, தாமரைக் கண் கிருஷ்ணனை அணுகி, "எதிரியுடன் சமாதானம் கொள்ள ஆவலாய் இருக்கும் தாமரைக் கண் கொண்டவனே {கிருஷ்ணா}, நீ எந்தச் செயலைச் செய்தாலும், துச்சாசனனின் முரட்டுக் கைகளால் பற்றப்பட்ட இந்தக் கூந்தலை நினைத்துச் செயல்படுவாயாக!

ஓ! கிருஷ்ணா, பீமரும், அர்ஜுனரும் சமாதானத்திற்கு ஏங்கும் அளவிற்குத் தாழ்ந்தவர்கள் ஆனார்கள் என்றால், போர்க்குணமிக்கத் தனது மகன்களுடன் வயது முதிர்ந்த எனது தந்தை {துருபதர்} எனக்காகப் போர்க்களத்தில் பழி தீர்ப்பார். ஓ! மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, பெரும் சக்தி கொண்ட எனது ஐந்து மகன்களும் அபிமன்யுவைத் தங்கள் தலைமையில் கொண்டு, கௌரவர்களுடன் போரிடுவார்கள். துச்சாசனின் கரிய கைகள் அவனது உடலில் இருந்து அறுக்கப்பட்டு, அணுக்களாக நொறுங்காமல் என்னுடைய இதயத்துக்கு என்ன அமைதி கிடைக்கும்?

எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் போன்ற எனது கோபத்தை என் இதயத்தில் மறைத்துக் கொண்டு, நல்ல காலங்களை எதிர்பார்த்து, நீண்ட பதிமூன்று {13} வருடங்களை நான் கழித்திருக்கிறேன். இப்போதோ பீமரின் சொற்களெனும் கணைகளால் துளைக்கப்பட்ட எனது இதயம் உடையும் நிலையில் இருக்கிறது. ஏனெனில், பீமர் இப்போது அறநெறியின் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார்" என்றாள் {திரௌபதி}. கண்ணீரால் தடைபட்ட குரலுடன் இவ்வார்த்தைகளைச் சொன்ன நீண்ட கண்களையுடைய கிருஷ்ணை {திரௌபதி}, அதிரவைக்கும் விம்மல்களோடும், கண்ணத்தில் உருண்டோடும் கண்ணீரோடும் உரக்க அழத்தொடங்கினாள். திரண்டு உருண்ட இடையைக் கொண்ட அந்த மங்கை {திரௌபதி}, நெருப்பு நீர் போலச் சூடாகச் சிந்திய கண்ணீரால் தனது நெருக்கமான ஆழமான மார்பகத்தை நனைக்கத் தொடங்கினாள்.

வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, அவளுக்கு {திரௌபதிக்கு} ஆறுதல் தரும் வார்த்தைகளில் பேசினான். "ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, பாரதக் குலத்தின் மங்கையர், நீ அழுவதைப் போலவே அழுவதை, நீ விரைவில் காண்பாய். ஓ! மருட்சியுடையவளே {திரௌபதி}, உறவினர்களும், நண்பர்களும் கொல்லப்பட்ட நிலையில் அவர்கள் உன்னைப் போலவே அழுவார்கள். ஓ! மங்கையே {திரௌபதி}, நீ யாரிடம் கோபம் கொண்டிருக்கிறாயோ, அவர்களின் உறவினர்களும் வீரர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள் {என்று நினைத்துக் கொள்}. யுதிஷ்டிரரின் கட்டளையின் பேரிலும், பீமர், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்களுடனும், விதிக்கு ஏற்புடைய வகையில், படைப்பாளனால் விதிக்கப்பட்ட அனைத்தையும் நான் சாதிப்பேன்.

