Yudhishthira repaired to the Pandava camp! | Karna-Parva-Section-63 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கணைகளால் சிதைக்கப்பட்டுப் பாண்டவப் பாசறையை நோக்கி சென்று கொண்டிருந்த யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்று தாக்கிய கர்ணன்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்று, அவனது தலைப்பாகையையும் வீழ்த்திய கர்ணன்; சகாதேவனின் தேரில் ஏறிக்கொண்ட நகுலனும், யுதிஷ்டிரனும்; யுதிஷ்டிரனைவிட்டு அர்ஜுனனைத் தாக்குமாறு கர்ணனிடம் சொன்ன சல்லியன்; யுதிஷ்டிரனையே தொடர்ந்து தாக்கிய கர்ணன்; பீமனிடம் துரியோதனன் சிக்கியிருப்பதைக் கர்ணனுக்கு உணர்த்திய சல்லியன்; யுதிஷ்டிரனை விட்டகன்று பீமனிடம் சென்ற கர்ணன்; யுதிஷ்டிரனைப் பாசறையில் விட்டுவிட்டுப் பீமனிடம் திரும்பிய நகுலனும், சகாதேவனும்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் கர்ணன், தன் முன்னே நின்றவர்களும் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தக் கைகேயர்களைத் தன் கணைமாரிகளால் பீடிக்கத் தொடங்கினான்.(1) உண்மையில், அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன்னை அந்தப் போரில் தடுத்துக் கொண்டிருந்த அந்தப் போர்வீரர்களில் ஐநூறு பேரை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(1) அந்தப் போரில் தடுக்கப்பட முடியாதவனாக இருக்கும் ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்ட அந்தப் போர்வீரர்கள், தங்களைத் தாக்குபவனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, பீமசேனனின் முன்னிலையை வந்தடைந்தனர்.(3) அந்தத் தேர்ப்படையைத் தன் கணைகளால் பல பகுதிகளாகப் பிளந்த கர்ணன், ஒரே தேரில் தனியொருவனாகச் சென்று, கணைகளால் அதிகம் சிதைக்கப்பட்டவனும், கிட்டத்தட்ட உணர்வை இழந்திருந்தவனும், தன் இரு பக்கங்களிலும் நகுலன் மற்றும் சகாதேவனை நிறுத்திக் கொண்டு பாண்டவப் பாசறையை அடைவதற்காக மெதுவாகச் சென்று கொண்டிருந்தவனுமான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்தான்.(4,5)


