அவர்களுக்கான நேரம் வந்துவிட்டது. திருதராஷ்டிரரின் மகன்கள் எனது வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கவில்லையெனில், நாய்களுக்கும் நரிகளுக்கும் உணவாகும்படி, கீழே பூமியில் அவர்கள் விழுவது நிச்சயம். இமய மலைகள் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்ளலாம், பூமியானவள் தன்னை நூறு துண்டுகளாகப் பிளந்து கொள்ளலாம். கோடிக்கணக்கான நட்சத்திரங்களுடன் கூடிய வானம் விழுந்து போகலாம், ஆனால் எனது வார்த்தைகள் பொய்க்காது. உனது கண்ணீரை நிறுத்து. ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, தங்கள் எதிரிகளைக் கொன்று, செழிப்பால் மகுடம் சூட்டப்பட்டவர்களாக நீ உனது கணவர்களை விரைவில் காண்பாய் என்று நான் உனக்கு உறுதியளிக்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.


Friday, December 26, 2014

பகடைக்காயால் யுதிஷ்டிரனை அடித்த விராடன்! - விராட பர்வம் பகுதி 67

Yudhishthira was struck with dice by Virata! | Virata Parva - Section 67 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 42)






பதிவின் சுருக்கம் : திரிகார்த்தர்களை வீழ்த்திய பிறகு, விராடன் தனது நகருக்குத் திரும்புவது; உத்தரன் குருக்களை எதிர்த்துத் தனியாகச் சென்றிருப்பதை அறிந்து வருந்துவது; பிருஹந்நளன் உடன் சென்றிருந்ததால் வருந்த வேண்டாம் என்று கங்கராக இருக்கும் யுதிஷ்டிரன் விராடனிடம் சொல்வது; உத்தரன் வென்றான் என்ற செய்தியை விராடன் கேள்விப்பட்டு மகிழ்வது; கங்கரை விராடன் சூதாட அழைப்பது; சூதாடும்போது தனது மகன் உத்தரனை விராடன் புகழ்வது; பிருஹந்நளனே அதற்குக் காரணம் என்பது போலக் கங்கரான யுதிஷ்டிரன் சொல்வது; கோபமடையும் விராடன் யுதிஷ்டிரனைப் பகடைக் காய்களால் தாக்குவது; யுதிஷ்டிரனின் மூக்கில் இருந்து இரத்தம் வழிவது; அதைத் திரௌபதி பிடிப்பது;...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விரைவாகத் தனது செல்வத்தை மீட்ட விராடன், நான்கு பாண்டவர்களின் துணையோடு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், பெரும்படையுடனும் தனது நகரத்திற்குள் நுழைந்தான். போரில் திரிகார்த்தர்களை வீழ்த்தி, பசுக்களை மீட்ட அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {விராடன்}, பிருதையின் {குந்தியின்} மகன்களுடன்  சேர்ந்து பிரகாசமடைந்து, அழகில் ஒளிர்ந்தான். நண்பர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்துபவனான அந்த வீரமிக்க மன்னன் {விராடன்}, தனது அரியணையில் அமரந்ததும், அந்தணர்களின் தலைமையிலான அவனது குடிமக்கள் அவன் {விராடன்} முன் வந்து நின்றனர். அவர்களால் வழிபடப்பட்ட மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்}, தனது படையின் தலைமையில் நின்று, அந்த அந்தணர்களையும், குடிமக்களையும் பதிலுக்கு வணங்கி, அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தனுப்பினான். பெரிய படையைக் கொண்டவனான மத்ஸ்யர்கள் மன்னன் விராடன், உத்தரனைக் குறித்து விசாரிக்கும் வகையில், “உத்தரன் எங்கே சென்றிருக்கிறான்?” என்று கேட்டான்.


அரண்மனையில் இருந்த பெண்களும், கன்னிகைகளும், அந்தப்புரத்தில் வாழ்ந்த மற்ற மகளிரும், அவனிடம் {விராடனிடம்}, மகிழ்ச்சியுடன், “நமது பசுக்களைக் குருக்கள் {கௌரவர்கள்} கைப்பற்றினர். இதனால் கோபமுற்ற பூமிஞ்சயன் {உத்தரன்}, அந்தக் குரு {கௌரவப்} படையுடன் வந்திருக்கும் சந்தனுவின் மகன் பீஷ்மர், கிருபர், கர்ணன், துரியோதனன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகிய ஆறு பலமிக்கத் தேர்வீரர்களை வீழ்த்த எண்ணி, மிகுந்த துணிச்சலுடன், பிருஹந்நளையைத் துணைக்கழைத்துக் கொண்டு, தனியாகச் சென்றிருக்கிறான்” என்றனர்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஒரே தேருடன், பிருஹந்நளையைத் தனது தேரோட்டியாகக் கொண்டு, தனது வீர மகன் {உத்தரன்} சென்றிருப்பதைக் கேட்ட மன்னன் விராடன், துயரில் மூழ்கி, தனது தலைமை ஆலோசகர்களிடம் {அமைச்சர்களிடம்}, “திரிகார்த்தர்களின் தோல்வியை அறிந்த கௌரவர்களும், பூமியின் பிற தலைவர்களும் தங்கள் நிலையில் நிற்க மாட்டார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, திரிகார்த்தர்களால் காயங்கொள்ளாத எனது பிற வீரர்கள், இந்தப்பெரும்படையைத் துணைக்கழைத்துக் கொண்டு உத்தரனின் பாதுகாப்புக்காகச் செல்லட்டும்” என்றான் {விராடன்}.

இதைச் சொன்ன மன்னன் {விராடன்}, குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்களைத் தனது மகனுக்காக விரைந்து அனுப்பினான். பெரும்படைக்குச் சொந்தக்காரனான மத்ஸ்யர்கள் மன்னன் விராடன், இப்படியே, நால்வகைத் துருப்புகளைக் கொண்ட தனது படையின் பெரும்பிரிவை விரைந்து செல்ல கட்டளையிட்டான். இதைச் செய்த பிறகு, அவன் {விராடன்}, “இளவரசன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பதைத் தாமதிக்காமல் அறியுங்கள்! அலியைத் தேரோட்டியாகக் கொண்டு சென்றிருக்கும் ஒருவன் உயிரோடு இருக்க மாட்டான் என்றே நான் நினைக்கிறேன்” என்றான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், துன்பத்திலிருந்த மன்னன் விராடனிடம், சிரித்துக் கொண்டே, “ஓ! ஏகாதிபதி {விராடரே}, பிருஹந்நளன் அவனது {உத்தரனது} தேரோட்டியாகச் சென்றிருந்தால், உமது பசுக்களை எதிரியால் இன்று கைப்பற்ற இயலாது. அந்தத் தேரோட்டியால் பாதுகாக்கப்படும் உமது மகன், குருக்களுடன் கூடி வரும் பூமியின் அனைத்து தலைவர்களையும், ஏன், தேவர்களோ, அசுரர்களோ, சித்தர்களோ, யக்ஷர்களோ உண்மையில் வந்தால் கூட, அவர்களையும் போரில் வீழ்த்தவல்லவனாவான்”, என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அதே வேளையில், உத்தரனால் அனுப்பப்பட்ட, வேகமான பாதங்களைக் கொண்ட தூதர்கள், விராடனின் நகரத்தை அடைந்து, வெற்றிச் செய்தியைத் தந்தனர். பிறகு தலைமை அமைச்சர், பெரும் வெற்றி அடையப்பட்டதையும், உத்தரனின் வருகை ஆகிய அனைத்தையும் மன்னனிடம் {விராடனிடம்} தெரிவித்தார். அவர் {தலைமை அமைச்சர்}, “அனைத்துப் பசுக்களும் திரும்பக் கொண்டு வரப்பட்டன, குருக்கள் வீழ்த்தப்பட்டனர். எதிரிகளைக் கொல்பவனான உத்தரனும், அவனது தேரோட்டியும் {உடல்நலத்துடன்} நன்றாக இருக்கின்றனர்” என்றார். பிறகு யுதிஷ்டிரன் {மன்னன் விராடனிடம்}, “நற்பேறாலேயே, பசுக்கள் மீட்கப்பட்டு, குருக்கள் {கௌரவர்கள்} முறியடிக்கப்பட்டுள்ளனர். எனினும், பிருஹந்நளனைத் தேரோட்டியாகக் கொண்டவனுக்கு வெற்றி உறுதி என்பதால், உமது மகன் {உத்தரன்}, குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தியதை நான் வியப்பாகக் கருதவில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அளவிலா பலம் கொண்ட தனது மகன் {உத்தரன்} அடைந்த வெற்றியைக் கேட்ட மன்னன் விராடன், மயிர்சிலிர்க்கும் வண்ணம் மகிழ்ச்சியை அடைந்தான். தூதர்களுக்கு ஆடைகளைப் பரிசாக வழங்கிய பிறகு, அவன் தனது அமைச்சர்களிடம், “நெடுஞ்சாலைகள் {ராஜபாட்டைகள்} கொடிகளால் அலங்கரிக்கப்படட்டும், மலர்க்காணிக்கைகளால் அனைத்து தேவர்களும், தேவிகளும் வழிபடப்படட்டும். இளவரசர்களும், துணிவுமிக்க வீரர்களும், இசைக்கலைஞர்களும், கணிகையரும் {பொதுமகள் = வேசி = harlots} வெளியே அணிவகுத்து எனது மகனை வரவேற்கட்டும். கிங்கரர்கள் {மணியாட்டிகள் – bellmen}, மதங்கொண்ட யானைகளில் விரைந்து சென்று, நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் எனது வெற்றியை அறிவிக்கட்டும். கன்னியராலும், துதிபாடுவோராலும் சூழப்பட்டு, அழகான ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட {எனது மகள்} உத்தரையும், எனது மகனை {உத்தரனை} எதிர்கொண்டழைக்கச் செல்லட்டும்” என்றான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}  தொடர்ந்தார், “மன்னனின் இச்சொற்களைக் கேட்ட குடிமக்கள் அனைவரும், தங்கள் கைகளில் மங்கலகரமான பொருட்களுடன் சென்றார்கள். அவர்களில் பலர் கைத்தாளங்களுடனும் {வெண்கலத்தாளம்}, பூரிகைகளுடனும், சங்குகளுடனும் சென்றார்கள். அழகான ஆடைகள் உடுத்திய அழகிய பெண்டிரும், துதிபாடுவோரும், புனித பாடல்களைப் பாடுவோரும், முகமன் கூறுவோரும் {encomiasts}, பாணபத்திரரும் {minstrels}, பேரிகையிசைப்பவர்களும், இன்னும் பிறவகை இசைக்கலைஞர்களும் அளவிலா பராக்கிரமம் கொண்ட உத்தரனை வரவேற்பதற்காக, வலிமைமிக்க விராடனின் நகரத்தில் இருந்து வெளியே வந்தனர். துருப்புகளையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கன்னியரையும், கணிகையரையும் {வேசிகளையும்} அனுப்பிய பிறகு, விவேகம் நிறைந்த மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} மகிழ்ச்சியுடன், “ஓ! சைரந்திரி {மாலினி}, பகடையைக் கொண்டு வா. ஓ! கங்கரே, ஆட்டம் ஆரம்பமாகட்டும்” என்றான். அதற்குப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, “மகிழ்ச்சி நிறைந்த இதயம் கொண்டவன், தந்திரமான ஒரு சூதாடியுடன் விளையாடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளதை நாம் கேள்விப்படுகிறோம். எனவே, மகிழ்ச்சியாக இருக்கும் உம்முடன் நான் சூதாடத் துணிய மாட்டேன். எப்போதும் நான் உமக்கு நன்மையே செய்ய விரும்புகிறேன். எனினும், உமக்கு விருப்பமுண்டானால் விளையாட்டு ஆரம்பிக்கட்டும்” என்றான்.

அதற்கு விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “நான் சூதாடாவிட்டாலும், எனது அடிமைப்பெண்கள், பசுக்கள், தங்கம், மற்றும் நான் கொண்டுள்ள அனைத்துச் செல்வங்கள் ஆகிய இவை யாவற்றையும் உம்மால் இன்று காக்க முடியாது” என்றான். அதற்குக் கங்கன் {யுதிஷ்டிரன் விராடனிடம்}, “ஓ! ஏகாதபதி, ஓ! வெகுமதிகள் அளிப்பவரே {விராடரே}, எண்ணற்ற தீமைகள் நிறைந்த சூதாட்டத்தால் உமக்கு என்ன பயன்? சூதாட்டம் பல தீமைகளைக் கொண்டது; எனவே, அதை விலக்க வேண்டும். பாண்டுவின் மகனான யுதிஷ்டிரரை நீர் பார்த்திருக்கலாம், அல்லது {அவரைக் குறித்துக்} கேட்டிருக்கலாம். அவர், தனது விரிந்த செழிப்பான நாட்டையும், தேவர்களைப் போன்ற தம்பிகளையும் பகடையால் இழந்தார். இதற்காகவே, நான் சூதாடத் தயங்குகிறேன். ஆனால் நீர் விரும்பினால், ஓ! மன்னா {விராடரே}, நான் விளையாடுவேன்” என்று பதிலளித்தான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விளையாட்டு நடந்து கொண்டிருந்த போது, மத்ஸ்யன் {விராடன்}, அந்தப் பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “பாரும், பெரும் வல்லமை கொண்ட கௌரவர்களை எனது மகன் {உத்தரன்} போரில் வீழ்த்திவிட்டான்” என்றான். அதற்குச் சிறப்புமிக்க மன்னனான யுதிஷ்டிரன் {விராடனிடம்}, “பிருஹந்நளனைத் தேரோட்டியாகக் கொண்ட அவன் {உத்தரன்} ஏன் வெல்லமாட்டான்?” என்று கேட்டான்.

இப்படிச் சொல்லப்பட்டதும், மிகுந்த கோபம் கொண்ட மத்ஸ்ய மன்னன் {விராடன்}, பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தணர்களில் இழிந்தவனே, அலியோடு எனது மகனை ஒப்பிடுகிறாயா? ஒருவரிடம் எதைச் சொல்வது சரி, எது சரியன்று என்ற அறிவு உனக்கில்லையா? நீ என்னை அவமதிக்கிறாய் என்பதில் ஐயமில்லை. பீஷ்மரையும், துரோணரையும் தலைவர்களாகக் கொண்ட அவர்களை {கௌரவர்களை} எனது மகன் ஏன் வீழ்த்த முடியாது? ஓ! பிராமணா {கங்கா}, நட்பால் மட்டுமே, நான் உனது இக்குற்றத்தை மன்னிக்கிறேன். எனினும், நீ வாழ விரும்பினால் {உயிரோடிருக்க விரும்பினால்} மீண்டும் அவ்வாறு சொல்லாதே” என்றான் {விராடன்}.

யுதிஷ்டிரன் {விராடனிடம்},  “பீஷ்மர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விகர்த்தனன் மகன் {கர்ணன்}, கிருபர், மன்னர் துரியோதனன் மற்றும் பிற பலமிக்க அரசர்களான தேர்வீர்கள் கூடியிருந்தாலும், மருதர்களால் சூழப்பட்ட இந்திரனே கூட இருந்தாலும், அவர்கள் அனைவரிடமும் மோதிப் போரிட பிருஹந்நளனைத் தவிர வேறு எந்த மனிதனால் முடியும்? கரங்களின் வலிமையில் அவனுக்கு நிகர் யாரும் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதுமில்லை! உண்மையில், ஒரு பயங்கரப் போரைப் பார்க்கும்போதும் பிருஹந்நளனின் இதயமே மகிழ்ச்சியில் நிறையும். தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் கூடி வந்த போதும் அவனே அவர்களை வீழ்த்தியிருக்கிறான். அப்படிப் பட்ட ஒருவனைக் கூட்டாளியாகக் கொண்டிருப்பவனான உமது மகன் {உத்தரன்}, ஏன் எதிரியை வெல்லக் கூடாது?” என்றான். அதற்கு விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “மீண்டும் மீண்டும் தடுத்தும் நீ உனது நாவை அடக்க மறுக்கிறாய். தண்டிக்க எவரும் இல்லையாயின், யாரும் அறம் பயிலமாட்டார்கள்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன மன்னன் {விராடன்}, கோபத்தால் எரிந்து, பகடைக் காயால் யுதிஷ்டிரனை வலிந்து அடித்து, அவனை நிந்தித்தபடி, “இது மீண்டும் நடவாதிருக்கட்டும்!” என்றான். இப்படிக் கடுமையாகத் தாக்கப்பட்டதால், அவனது {யுதிஷ்டிரனின்} மூக்கில் இருந்து இரத்தம் வழியத் தொடங்கியது. ஆனால், அது தரையில் விழும் முன்னரே குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அதைத் தனது கைகளில் பிடித்தான். பிறகு தன்னருகே நின்று கொண்டிருந்த திரௌபதியை அறம் சார்ந்த அந்த யுதிஷ்டிரன் பார்த்தான். தனது தலைவனின் விருப்பங்களுக்கு எப்போதும் கீழ்ப்படிபவளான களங்கமற்ற திரௌபதி, {அந்தப் பார்வையின்} பொருளை உணர்ந்து, நீர் நிறைந்த ஒரு தங்கப் பாத்திரத்தைக் கொண்டுவந்து, அவனது {யுதிஷ்டரனின்} மூக்கில் இருந்து வழிந்த இரத்ததைப் பிடித்தாள் [1].

[1] மெலிதான மேலாடையால் இரத்ததை ஏந்தி, தங்கப் பாத்திரத்தில் அதைப் பிழிந்தாள் என்றும், அப்போது திரௌபதி விராடனிடம், கங்கரின் இரத்தம் எத்தனை துளிகள் தரையில் விழுகின்றனவோ, அத்தனை வருடங்கள் அவனது நாட்டில் மழையில்லாமல் போய்விடும் என்பதால்தான் தான் அந்த இரத்தத்தைப் பிடிப்பதாகச் சொல்வதாகவும் வேறு பதிப்புச் சொல்கிறது.

அதே வேளையில், பலவிதமான இனிய நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் ஊக்கப்படுத்தப்பட்ட உத்தரன், குடிமக்களாலும், பெண்களாலும், மாகாணங்களின் மக்களாலும் வரவேற்கப்பட்டு, மெதுவாக நகரத்திற்குள் நுழைந்தான். அரண்மனையின் வாயிலை அடைந்த அவன் {உத்தரன்}, தனது வருகையைக் குறித்துத் தனது தந்தைக்கு {மன்னன் விராடனுக்குச்} செய்தி அனுப்பினான். பிறகு மன்னனை அணுகிய சுமைதூக்கி {porter} {வாயில் காப்போன் = gatekeeper} ஒருவன், “பிருஹந்நளையைத் துணையாகக் கொண்ட உமது மகன் உத்தரன் வாயிலில் காத்திருக்கிறான்” என்றான். மத்ஸ்ய மன்னன் {விராடன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனிடம், “நான் அவர்களைக் காண ஆவலுடன் இருப்பதால், அவர்கள் இருவரையும் இங்கே வரவேற்று அழைத்துவா” என்றான்.

பிறகு, குருக்களின் மன்னனான யுதிஷ்டிரன், {அந்தப்} பாதுகாவலனின் காதுக்கருகில் மெதுவாக, “உத்தரன் மட்டும் உள்ளே வரட்டும். பிருஹந்நளன் உள்ளே வரக்கூடாது. போரிலின்றி வேறு நேரத்தில் எவன் என் மேனியில் காயமேற்படுத்தவோ, இரத்தம் சிந்தவோ செய்கிறானோ, அவன் உயிருடன் இருக்க மாட்டான் என்பது அந்த வலிய கரங்கள் கொண்ட வீரன் {பிருஹந்நளன்} ஏற்றிருக்கும் நோன்பாகும். {இதைக் கண்டால்} ஆத்திரத்தில் அழற்சியுறும் அவன், நான் இரத்தம் சிந்துவதைப் பார்க்கப் பொறாமல் {பொறுக்க முடியாமல்}, ஆலோசகர்கள், துருப்புகள், குதிரைகளுடன் சேர்த்து விராடரையும் இப்போதே கொன்று விடுவான்” என்றான் {யுதிஷ்டிரன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Wednesday, December 03, 2014

பிருஹந்நளை தேரோட்டலாமே! - விராட பர்வம் பகுதி 36

Vrihannala can drive your car! | Virata Parva - Section 36 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 11)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : ஒரு தேரோட்டி மட்டும் இருந்தால் நான் கௌரவர்களை விரட்டி விட்டுப் பசுக்களை மீட்டு விடுவேன் என்று உத்தரன் பெண்களுக்கு மத்தியில் தற்பெருமை பேசுவது; இதைக் கேட்ட அர்ஜுனன் திரௌபதியிடம் சொல்லி உத்தரன் தன்னைத் தேரோட்டியாக அமர்த்த ஆவன செய்யுமாறு பணித்தது; திரௌபதி உத்தரையிடம் சென்று பிருஹந்நளன் குறித்துச் சொன்னது…

உத்தரன் சொன்னான், “குதிரைகளின் மேலாண்மையில் திறனுடைய ஒரு தேரோட்டி வந்தால், வில்லைப் பயன்படுத்துவதில் உறுதியுடன் இருக்கும் நான், பசுக்களின் பாதையைத் தொடர்ந்து இன்றே புறப்படுவேன். எனினும், எனக்குத் தேரோட்டியாக இருக்கத்தக்க மனிதனை நான் அறியவில்லை. எனவே, காலந்தாழ்த்தாமல், புறப்படத் தயாராக இருக்கும் எனக்கு ஒரு தேரோட்டியைத் தேடுங்கள். ஒரு மாதம் முழுமையோ அல்லது இருபத்தெட்டு இரவுகளோ {நாட்களோ} நாளுக்கு நாள் {தினமும்} தொடர்ச்சியாக நடந்த பெரும்போரில், எனது தேரோட்டி கொல்லப்பட்டான். குதிரைகளின் மேலாண்மையை அறிந்த மற்றொரு மனிதன் கிடைத்தவுடன், எனது கொடியை உயர ஏற்றி, உடனே புறப்படுவேன். பிறகு, யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த எதிரிப்படைக்கு மத்தியில் ஊடுருவி, ஆயுத வலிமையில் அற்பர்களும், பலவீனர்களுமான குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தி, பசுக்களை நான் மீட்டு வருவேன்.


தானவர்களை அச்சுறுத்தும் இரண்டாவது வஜ்ரதாங்கியைப் {இந்திரனைப்} போல, துரியோதனன், பீஷ்மர், கர்ணன், கிருபர், துரோணர் மற்றும் அவரது மகன்  {அஸ்வத்தாமன்}ஆகியோரையும், அங்கே கூடியிருக்கும் வலிய வில்லாளிகளையும் போரில் அச்சுறுத்தி, இக்கணத்திலேயே நான் பசுக்களை மீட்டு வருவேன். (எதிர்க்க) யாருமற்றதாலேயே, குருக்கள் {கௌரவர்கள்} பசுக்களைக் கவர்ந்து செல்கின்றனர். நான் அங்கில்லாத போது, என்னால் என்ன செய்ய முடியும்? ஒன்றுகூடி வந்திருக்கும் குருக்கள் {கௌரவர்கள்} எனது பராக்கிரமத்தை இன்று சாட்சியாகக் காண்பார்கள். “நம்மை எதிர்ப்பது அர்ஜுனனா?” என்று அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள்” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அனைத்தையும் அறிந்த அர்ஜுனன், இளவரசனால் {உத்தரனால்} பேச்சப்பட்ட வார்த்தைகளைக் கேட்டான். பிறகு, சிறிது நேரம் கழித்து, துருபதன் மகளும், பாஞ்சால இளவரசியும், களங்கமற்ற அழகு கொண்டவளும், கொடியால் செய்யப்பட்டவளும், நெருப்பில் உதித்தவளும், உண்மை, நேர்மை ஆகிய அறங்களைக் கொண்டு, தனது கணவர்களின் நன்மையில் எப்போதும் கவனமுள்ளவளும், தனது அன்பிற்குரிய மனைவியுமான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} தனிமையில் பேசினான் {அர்ஜுனன்}. வீரனான அந்த அர்ஜுனன் {திரௌபதியிடம்}, “ஓ! அழகியே {திரௌபதி}, எனது வேண்டுதலின் படி உத்தரனிடம் தாமதமில்லாமல் சென்று, “திறமையும் உறுதியும் கொண்ட இந்தப் பிருஹந்நளன், பாண்டு மகனின் {அர்ஜுனனுடைய} தேரோட்டியாக இருந்தான். பல போர்களில் பங்குபெற்ற அவன் {பிருஹந்நளன்} உனது தேரோட்டியாகட்டும்” என்று சொல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மகளிருக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் இளவரசன் {உத்தரன்} சொல்லிக் கொண்டிருந்த சொற்களைக் கேட்ட பாஞ்சாலியால் {திரௌபதியால்}, {அச்சொற்களில் இருந்த} பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} குறித்த மறைமுகக் குறிப்புகளை அமைதியாகத் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாணத்துடன் பெண்கள் மத்தியில் இருந்து வெளியேறிய அப்பாவியான அந்தப் பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அவனிடம் {உத்தரனிடம்} இச்சொற்களை மெதுவாகப் பேசினாள். “வலிமைமிக்க யானைப் போன்றவரும், பிருஹந்நளன் என்ற பெயரில் அறியப்படுபவருமான அந்த அழகிய இளைஞர், முன்னர் அர்ஜுனருக்குத் தேரோட்டியாக இருந்தார். அந்தச் சிறப்புமிக்க வீரரின் {அர்ஜுனரின்} சீடரும், வில்லைப்பயன்படுத்துபவர்களில் யாருக்கும் சளைக்காதவருமான அவரை, நான் பாண்டவர்களுடன் வாழ்ந்து வந்த போதே அறிவேன். அக்னியால் காண்டவ வனம் எரிக்கப்பட்ட போது, அர்ஜுனருடைய அற்புதமான குதிரைகளின் கடிவாளத்தை இவரே பிடித்திருந்தார். இவரைத் தேரோட்டியாகக் கொண்ட பார்த்தர், காண்டவப்பிரஸ்தத்தின் அனைத்து உயிரினங்களையும் வீழ்த்தினார். உண்மையில், அவருக்கு {பிருஹந்நளனுக்கு} நிகரான தேரோட்டி வேறு ஒருவருமில்லை” என்றாள் {திரௌபதி}.

உத்தரன் {திரௌபதியிடம்}, “ஓ! சைரந்திரி, இந்த இளைஞனை நீ அறிவாயா? இந்த அலியால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை நீ அறிந்திருக்கிறாய். எனினும், ஓ! அருளப்பட்டவளே {மாலினி}, என் குதிரைகளின் கடிவாளத்தைப் பிடிக்குமாறு நானே பிருஹந்நளையிடம் கோர முடியாது” என்றான்.

அதற்குத் திரௌபதி {உத்தரனிடம்}, “ஓ! வீரரே, அழகிய இடைகள் கொண்ட காரிகையான உனது தங்கையின் {உத்தரையின்} சொற்களுக்குப் பிருஹந்நளன் கீழ்ப்படிவார் என்பதில் ஐயமில்லை. அவர் {பிருஹந்நளன்} உனக்குத் தேரோட்டியாக இருக்கச் சம்மதித்தால், நீ குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தி, பசுக்களை மீட்டுத் திரும்புவாய் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்காது” என்றாள் {திரௌபதி}.

சைரந்திரியால் இப்படிச் சொல்லப்பட்ட உத்தரன், தனது தங்கையிடம் {உத்தரையிடம்}, “ஓ! களங்கமற்ற அழகுடையவளே {உத்தரை}, நீயே சென்று பிருஹந்நளையை இங்கே அழைத்து வருவாயா?” என்று கேட்டான். தனது அண்ணனால் அனுப்பப்பட்ட அவள் {உத்தரை}, வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மாறுவேடத்தில் தங்கியிருந்த ஆடற்கூடத்திற்கு விரைந்து சென்றாள்.” {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்